மதிப்புக்குரிய நடிகமணி வி.வி. வைரமுத்து அவர்களுடனான நீங்காத நினைவுகள்!…. ஏலையா க.முருகதாசன். ,
நடிகமணி திரு.வி.வி.வைரமுத்து அவர்கள் எனது நாடக வாழ்வில் பெரும் பங்கு வகித்தவர்,அவர்தான் என்னைச் சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்தவர்.
1970 ஆண்டளவில் எமது மன்றமாகிய,தெல்லிப்பழை அம்பனைக் கலைப்பெருமன்றம் வட்டுக்கோட்டை நேருஜி கலாமன்றத்தின் நாடகப் போட்டியில் நீங்காத நினைவு என்ற நாடகத்தை மேடையேற்றியிருந்தது. அதில் கதாநாயகனாக நடித்திருந்தேன்.
இந்த நாடகப் போட்டிக்கு பிரதான நடுவராகப் பணியாற்றியவர் நடிகமணி திரு.வி.வி.வைரமுத்து அவர்கள்.
அங்கு மேடையேறிய பல நாடகங்களுக்குள் எங்களுடைய நாடகமான நீங்காத நினைவு என்ற நாடகம் சிறந்த நாடகமாகவும்,சிறந்த நடிகனாக என்னையும் நடுவர்கள் தேர்ந்தெடுத்தார்கள.
நாடக முடிவுகளை அறிவித்த நடிகமணி திரு.வி.வி.வைரமுதது அவர்கள் ஒவ்வொரு நாடகங்களைப்; பற்றியும் சொல்லி எங்கள் நாடகம் ஏன் வெற்றிபெற்றது என்பது பற்றியும் சொல்லி என்னை ஏன் சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கு,இந்த நடிகர் வசனங்களை அதிகம் பேசவில்லை,ஆனால் முக பாவம் உடல்மொழி அபாரமாக இருந்தது,உண்மையான காதலுக்கும்,அதைச் தியாகம் செய்யும் மனநிலைக்குமிடையில் அவர் அல்லாடியதை தனது முகத்தில்: காட்டிய விதம்,அவரின் சொண்டுகள் துடித்ததுடிப்பு,கண்களில் கண்ணீர்; இவற்றையெல்லாம் மேடைக்கருகில் இருந்து பார்த்து வியந்தோம்.அதற்காகவே இவரைச் சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுத்தோம் என்றார்.அவர் அன்று பேசிய வார்த்தைகள் இன்றம் பசுமையாக இருக்கின்றன.
நாடகப் போட்டி முடிந்து பல மாதங்களுக்குப் பின்னர்,நான் காங்கேசன்துறை பெற்றோல் நிலையத்தில் நண்பரொருவருடன் கதைத்துக் கொண்டிருந்த போது,அவ்விடத்துக்கு வந்த நடிகமணி திரு.வி.வி.வைரமுத்து அவர்கள் என்னைப் பார்த்ததும் நீங்கள்தானே நீங்காத நினைவு நாடகத்தில் நடித்து சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று கேட்டார்.நான்: ஓம் என்று சொல்ல மீண்டும் எனது நடிப்பைச் சிலாகித்துச் சொன்னார்.எனது நண்பனும் அதை ஆர்வமாகக் கேட்டுக் கொண்டான்,அவனும் இன்னொரு மன்றத்தில் நடிப்பவன்.அதற்குப் பிறகு அவரை அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.அவரின் வீடு காங்கேசன்துறை பெற்றோல் நிலையத்துக்கு எதிரப்புறத்தில் மேற்குப் பக்கமாக இருந்தது.நாடகங்கள் மேடையேற்றும் காலங்களில் அவரின் வீட்டில் பயிற்சிகள் மிருதங்கம் ஆர்மோனியம் போன்றவற்றுடன் இடம்nபுறுவதைக் கேட்டிருக்கிறேன்.யாழ் மனோகராத் தியேட்டர் நாடக மண்டபமாக இருந்த போது தான் நடிகை சாவித்திரியுடன் நடித்த கதைகளை எனக்குச் சொல்லுவார்.நீங்கள் படத்தில் பார்க்கும் சாவித்திரி வேறு நிஜச் சாவித்திரி வேறு என்றவர் அவரோடு நடித்த நாடகம் சம்பந்தமான பல விடயங்களை என்னோடு கதைப்பார்.