இலங்கை

தாஜுதினின் கொலையில் சாட்சிகளை மூடி மறைத்தவர்கள் ராஜபக்‌ஷ ஆட்சியுடன் கொடுக்கல் வாங்கல் செய்தோர் இந்த அரசில்!

ரகர் வீரர் வசீம் தாஜுதின் கொலையுடன் தொடர்புடைய சாட்சியங்களையும் மற்றும் தகவல்களையும் மூடி மறைத்தவர்கள் தற்போதைய அரசாங்கத்தில் ஆலோசகர்களாக இருக்கின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நச்சு போதைப் பொருட்களை ஒழித்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுத்தல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த விவாதத்தில் உரையாற்றிய முஜிபுர் ரஹ்மான் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

நீதிமன்றங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புமாறு நாங்கள் எதிர்க்கட்சியாக தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றோம். கூடிய விரைவில் அதற்கான நியமனங்களை மேற்கொள்ளுங்கள். இல்லையென்றால் இது தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதுடன், நீதித்துறை சுயாதீனம் தொடர்பிலும் பிரச்சினைகள் ஏற்படலாம். இதனாலேயே அதற்கான நியமனங்களை மேற்கொள்ளுமாறு நாங்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கின்றோம்.

இதேவேளை போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையுடன் புனர்வாழ்வளிப்பதும் முக்கியமாகும். தலங்கமவில் இருந்த ஆண்களுக்கான புனர்வாழ்வு நிலையம் இப்போது இல்லை. 35 வயதுக்கும் குறைவானவர்களுக்கே இங்கு புனர்வாழ்வு நிலையம் இருந்தது. ஆனால் இப்போது அவர்கள் கண்டி போன்ற தூர இடங்களுக்கு செல்ல நேரிடுகின்றது. இதனால் தலங்கமவில் அந்த பிரிவை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம். கொழும்பு மாவட்டத்திற்கு இது முக்கியமானது.

அத்துடன் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது லசந்த, தாஜுதின், பிரகீத் எக்னலிகொட உள்ளிட்டோரின் கொலைகள் மற்றும் கடத்தல்கள் தொடர்பில் கூறியிருந்தார். இதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு நாங்கள் எதிர்ப்பதில்லை. நல்லாட்சி அரசாங்க காலத்தில் தொடரப்பட்ட வழக்குகளே இப்போது தொடர்கின்றது. இதற்கு எதிர்க்கட்சியில் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால் அவ்வாறு எதிர்ப்பவர்கள் யார் என்பதனை அவர் கூற வேண்டும். அதேபோன்று ஷானி மற்றும் ரவிக்கும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இங்கு அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யார் என்பதனை ஜனாதிபதியே கூற வேண்டும். ஏன் அதனை கூறாமல் இருக்கின்றீர்கள். உங்களின் பழைய நண்பர்களா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதனாலா நீங்கள் அவர்கள் யார் என்று கூறாமல் இருக்கின்றீர்கள்.

தாஜுதினின் கொலையில் சாட்சிகளை மூடி மறைத்தவர்கள், தகவல்களை மூடி மறைத்தவர்கள் அன்று ராஜபக்‌ஷ ஆட்சியுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டவர்கள் உங்களுடைய அரசாங்கத்தில் ஆலோசர்களாக இருக்கின்றனர். அவர்களிடமே ஜனாதிபதி கேட்க வேண்டும். அவர்கள் அன்று ராஜபக்‌ஷக்களுடன் இருந்தனர். ஜனாதிபதிக்கு இந்த விடயத்தில் எதிர்பார்ப்புகள் இருந்தாலும் உங்களின் அரசாங்கத்தில் ஒவ்வொரு இடங்களில் ஆலோசகர்களாக இருக்கின்றனர். இந்த கொலைகள் முடி மறைக்கப்பட்டுவிடக்கூடாது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button