“சவரக்கத்தி” …. சிறுகதை – 54 …. அண்டனூர் சுரா.
அப்பா வழக்கமாகக் கடை திறக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே நான் கடையைத் திறந்திருந்தேன். அப்பா எப்பொழுது கடையைத் திறந்தாலும் முதல் வேலையாகக் கண்ணாடியை எடுத்து வெளிசுவரில் மாட்டிவிட்டுதான் மற்ற வேலையைத் தொடங்குவார். சவரக்கடையின் கதாநாயகி கண்ணாடிதான். எந்த முகத்தையும் அழகாகக் காட்டுவிடும் கண்ணாடி வைத்திருக்கும் சவரக்கடைக்காரர்கள் பிழைத்துக்கொள்கிறார்கள். அப்படியான கண்ணாடிதான் அப்பா கடையிலும் இருந்தது. அதை எடுத்து வெளியில் மாட்டியவனாய் என் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு சீப்பு பற்களுக்கிடையிலிருந்த அழுக்குகளை ஒரு குச்சியால் நெம்பி எடுத்தேன்.
அப்பா கடையிலிருக்கையில் நான் கடைக்குள் நுழைவதில்லை. அப்பா அனுமதிக்கவும் மாட்டார். ஒரு ஸ்டூலை எடுத்து வெளியில் கிடத்தி என்னை அதில் உட்காரச் சொல்லி, செய்தித்தாளைக் கொடுத்து வாசிக்கச் சொல்வார். அவர் செய்யும் வேலையை நான் கவனித்துவிடக் கூடாது என்பதற்காக அப்பா செய்யும் தந்திர வேலை இது. நான் பேப்பர் படிப்பதைப் போல கடைக்கண்ணால் அப்பா செய்யும் தொழிலைக் கவனிப்பேன். முகச்சவரம் செய்துகொள்ள வந்திருப்பவர் நாற்காலியில் விசாலமாக உட்கார்ந்துகொண்டு தலையை நாற்காலியின் மேற்க்கட்டையில் சாய்த்து ஒரு பக்கமாகக் கையைத் தூக்கி அக்குளைக் காட்டி உட்கார்ந்திருக்க;
அப்பா ஒரு துண்டை எடுத்து உதறி அக்குள் கீழாக விரித்து சவரக்கத்தியை எடுத்து கையால் அப்படியும் இப்படியுமாக உராய்த்து மேலிருந்து கீழாக ‘சரட்…சரட்…’ என்று வழித்து அதை விரலால் எடுத்து ஒரு பேப்பரில் வைப்பார். அப்பாவிற்கு அக்குளைக் கொடுப்பவர்கள் கண்களை மூடி சுகத்தில் ஆழ்வார்கள். அப்பா மேலிருந்து கீழாக வழித்து பேப்பரில் வைத்து ஒரு பெட்டிக்குள் போடுவதைக் கவனித்திருக்கிறேன்.
ஒருநாள் கடைக்குள் அப்பா இல்லாத நேரம் பார்த்து கத்தரிகோலை எடுத்து, விரல்களால் ‘கிரிச்,கிரீச்..’ என்று ஒலியெழுப்ப அப்பா ஒரு பெரிய சீப்பை எடுத்து என் கன்னத்தில் அடித்தவராய், “ இனி கத்தரிகோல எடுப்பீயா, எடுப்பீயா” என்று அடித்தது இன்னும் நினைவிலிருக்கிறது.
அப்பா ஏன் என்னை அடித்தாரென்று அப்போதைக்குத் தெரியவில்லை. இரவு தூக்கத்தின் போது அப்பா அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். “புள்ளைய கடையில வச்சி நல்லா அடிச்சிப்புட்டேன்டி” என்று அப்பா சொல்ல; அம்மா பரிதவித்து “ஏன் அடிச்சீங்க…” எனக் கேட்க, “நான் செய்றத் தொழில புள்ள செய்யக்கூடாதெனுதானே இத்தனை கஷ்டப்பட்டு அவனைப் படிக்க வைக்கேன். அவன் நான் பார்க்கவே கத்திரிக்கோல எடுத்தா எப்படிப் புள்ள,…” என்று அப்பா கேட்க, என் உடம்பு குலுங்கியது.
அப்பாவின் கடை கூடாரம் அளவில் இருந்தது. மூன்று பக்கமும் மண் சுவர்கள். உடைந்துபோன ஓட்டுக்கூரை. சாக்கு போர்த்திய ரீப்பர் கதவு. கைக்கு எட்டும் உயரத்தில் ஒரு குண்டு பல்பு. மின்விசிறி வசதி கிடையாது. இரு பக்க மண் சுவரில் ஒன்றையொன்று பார்த்து கொள்ளும்படியாக இரண்டு கண்ணாடிகள். கண்ணாடியையொட்டி நான்கைந்து சீப்புகள். ஒரே ஒரு மரநாற்காலி, வாடிக்கையாளர்கள் நாற்காலியில் உட்கார, அதன் மேல் ஒரு துண்டு,. அவ்வளவேதான் அப்பாவின் கடை.
அன்றைய தினம் கல்லூரி விடுமுறை என்பதால் கடையைத் திறந்தேன். கடை முழுவதும் முடிகளாக இருந்தன. ஒரு வாரத்திற்கும் முந்தைய முடிகள். முடிகளைக் கூட்டிப்பெருக்கி சுவரின் மூலையில் ஒதுக்கி, அக்குள் முடிகள் வழிக்கப்பட்ட கொசகொசத்த, நுரை முடிகளை முறத்தால் கூட்டியள்ளி சாக்கிற்குள் திணித்தேன். இன்னொரு மூலையில் இரு பாதிகளாக உடைந்த பிளேடுகள் கிடந்தன. அதைப் பொறுக்கி பழைய தினசரியில் பொட்டலம் போலச் சுருட்டி, சாக்கிற்குள் திணித்து அதை எடுத்துப்போய் ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் எறிந்துவிட்டு வந்தேன்.
நான் திரும்பி வருகையில் கடைக்குள் தினசரி கிடந்தது. அதையெடுத்து வாடிக்கையாளர் உட்காரும் இருக்கையில் வைத்துவிட்டு துண்டால் நாற்காலியைத் துடைத்து கையில் விபூதியைக் கொட்டி தண்ணீரால் குழைத்து கண்ணாடியை ‘பளிச்’ என்று துடைத்தேன்.
ஒரு சிறுவன் ஓடி வந்தான். கடையை நாலாபுறமும் எட்டிப் பார்த்து “கடையில யாருமில்லையா?” என்று கேட்டான்.
“ சொல்லுப்பா தம்பி, நான் இருக்கேன்ல…” என்றேன்.
“ ஒரு பெரியவர் இருப்பாரே, காணோம்?”
“அவருக்கு முடியலே”
“நீங்க யாரு?”
“அவரோடப் பையன்”
அச்சிறுவன் அதற்கும்மேல் ஒன்றும் கேட்கவில்லை. கடையை இன்னொரு சுற்று பார்த்துவிட்டு, வந்த வேகத்தை விடவும் வேகமாக ஓடினான். அவன் வீடு பக்கத்தில்தான் இருக்கவேண்டும். போன வேகத்தில் திரும்பி வந்தான். வந்தவன் பெருமூச்சு வாங்கியவனாய், “தாத்தா ஆஸ்பெடலுக்குப் போகணும். சவரம் பண்ண கத்தரி, பிளேடு எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வரச்சொல்றாரு…”
நான் அச்சிறுவனை ஒரு கணம் பார்த்தேன். “ கடையிலே அவரில்ல, அவருடைய பையன்தான் இருக்காருனு சொன்னீயா?”
“இம், சொன்னேன். உன்ன வரச் சொல்றாரு”
சிறுவன் ஒருமையில் என்னை உன்னை என்றது கோபமூட்டியது.
“உன் தாத்தா ஆஸ்பத்திரி ஏன் போகணும், டாக்டரைக் கூப்பிட்டுவிட்டால் வீட்டுக்கே வந்து வைத்தியம் பார்த்துவிட்டு போவாரே” என்றேன்.
சிறுவன் சிரித்தான். “டாக்டர கூப்பிட்டுவிட முடியுமா? கூப்பிட்டாலும் வருவாரா?”
“அப்ப நான் மட்டும் வருவேனா” முகத்தை இறுக்கமாக காட்டிக்கொண்டு இதைச் சொன்னேன். அவன் என் முகத்தைப் பார்க்க தயங்கியவனாய் மெல்ல அந்த இடத்திலிருந்து நழுவினான்.
அப்பா மீது எனக்குக் கோபம் வந்தது. பின்னே, அப்பா வீடுவீடாகச் சென்று முடிதிருத்தம் செய்கிறாரென்றுதான் தாய்மாமன்கள் சேர்ந்து வாடகைக்கு ஒரு கடையைப் பிடித்து சவரக்கடை வைத்துக்கொடுத்தார்கள். அதன்பிறகும் அப்பா வீட்டிற்கே சென்று முடிதிருத்தம் செய்கிறவராக இருந்தார்.
அந்தச் சிறுவன் கடையைவிட்டு நகர்ந்தது எனக்குச் சற்று ஆறுதலாக இருந்தாலும் தொழில் மீதான பயம் மெல்ல என் மனதிற்குள் மீசை முறுக்கியது. என்னை வீட்டுக்குக் கூப்பிட்டுவிட்ட அந்த பெரியவர் என் கடைக்கு வந்து சவரம் செய்துவிடச்சொல்லி நாற்காலியில் அமர்ந்துவிட்டால் என்ன செய்வதாம், இதற்கும் முன்பு நான் கத்திரிக்கோல், ரேசர் பிளேடு பிடித்ததில்லையே! எனது இதயம் துடிப்பதற்குப் பதிலாக குதித்தது.
எனக்குள்ளாக அப்பா வந்து போனார். இந்தப் பகுதியில் எத்தனையோ சலூன்கடைகள் உண்டு. அவற்றில் பெரும்பகுதி அப்பாவிடம் தொழிற்கற்று கடை திறந்தவர்கள். தொழிற்கற்றுக்கொள்ள யார் கடைக்கு வந்தாலும் அப்பா அவரது கையில் சவரக்கத்தியைக் கொடுத்து அவர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு முகச்சவரம் செய்யச் சொல்லி பார்ப்பார்.
புதிதாக வேலைக்கு வந்திருப்பவனின் முகத்தையும் கையின் லாவகத்தையும் கண்ணாடியில் கவனிப்பார். அவனது முகம் அருவறுப்பாக கோணினாலோ, கை நடுங்கினாலோ இத்தொழிலுக்கு லாய்க்கற்றவனென அனுப்பிவிடுவார். அவரது சோதனையில் தேர்ந்தவர்கள் கொஞ்சபேர்தான். அவர்கள் இதே ஊருக்குள் நட்சத்திர அந்தஸ்தில் சலூன் கடை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நான் இத்தொழிலுக்கு ஒத்து வருவேனா என்கிற கேள்வி என்னைத் துளைத்தது. யாரைக்கொண்டு என்னை நான் சோதித்துக்கொள்வது? நான் சோதிக்கப் போகும் முகம் சற்றுமுன் வந்துப்போன சிறுவனின் தாத்தா தானோ, அதை நினைக்கையில் எனக்குச் சிரிப்பும் பதட்டமும் வந்தது.
நான் கடையைத் திறந்திருப்பது தொழில் செய்ய அல்ல. திறந்து வைக்க வேண்டும் என்றுதான். இந்த வழியே போகும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடைக்குள் வந்து கண்ணாடியில் முகம் பார்த்து சீப்பை எடுத்து தலையை ஒடுக்கிக்கொண்டு செல்வார்கள். அவர்களுக்காகத்தான்! அவர்கள் முடிகளை ஒடுக்கும்பொழுது சீப்பைப் பார்ப்பேன். ஒரே சீப்புத்தான். எத்தனை விதமாக முடிகளை ஒடுக்கிவிடுகிறது!
கடை திறந்த சற்றுநேரத்திற்குள் நாலைந்துபேர் கடைக்குள் வந்து தலையை ஒடுக்கிக்கொண்டு, முகத்தை அப்படியும் இப்படியுமாக திருப்பி, பற்களை ஈ..என்று காட்டிச் சென்றிருந்தார்கள். நான் அவர்களின் செய்கையைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன்.
என் வீட்டுக்கும் அண்டை வீட்டுப்பையன் ஓடி வந்தான். அவனது வருகை பதட்டத்தைக் கொடுத்தாலும் என்னை நெருங்கிவந்து நின்று நிதானித்து சொன்னான், “அண்ணே, அம்மா உன்னே கடையச் சாத்திட்டு வெரசா வீட்டுக்கு வரச் சொன்னுச்சு.”
அப்பா ஒரு நாளும் கடையை மூடியதில்லை. வாரத்திற்கொரு நாள் கடையை மூட வேண்டும் என்கிற சங்க விதியைக்கூட அப்பா மீறவே செய்வார்.
“ஏன்டா தம்பி?” என்றவாறு அவனைப் பார்த்தேன். அவன் முகத்தைத் துடைத்துக்கொண்டவனாய் “தெரியல. ஆனா வெரசா வரச்சொன்னுச்சு…” என்றவாறு பெருமூச்சு வாங்கினான்.
எனது தலைக்குள் புகை மூட்டம் கண்டது. நான் கடையைச் சாத்தியவனாய் வீட்டை நோக்கி நடந்தேன். வீடு ஒரே இரைச்சலாக இருந்தது. அம்மா தலைவிரிக்கோலமாக உட்கார்ந்து கத்திக்கொண்டிருந்தார். சுற்றிலும் பெண்கள் குழுமி தலையைக் கீழே தொங்கவிட்டவர்களாய் தலையில்
முக்காடிட்டு ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தார்கள். பங்காளிகள், ஊர் ஆட்களிடம் வேலை ஏவிக் கொண்டிருந்தார்கள். நான் வீட்டுக்குள் நுழைந்து அப்பாவைப் பார்த்தேன். அப்பா இறந்துவிட்டிருந்தார்.
“அப்பாவைக் குளிப்பாட்டும் சடங்கு தொடங்கியது. தேங்காய், ஊதுவர்த்தி, விளக்கு, படி, நெல், செப்புக்குடம்…. எடுத்துவர உறவினர்கள் பரபரத்தார்கள். நான் அப்பாவின் முகத்தைப் பார்த்தேன். அப்பாவிற்கு முன்வழுக்கை என்பதால் அவ்விடத்தைத் தவிர மற்ற இடங்களில் முடிகள் கொசகொசத்திருந்தன.
எத்தனையோ பேர்களுக்கு முகச்சவரம் செய்துவிட்டவர் அப்பா. வாடிக்கையாளர்களுக்கு மட்டுமா? நீண்ட கால வாடிக்கையாளர்களில் யாரேனும் இறந்துபோனால் அவரது வீட்டிற்கேச் சென்று பிரேதத்திற்கு முகச்சவரம் செய்துவிடுவார். மீசையை அழகாகக் கத்தரித்து முகத்தை அப்படியும் இப்படியுமாகத் திருப்பி, ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திவிட்டு வீடு திரும்புகிறவர். அவரது இந்த வேலை பலநேரம் அம்மாவைக் கோபமூட்டும். ஒரு முறை அப்பாவைக் கண்டிக்கும் விதமாகச் சண்டை பிடித்தார். அப்பொழுது அப்பா சொன்னார். “ அடியே, நீ அதைப் பிணமாகப் பார்க்கிறே, நான் என் வாடிக்கையாளராப் பார்க்கிறேன். வாடிக்கையாளன் செத்துப்போகிறப்ப அவருக்கு எப்படியாம் அஞ்சலி செலுத்துறது. உசிரோட இருந்தவரைக்கும் கடையைத் தேடி வந்தவர். செத்தப் பிறகு தாடியும் மயிருமா பார்க்க பிடிக்கலைடி. அதான் பிணமென பார்க்காம சவரம் செஞ்சுவிட்டேன்..” என்பார். இதற்கும்மேல் சண்டை பிடிக்க அம்மாவிடம் வார்த்தை இருக்காது.
அப்பாவை அமர்த்திக் குளிப்பாட்ட வீட்டின் மூலையில் கிடந்த ஒரு மரநாற்காலியைத் தூக்கி வந்தார்கள். அப்பாவை அதில் உட்கார வைத்து தலையில் தண்ணீரை ஊற்றினார்கள். உடம்பில் உயிருக்கும் வரைக்கும்தான் மீசை முறுக்கிக்கொண்டிருக்கிறது. உயிரறுந்துவிட்டால் மீசையும் கூட கவிழ்ந்துவிடவே செய்கிறது. அப்பாவின் மீசை வாயோடு சேர்த்து முகவாயை மறைத்தது. அப்பாவை இந்தக் கோலத்தில் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை. வீட்டுக்குள் ஓடி சவரப் பெட்டிக்குளிருந்த கத்தி, கத்தரிகோலை எடுத்து வந்தேன்.
அம்மா என்னை தலைவிரிக்கோலமாய் பார்த்தார். “அடேய், என்னடாச் செய்யப் போற…?” என் சட்டையைப் பிடித்து உலுக்கிக் கேட்டார். நான் அம்மாவிடமிருந்து விலகி அப்பாவிடம் சென்றேன்.
“அப்பன் விட்டத் தொழில புள்ள கையிலே எடுத்திட்டான்….” என்றார் ஒருவர்.
“இவன் அப்பன் அப்படித்தான். யார் வீட்ல இழவு விழுந்தாலும் வீட்டுப் படியேறி பிரேதத்துக்குச் சவரம்செய்துவிட்டு வருவார். அவர் மாதிரியே அவன் புள்ளையும் இறங்கிட்டான்….” என்றார் இன்னொருவர்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த உறவுக்கார ஒருவர் உரக்கக் கத்தினார். “வாய மூடுய்யா. பெத்த அப்பனுக்கு இதைகூட செய்யலைன்னா எப்படிங்கிறேன்?”
“ இதை யார் செய்யவேண்டானு சொன்னா, நேத்தைக்கே அவர் உசிரோட இருக்கிறப்பவே செஞ்சிவிட்டிருக்கலாம்ல. அப்படி செஞ்சிருந்தா இப்ப ஏன் நான் இப்படிப் பேசப்போறேன்..”
ஊர்க்காரர்களின் சடசடப்புகளை நான் காதினில் வாங்கிக்கொள்ளவில்லை. நான் கத்தியை உள்ளங்கையில் தீட்டி அப்பாவின் தாடியை மழித்து, மீசையை மயிர்களை அழகாக கத்தரித்து ஒழுங்குபடுத்தினேன். அப்பா மீது தண்ணீரை ஊற்றி வெள்ளை வேட்டியைக் கட்டி, நெற்றியில் பொட்டு
வைத்து, கீழே சரிந்துவிடாமல் நாற்காலியில் கிடத்தி பின்பக்கமாகக் கட்டி கழுத்தில் ஒரு மாலையைக்கிடத்தி உட்கார வைத்தார்கள்.
அவ்வளவு நேரம் முகவாய்க்கு ஒரு கையைக் கொடுத்து நின்றுகொண்டிருந்த பெண்கள் அம்மாவைக் கட்டிப்பிடித்துகொண்டு அழுதார்கள். அம்மா என்னை நோக்கி இரண்டு கைகளையும் நீட்டியவராய், “அடேய், உன் அப்பாவைப் பாருடா…” என்றவாறு கத்தினார்.
நான் அப்பாவைப் பார்த்தேன். சவரம் செய்யப்பட்ட முகத்தில் ஆங்காங்கே முடிகள் துருத்தியும் கத்திப் பதம் பார்த்த இடத்தில் வெண்தோலும் தெரிந்தன. அவரது முகத்தை நான் பார்த்தபடி இருந்தேன். அப்பா எனக்கொரு செய்தி சொல்லிக்கொண்டிருந்தார்.
சிறுகதை தான்.மனதை உருக்கும் முடிவு. தன் மகன், தன்னுடைய தொழிலில் ஈடுபடுவதை விரும்பாத ஒரு தந்தைக்கு கத்தி எடுத்து கம்பீரமாய் செய்து முடித்த இறுதி சடங்கு. ஒரு ஈடில்லா காணிக்கை.
பாராட்டுகளும், வாழ்த்துகளும்
மிக்க நன்றிகள் ஐயா