இலக்கியச்சோலை

“அவுஸ்திரேலியாவிலிருந்து பூமராங் மின்னிதழ்”…. அறிமுகக் குறிப்புகள்!!… முருகபூபதி.

அவுஸ்திரேலியாவில் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், 2001 ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்தியதன் மூலம் இக்கண்டத்தில் வதியும் இலக்கியப் படைப்பாளிகள், நடனம், இசை, கூத்து, நாடகத்துறை சார்ந்த கலைஞர்கள், மற்றும் வானொலி, பத்திரிகை ஊடகவியலாளர்கள், வாசகர்களை இணைத்து, “ அறிந்ததை பகிர்தல் அறியாததை அறிந்து கொள்ள முயல்தல் “ என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இயக்கமே, பின்னர் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பாக உருவாகியது.

கடந்த 2004 ஆம் ஆண்டிற்குப்பின்னர் இந்த அமைப்பு அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்டது.

இதுவரையில் மெல்பன், கன்பரா, சிட்னி, கோல்ட் கோஸ்ட் ஆகிய மாநகரங்களில் இச்சங்கம், தமிழ் எழுத்தாளர் விழாக்களையும் நடத்தியுள்ளது.

அத்துடன் இலக்கிய சந்திப்புகளையும், குறும்படக் காட்சிகளையும் நூல் வாசிப்பு அனுபவப் பகிர்வுகளையும், நூல்கள், இதழ்களின் கண்காட்சிகளையும் அனைத்துலக பெண்கள் தின விழாவையும் நடத்தி வந்திருக்கும் இச்சங்கம், காலத்திற்குக் காலம் கலை, இலக்கிய ஆளுமைகளையும் பாராட்டி கௌரவித்து சாதனையாளர் விருதுகளையும் வழங்கியிருக்கிறத.

கடந்த இரண்டு வருடகாலமாக இலங்கை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், அவர்கள் வெளியிடும் கலை, இலக்கியம் சார்ந்த ( சிறுகதை, நாவல், கவிதை , கட்டுரை ) நூல்களில் அதிசிறந்தனவற்றை நடுவர்களின் மூலம் தெரிவுசெய்து இலங்கை நாணயத்தில் தலா 50 ஆயிரம் ரூபா பணப்பரிசிலும் சான்றிதழும் வழங்கி வருகிறது.

கொவிட் பெருந்தொற்றுக்காலத்திலும் இச்சங்கம் பல நிகழ்ச்சிகளை மெய் நிகர் ஊடாக நடத்தியிருக்கிறது.

2010 ஆம் ஆண்டில், பூமராங் என்ற சிறப்பிதழையும் வெளியிட்டது. அதனையடுத்து சங்கத்திற்கென ஒரு இணையத்தளத்தையும் அறிமுகப்படுத்தியது.

அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து உயிர்ப்பு என்ற தொகுப்பினையும், கவிதைகளைத் தொகுத்து வானவில் என்ற நூலையும் வெளியிட்டுள்ளது. உயிர்ப்பு தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில சிறுகதைகள், ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட BEING ALIVE என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாடு கணையாழி மாத இதழ், பிரான்ஸில் வெளியான அம்மா, இலங்கை மல்லிகை, ஞானம், ஜீவநதி ஆகியனவும் அவுஸ்திரேலிய சிறப்பிதழ்களை கடந்த காலங்களில் வெளியிட்டுள்ளன.

இந்தப் பின்னணிகளுடன் தற்போது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கதின் காலாண்டு மின்னிதழாக பூமாரங் வெளிவந்துள்ளது.

இதன் வெளியீட்டு அரங்கு கடந்த 14 ஆம் திகதி மெய்நிர் ஊடாக சம்பிரதாயபூர்வமாக நடத்தப்பட்டது.

பலரும் இந்நிகழ்வில் இணைந்து தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

சங்கத்தின் செய்திகளுக்கும், சங்கத்தின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட கலை, இலக்கிய தகவல்களுக்கும் பூமராங்கின் முதல் இதழில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிறுகதைகள், கவிதைகள், நூல் நயப்புரைகள், பத்தி எழுத்துக்கள் என்பனவும் பூமராங் மின்னிதழில் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்துக்கும் பொருத்தமான அழகான ஓவியங்களை, ஓவியர் கிறிஸ்டி நல்லரெத்தினம் வரைந்துள்ளார்.

ஓவியங்களை வரைந்திருப்பதுடன், பக்கங்களை வடிவமைப்பதிலும், மின்னூலாக பதிவேற்றுவதிலும் ஆக்கபூர்வமாக உதவியவர் சங்கத்தின் நடப்பாண்டு தலைவர், எழுத்தாளர் – ஓவியர் திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

தொடர்புகளுக்கு: atlas25012016@gmail.com

https://archive.org/details/combinepdf-6 ….. ( பூமராங் மின்னிதழ் )

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.