பலதும் பத்தும்

மரண பயத்தில் திக் திக் பயணம்

வடகொரியாவின் கடுமையான சட்டங்களுக்குப் பயந்து, அங்கிருந்து ஒரு குடும்பமே தப்பி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியச் சகோதரர்கள் இருவர், தங்களின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு படகு மூலம் தென்கொரியாவிற்கு வந்து சேர்ந்துள்ளனர். அந்த அனுபவம் குறித்து கிம் இல் கியோக் கூறியதாவது:
கிம் இல் கியோக் மற்றும் கிம் யி கியோக் ஆகிய சகோதரர்களின் குடும்பத்தினர், வடகொரியாவிலிருந்து படகு மூலம் தப்பித்துச் செல்ல முடிவு செய்தனர். இந்தத் திட்டத்தைப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே இச்சகோதரர்களின் தந்தை தொடங்கிய நிலையில், அவர் தப்பித்துச் செல்வதற்கு முன்பே காலமாகிவிட்டார். தந்தையின் கனவை நிறைவேற்ற, மூத்த சகோதரர் கிம் இல் கியோக் மீன் பிடிக்கக் கற்றுக்கொண்டு, சொந்தமாகப் படகு ஒன்றையும் வாங்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி, உள்ளூர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அவர்களோடு நட்பாகப் பழகித் தங்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு மே 6-ம் தேதி புயல் வீசியபோது, குடும்பத்தில் உள்ள ஒன்பது பேரும் படகில் தப்பித்துச் செல்லத் தயாராகினர். இரவில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் என்பதாலும், புயல் நேரத்தில் ரேடாரில் சிக்காமல் தப்பிக்க முடியும் என்பதாலுமே அவர்கள் அந்நாளைத் தேர்ந்தெடுத்தனர்.

கிம் இல் கியோக்கின் மனைவி அப்போது ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்தார். மேலும், குழந்தைகளைச் சாக்கு மூட்டையில் கட்டி மறைத்தபடி படகில் ஏற்றியிருக்கிறார்கள். “யாரும் சத்தம் போடக் கூடாது” என்று சிறுவர்களிடம் முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

கிம் சகோதரர்கள் தங்களது தந்தையின் அஸ்தியையும் கையோடு எடுத்துச் சென்றனர். எல்லைக் காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டுப் புறப்பட்ட அவர்கள், ஏற்கனவே திட்டமிட்ட வழியில் மீனவர்களைப் போலப் படகில் சென்று தென்கொரியாவுக்குள் நுழைந்தனர். “அந்த நிமிடம் மிகவும் திகிலாகவும், வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒன்றாகவும் இருந்தது,” என்று அக்குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தப்பிச் சென்ற ஒன்றரை வருடத்திலேயே இளைய சகோதரர் கிம் யி கியோக் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தற்போது மூத்த சகோதரர் கிம் இல் கியோக், தென்கொரியாவில் சமையல்காரராகப் பயிற்சி பெற்று வருகிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *