கட்டுரைகள்
இஸ்ரேல் பிரதமர் போர் குற்றவாளி் ! சர்வதேச நீதிமன்றால் கைதாக சாத்தியமா? …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.
(அமெரிக்கா தனது நட்பு நடான இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்ய சர்வதேச நீதிமன்றத்தினால் (International Court of Justice) பிடியாணை பிறப்பிக்கப்படவிருப்பது தொடர்பில் எதிர்ப்பை தெரிவித்துள்ளது)
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) போர் குற்றத்தின் காரணமாக விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் இதனை அமெரிக்கா தடுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அத்தோடு, பாலஸ்தீனம் உடனான போரில் அதிகமான சட்டவிதி மீறல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், இவ்வாறானதொரு போருக்கே அவசியம் இல்லை என்றும் சர்வதேச நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 34 000 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் அதில், பெண்களும், குழந்தைகளுமே அதிகமாக உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவும் வீட்டோவும் :
போரை நிறுத்ததை கோரி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் (United Nations Security Council, UNSC) பாலஸ்தீன ஆதரவு நாடுகளின் தீர்மானங்களை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ரத்து செய்து வருகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில், தனது நட்பு நடான இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்ய சர்வதேச நீதிமன்றத்தினால் (International Court of Justice) பிடியாணை பிறப்பிக்கப்படவிருப்பது தொடர்பில் அமெரிக்கா எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
நெதன்யாகுவை கைது செய்ய திட்டம்?
இஸ்ரேல் தொடரும் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் எனவே இதனை சர்வதேச நீதிமன்றம் போர்க்குற்றம் பற்றி விசாரிக்க முடியும் என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஆயினும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனவும், போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் தென்ஆப்பிரிக்கா விடுத்த கோரிக்கை குறித்து சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், இனப்படுகொலை குற்றச்சாட்டு தவறானது என தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தங்களது தரப்பு நியாயத்தை ஏற்க மறுத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் குற்றத்தின் காரணமாக விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகுறது.
ஐநா பணியாளர்கள் கொலை:
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் ஐநா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல், வான்வழி தாக்குதல் நடத்தியதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். எனவே, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்தத் தொடங்கின.
இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
ஆனால், இஸ்ரேல் அதனை நிராகரித்து வந்ததது. இதுவரை போரில் 34 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், காசாவுக்கு நிவாரண பொருட்கள் எதுவும் தராததால், குடிநீர் பஞ்சம், உணவு பஞ்சம் என அனைத்தும் தலை தூக்கி நிற்கின்றன. இதனால் தொற்று நோய் பாதிப்புகள் ஏற்பட்டு ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், போர் நிறுத்தம் கோரி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாலஸ்தீன ஆதரவு நாடுகள் கொண்டு வரும் தீர்மானங்களை, அமெரிக்காவும், பிரிட்டனும் தனது ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்து வருகின்றன.
இதேவேளை அமெரிக்கா பல்கலைகழங்களில் போருக்கு எதிரான மாணவ, மாணவிகளின் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. இதனால், 50க்கும் மேற்பட்ட பல்கலைகழங்களில் படிக்கும் 550க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர்.
இந்த மாணவர்கள் போராட்டம் லண்டன், பாரீஸ் போன்ற நாடுகளிலும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில்தான், ‘சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்’ (ICC) போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை விரைவில் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அவர் மட்டுமல்லாது அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் ராணுவ தலைமை அதிகாரி ஹைம் ஹலிவி ஆகியோரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதற்கான கைது வாரண்ட் ஓரிரு வாரங்களில் பிறப்பிக்கப்படும் என்றும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
இதனால், பாலஸ்தீன போரும் விரைவில் முடிவுக்கு வரும் என்று சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச குற்றவியல் நீதிமன்று:
போர் குற்றம், தீவிரவாதம், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விவகாரங்களை விசாரித்து வரும் இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், 1990 களில் உருவானது. இதில் உறுப்பினராக இருக்கும் நாடுகளுக்கு மட்டுமே, அந்த நீதிமன்றத்தின் உத்தரவுகள் பொருந்தும்.
சில ஆண்டுக்கு முன்னர், இந்த நீதிமன்றம், டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக ஒரு உத்தரவை பிறப்பித்தது. இதனையடுத்து, உடனே அமெரிக்கா அந்த நீதிமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகியது. அதேபோல், அந்த நீதிமன்றத்தின் உறுப்பினர்கள் யாரும் அமெரிக்காவிற்கு வரக்கூடாது என்றும் கூறியது. இதனையடுத்து, இஸ்ரேல் பிரதமர் மீதான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் இந்த முடிவை அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
சர்வதேச நீதிமன்றமும் இனப்படுகொலையும்:
ஓர் இனத்தை அது இருந்த சுவடே தெரியாமல் அழிப்பதாகவும், ஓர் இனத்தின் அல்லது அந்தக் குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது, குழு உறுப்பினர்களுக்கு உடல் மற்றும் உள ரீதியாக மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதே இனப் படுகொலையாகக் கருதப்படுகிறது. ஓர் இனத்தைச் சேர்ந்த மக்களை கொத்துக் கொத்தாகக் கொன்று குவிப்பதுடன், அடுத்த தலைமுறை உருவாக விடாமல் தடுப்பதும் இனப்படுகொலையாகப் பார்க்கப்படுகிறது.
இனப்படுகொலை ஒரு சர்வதேச சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் ஒரு குற்றமாகும். இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு, இனப்படுகொலை என்பது கட்டாயத் தேவையின்படி, ஒரு மாபெரும் சர்வதேச குற்றமாக கருதப்பட்டாலும், அதை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்கள் இருந்தாலும், சம்பந்தப்பட்ட நாடுகளோ அல்லது வலிமை வாய்ந்த நாடுகளோ ஒத்துழைக்காமல் சட்டத்தாலும், நீதிமன்றத்தாலும் எதுவும் செய்துவிட முடியாது என்பது மட்டும் உண்மை.
பாலஸ்தீன போரே தேவையற்றது என்று பல நாடுகள் கூறி வரும் நிலையில், தற்போது ஏராளமான விதி மீறல்கள் நடந்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. இதனால், போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறினாலும் அமெரிக்கா அதனை தடுக்கும் என்பதே உண்மையாகும்.