லண்டனில் உள்ள பொலிஸ் பாயிஸுக்கு பிடியாணை; பிள்ளையான் உட்பட 3 பேருக்கு 24 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று திங்கட்கிழமை காணொளி ஊடாக உத்தரவிட்டதுடன் லண்டனில் உள்ள பொலிஸ் பாயிஸுக்கு பிடியாணை பிறப்பித்தும் கட்டளையிட்டார்.
2008 ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை, ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொலை, வர்த்தகர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புபட்ட ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை கடந்த கடந்த 2025 நவம்பர் மாதம் சி.ஐ.டி.யினர் கைது செய்தனர்.
இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான லண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த பாய்ஸ், உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த ஜூன் 17 ஆம் திகதி சி.ஐ.டி.யினர் வழக்கு தாக்கல் செய்ததையத்து அவர்களை ஜூன் 30 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றைய தினம் நீதிமன்றில் பிள்ளையான் உட்பட்ட 3 பேரையும் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
இதனையடுத்து 3 பேரும் தொடர் விளக்கமறியலில் இருந்து வருகின்ற நிலையில் நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்;பு நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்காக நீதவான் எடுத்துக் கொண்டபோது சந்தேக நபரான இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளியான முகமட் சிபானை , மட்டும் ஆஜர்படுத்திய சி.ஐ.டி.யினர் பிள்ளையான் மற்றும் சந்தேகநபர் ஆகிய இருவரையும் பாதுகாப்பு காரணமாக நீதிமன்றிற்கு அழைத்துவர முடியாதது தொடர்பாக நீதிமன்றிற்கு தெரிவித்தனர்
இதனை ஆராய்ந்த நீதவான் பிள்ளையான் மற்றைய சந்தேகநபர் ஆகிய இருவரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைகளில் (சூம்) இணைய வழி காணொளி ஊடாக பார்வையிட்டு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் பொலிஸ் பாய்ஸுக்கு பிடியாணை பிறப்பித்தும் கட்டளையிட்டு உத்தரவு பிறப்பித்தார்
![]()