திருக்கோணேஸ்வரர் கோயில் வளாகத்தில் ரேடார் அமைப்பை நிறுவும் நோக்கமில்லை; விமானப் படை தெரிவிப்பு

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் கோயில் வளாகத்தில் இலங்கை விமானப்படை ரேடார் அமைப்பொன்றை நிறுவும் எந்த நோக்கமும் இல்லையென விமானப் படை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை விமானப்படை ஊடகப் பணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில்,
திருகோணமலை வரலாற்று சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரர் கோயில் வளாகத்திற்குள் ரேடார் அமைப்புகளை நிறுவுவதற்காக இலங்கை விமானப்படை நிலம் கோரியுள்ளது என சில பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்களில் வெளியிடப்பட்ட செய்திகள் விமானப் படையின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தச் செய்தி தொடர்பாக விமானப்படையின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டையும் உண்மைகளையும் நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
திருக்கோணேஸ்வரர் கோயில் வளாகத்திற்கு உள்ளேயோ அல்லது அதைச் சுற்றியோ எந்தவொரு ரேடார் அமைப்பையும் நிறுவ இலங்கை விமானப்படைக்கு எந்தத் திட்டமும் இல்லை. அந்த நோக்கத்திற்காக எந்த நிலத்தையும் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இலங்கை விமானப்படைக்கு இல்லை என்பதையும் நாங்கள் உறுதிப்படுத்துகிறோம் .
இலங்கை விமானப்படையானது எப்போதும் நாட்டின் வரலாற்று மற்றும் அனைத்து சமயத் தலங்களின் புனிதத்தையும் பாரம்பரியத்தையும் மதிக்கும் ஒரு நிறுவனமாக இருந்து வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பில் அபிவிருத்திப் பணிகளையோ அல்லது இராணுவ நிறுவுதல்களையோ மேற்கொள்ளும் நோக்கம் விமானப்படைக்கு இல்லை.
மேலும், எந்தவொரு அதிகாரப்பூர்வ விசாரணையுமின்றி வெளியாகும் இதுபோன்ற செய்திகள் அப்பகுதி மக்களிடையே தேவையற்ற அமைதியின்மையை ஏற்படுத்துவதோடு, விமானப்படை மீது ஒரு தவறான மனப்பான்மையையும் உருவாக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
![]()