அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு கோரி யாழ். நெடுந்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று நெடுந்தீவு மாவலித்துறையில் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
கடந்த பல தசாப்த காலமாக நெடுந்தீவில் காணப்படும் குடிநீர் பிரச்சினை, போக்குவரத்து பிரச்சினை, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் மக்கள் பல இன்னல்களை அனுபவித்த வருகின்றனர்.
மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் வரலாற்று பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக காணப்படும் நெடுந்தீவில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதாக குறிப்பிட்டு வருகின்ற போதிலும் இதுவரையும் எவ்வித நடவடிக்கைகளையும் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கவில்லை.
குறிப்பாக தற்போது கடற்போக்குவரத்தில் ஈடுபடும் நெடுந்தாரகை படகில் நூறு பேரை மாத்திரமே ஏற்றிச்செல்லும் நிலை காணப்படுகிறது. அதிலும் எண்பது பேர் அரச உத்தியோகத்தர்களாக இருப்பதனால் பொதுமக்கள் இருபது பேரை மாத்திரமே ஏற்றச் செல்லமுடிகிறது இதனால் அவசர தேவை கொண்ட பொதுமக்கள் பயணிக்க முடியாது புறக்கணிக்கப்படும் நிலை தொடர்ந்து காணப்படுகிறது.
இந்தப் போராட்டத்தில் பிள்ளைகளுக்கான கல்வி வேண்டும், சாறாப்பிட்டி நன்னீரை தாரை வார்க்காதே!, வரிசை யுகம் எப்போது முடியும், சுத்தமான குடிநீர் வேண்டும், நெடுந்தாரகைக்குள் வதைக்காதே மனிதர்களாய் நடத்து உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கறுப்பு துணிகளை கட்டியும் உழவு இயந்திரத்தில் கேலிச்சித்திரங்களை உருவாக்கியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மாவலித்துறை இறங்குதுறையில் இருந்து நெடுந்தீவு பிரதேச செயலகம் வரை மக்கள் பேரணியாக சென்ற போராட்டகாரர்கள் பிரதேச செயலரிடம் ஜனாதிபதி, ஆளுநர், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கான மகஜர்களைக் கையளித்தனர்.
![]()