இலக்கியச்சோலை

அவுஸ்திரேலியாவில் மலர்ந்துள்ள “பூமராங் மின்னிதழ்” வாசிப்பு அனுபவம்! ….. தாமரைச்செல்வி.

புதிதாய் பிறந்த வருடத்தின் ஆரம்பநாளில் பூமராங் எனும் காலாண்டு மின்னிதழ் வெளிவந்திருக்கிறது. அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வெளியீடாக வந்திருக்கும் இவ்விதழ், முதற்பார்வையிலேயே எமது கவனத்தை ஈர்த்துக் கொள்கிறது. அட்டை வடிவமைப்பு இதழை ஆவலோடு புரட்ட வைக்கிறது.

ஆரம்ப காலங்களிலிருந்து அநேகமான சஞ்சிகைகள் எழுத்தாக்கங்களோடு மட்டுமின்றி ஓவியங்களுடனும் சேர்ந்தே நமக்கு அறிமுகமாகியிருக்கிறது. அவற்றை நாம் ரசித்திருக்கிறோம்.

அப்படியான ஒரு ஜனரஞ்சக இதழாக பூமராங் மின் இதழையும் பார்க்க முடிகிறது. சம காலத்தில் அச்சில் வரும் இதழ்கள் பல பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து தடுமாறுவதை கண்கூடாக பார்க்கிறோம்.

ஒன்றிரண்டு சஞ்சிகைகள் தவிர மற்றவை சில இதழ்களுடன் நின்று விடுவதையும் பார்க்கிறோம். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் பல மின்னிதழ்கள் இலக்கிய உலகில் தமது வரவையும் இருப்பையும் தக்க வைத்துக் கொள்வதையும் கவனிக்க முடிகிறது.

இலக்கியம் மீது கொண்ட ஆர்வமே இவர்களை முனைப்பாக செயல்பட வைக்கிறது. அந்த விதத்தில் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்ங்கத்தினரின் இலக்கியச் செயற்பாட்டின் ஒரு அம்சமாக பூமராங் மின்னிதழின் வருகை நிகழ்ந்துள்ளது. ஒரு சஞ்சிகைக்குரிய அம்சங்களான சிறுகதை, கவிதை, கட்டுரை, சிறு குறிப்புகள், நிகழ்வுகளின் தொகுப்பு, பாராட்டுச் செய்தி என பல அம்சங்களையும் தாங்கி ஐம்பத்தைந்து பக்கங்களில் வெளிவந்திருக்கிறது இம்மின்னிதழ்.

ஆசிரியர் குழு தமது தலையங்கத்தில் சங்கத்தின் செயற்பாடுகளை குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். தமது நோக்கம் என்ன என்பதையும் தாம் செய்த பணிகள் எவை எவை என்பதையும் குறிப்பிட்டதன் மூலம் எத்தகைய பணிகளை இச்சங்கம் மேற்கொண்டு வந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

ஆக்கபூர்வமான கருத்துக்கள் சங்கமிக்கும் இதழாக பூமராங் வெளிவரும் என்ற உறுதியையும் தந்திருக்கிறார்கள். எதிர்வரும் காலங்களில் இம்மின்னிதழ் நல்லதொரு இலக்கிய சஞ்சிகையாக தன்னை தக்க வைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையும் ஏற்படுகின்றது.

இவ்விதழில் வெளிவந்திருக்கும் ஐந்து சிறுகதைகளும் ஒவ்வொரு கோணங்களில் சொல்லப்பட்ட உணர்வுப் பரிமாற்றங்களாக இருக்கின்றன. அன்றாட வாழ்வில் எம்மிடையே வாழும் சக மனிதர்களிடம் நாம் உணர்ந்து கொள்ளும் அனுபவங்கள்தான். அவ்வனுபவங்களை எம்மால் இயல்பாக உள்வாங்க முடிகிறது.

இவ்விதழில் இடம்பெற்றிருப்பது ஒரே ஒரு கவிதை. அதுவும் முக்கியமான ஒரு விஷயத்தைப் பதிவு செய்கிறது. வாசிப்பின் தேவையை உணர்த்தும் கவிதை. வாசிப்பு என்பது ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு அவசியமானது என்பதை சொல்லும் வரிகள். மேலும் சில கவிதைகளுக்கு இதழில் இடம் கொடுத்திருக்கலாம். தொடர்ந்தும் வரப்போகும் இதழ்களில் மேலும் கவிதைகளை இணைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.

சமகாலத்தில் நடந்த, நடக்க இருக்கின்ற இலக்கிய நிகழ்வுகள் பற்றிய குறிப்புகளும் கட்டுரைகளும் நன்று. இவ்விதழின் ஆக்கங்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் இவ்விதழின் தயாரிப்பிலும் இருக்கிறது என்பதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

இன்றைய நாளில் அச்சில் வரும் இதழ்கள் மட்டுமின்றி மின்னிதழ்களும் இலக்கியத் தளத்தில் ஆதிக்கம் செலுத்துவனவாக இருக்கின்றன என்பதே நிதர்சனமாகின்றது. அந்த விதத்தில் பூமராங் நல்லதொரு வாசிப்பனுபவத்தைத் தருகிறது.

இவ்விதழைச் சிறப்பாக எம்மை உணர வைத்ததில் ஓவியங்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது. அதற்காக தனது நேரத்தை ஒதுக்கி கடும் உழைப்பைக் கொட்டியிருக்கும் திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.

பக்கத்துக்குப் பக்கம் மிகச் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். அந்த வண்ணங்களின் அழகு நம் கண்களில் நிறைந்து கொள்கிறது.

இவ்விதழ் தொடர்ந்தும் காலாண்டு சஞ்சிகையாக வெளிவரும் என்ற உறுதியைத் தந்திருக்கிறார்கள். அவர்களின் இலக்கிய நேசிப்பை மகிழ்ச்சியோடு வரவேற்போம். ஒவ்வொரு இதழும் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இவ்விதழுக்காக உழைக்கின்ற அத்தனை பேரையும் பாராட்டி வாழ்த்துகிறேன்.

—0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.