இலக்கியச்சோலை

சியாமளா யோகேஸ்வரனின் “ கானல் நீர் “ நாவல் !!… முருகபூபதி.

படித்தோம் சொல்கின்றோம்:

இளம்பருவம் கண்ணாடித் தம்ளருக்கு ஒப்பானது !

கைதவறினால் என்னவாகும் ? என்பதை சித்திரிக்கும்…..

சியாமளா யோகேஸ்வரனின் “ கானல் நீர் “ நாவல் !!

                                          முருகபூபதி.

இலங்கை பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞான பட்டதாரியான திருமதி சியாமளா யோகேஸ்வரன், ஒருநாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தான் எழுதியிருக்கும் கானல் நீர் என்ற புதிய நாவலுக்கு அணிந்துரை எழுதித்தருமாறு கேட்டார்.

அவரது குரல் எனக்குப் புதியதாக இருந்தது. முன்னர் கேட்டிராத குரல் !

“ எங்கேயிருந்து தொடர்புகொள்கிறீர்கள்…? “ எனக்கேட்டேன். அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிறிஸ்பேர்ண் நகரத்திலிருந்து எனச்சொன்னார்.

நான் மூன்று தசாப்த காலமாக வசிக்கும் அவுஸ்திரேலியா கண்டத்திலிருந்து மற்றும் ஒரு எழுத்தாளரா..? ஆச்சரியத்துடன் உரையாடினேன்.

எனது முகவரியைப்பெற்று தான் ஏற்கனவே எழுதி வெளியிட்டிருந்த இதயராகம் ( நாவல் – 2021 ) உறவுகள் ( சிறுகதைத் தொகுதி – 2022 ) ஆகிய நூல்களையும் அனுப்பியிருந்தார்.

சியாமளா யோகேஸ்வரன் புதிய தலைமுறை எழுத்தாளர் என்பதை அவருடனான உரையாடலிலும், அவர் அனுப்பியிருந்த இரண்டு நூல்களிலுமிருந்தும் தெரிந்து கொள்ள முடிந்தது.

ஏற்கனவே கானலில் மான் ( தெணியான் ) , கானல் தேசம் (நடேசன்) முதலான தலைப்புகளில் நாவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றை எமது ஈழத்து எழுத்தாளர்களே எழுதியிருக்கின்றனர். ஒருவர் வடமராட்சியில் மறைந்துவிட்ட ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தெணியான். மற்றவர் நான் புகலிடம் பெற்று வாழும் அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் நகரில் வசிக்கும் எழுத்தாளர் நடேசன்.

இந்த வரிசையில் இதே கண்டத்தில் குவின்ஸ்லாந்து மாநிலம் பிறிஸ்பேர்ண் நகரிலிருந்து சியாமளா யோகேஸ்வரன் தனது கானல் நீர் நாவலை வரவாக்கியிருக்கிறார்.

“போரில் நீ வென்றால், அதை நீ விபரிக்க வேண்டியதில்லை. தோற்றால், அதை விபரிக்க நீ அங்கிருக்கக்கூடாது “

அடல்ஃப்ஹிட்லர் இவ்வாறு இரண்டாம் உலகப்போர் முடிவடைவதற்கு முன்னர் சொன்னார். தனது முடிவு எத்தகையது…? என்பதை தீர்க்கதரிசனமாகவே சொல்லிவிட்டாரோ ! ? எனவும் யோசிக்கத் தோன்றியது.

ஒவ்வாரு மனிதரதும் வாழ்க்கைப்போரும் இத்தகையதே! ஒவ்வொருவரதும் வெற்றியையும் தோல்வியையும் வேறு யாரோ ஒருவர்தான் எழுத்தில் பதிவுசெய்து வைக்கின்றார். சிலர் தத்தம் வாழ்க்கையை சுயசரிதைப் பாங்கில் எழுதுகின்றனர்.

ஒரு மனித உயிர் பிறந்த நேரம் முதல், அதாவது தாயின் கருவறையிலிருந்து வெளிப்பட்டு, இப்பூவலகைப் பார்க்கத் தொடங்கி மரணிக்கும் வரையில் எது எதற்காகவோ போராடிக்கொண்டிருக்கிறது.

எமது தமிழ் சமூகத்தில் இந்த வாழ்க்கைப் போராட்டத்தில் பெண்களின் வகிபாகம் கண்ணீரால் நிரம்பியிருக்கிறது. அத்துடன் கானல் நீரைத் தேடி ஓடும் கலைமானைப் போன்று அலைந்துழலும் வாழ்க்கையைத்தான் எமது சமூகம் பெண்களிடத்தில் திணித்து வைத்திருக்கிறது.

இராமாயணம், மகா பாரதம், சகுந்தலம், சத்தியவான் சாவித்திரி, சிலப்பதிகாரம், நளவெண்பா முதலான அனைத்து காவியங்களிலும் பெண்களின் ஓலமும் கண்ணீரும்தான் தென்படுகின்றது.

ஆனால், அந்தக் காவியமாந்தர்களான பெண்களை படைத்திருப்பவர்கள் அனைவருமே ஆண்கள்தான்.

சியாமளா யோகேஸ்வரன் ஒரு பெண்ணின் அலைந்துழன்ற வாழ்வை தமது கானல் நீர் நாவல் மூலம் சித்திரிக்க முயன்றுள்ளார்.

ஒவ்வொரு படைப்பாளியினதும் வாழ்வின் தரிசனங்களே அவர்கள் எழுதும் இலக்கியப்பிரதிகள். அவை சிறுகதைகளாக, நாவலாக உருமாறும்போது மனிதர்கள் பற்றி மாத்திரமின்றி சமூகம் குறித்த பார்வையும் வாசகர்களை வந்தடைகிறது.

கானல் நீர் மூன்று தலைமுறைக் கதை. அதனால், இம்மூன்று தலைமுறையின் காலத்து சமூக அமைப்பு முறையையும், போர்க்கால இடப்பெயர்வு – அந்நிய புலப்பெயர்வு குறித்தெல்லாம் பேசுகின்றது.

நாவலின் பிரதான நாயகி அபி, தாயின் கருவறையிலிருந்து வெளியே வந்த நாள் முதல், அவளது குழந்தைப்பருவம், பள்ளிக்காலம், காதல் அரும்பும் இளமைப்பருவம், தனக்குத்தானே துணையை தேடிக்கொள்வதில் காண்பித்த அவசரம், அதனால் நேர்ந்த நெருக்கடிகளை கடந்து செல்ல மேற்கொண்ட பிரயத்தனங்கள், தாயின் சொற்களை கேட்காமல் விட்ட தவறுகளுக்கு பிராயச்சித்தமும் தேட

வழியின்றி, இலங்கை – தமிழ் நாடு – இங்கிலாந்து என்று பரதேசியாக அவலப்பட்ட கதையே கானல்நீர்.

கானல் நீரைத்தேடி ஓடியது யார்..? அபியா… அல்லது அவளைப்பெற்ற தாய் சுமதியா..? என்பதை வாசகர்கள் தீர்மானிப்பார்கள்.

தாயகத்தில் போர்க்கால வாழ்க்கை, அதிலிருந்து தப்பித்து தமிழ்நாட்டில் அகதி வாழ்க்கை, அங்கே வாழ்க்கைத்துணை கிடைத்ததும் இங்கிலாந்து சென்று தொடங்கிய புலம்பெயர் புகலிட வாழ்க்கை. இவற்றையெல்லாம் ஒரு கதை சொல்லியாக கூறிவரும் நாவலாசிரியர் சியாமளா, இம்மூன்று நாடுகளினதும் நிலக்காட்சிகளை சித்திரிப்பதில் கவனம் செலுத்தாமல், பாத்திரங்களின் குண இயல்புகளை மாத்திரமே தொடர்ந்து காண்பித்து வருகிறார்.

அதனால், காட்சிகளையும் விரைவாக நகர்த்திச்செல்ல நேர்ந்துவிடுகிறது. தொடக்கத்தில் குழந்தை அபி. பின்னர் மாணவி. அடுத்து காதல் வலையில் சிக்கி – முரண்பட்டு – மோதி அதிலிருந்து வெளியேறும் இளவயதுப் பருவம், இடையில் இயக்கத்தில் இணையப்போவதாக பெற்ற தாய்க்கு எச்சரிக்கை, இறுதியில் தொடரவிருக்கும் போர்க்கால நெருக்கடியிலிருந்து தப்பித்து, தமிழக அகதிமுகாம் வாழ்க்கை. அங்கு சென்றபின்பு மீண்டும் மற்றும் ஒரு புதிய காதல். அது திருமணத்தில் முடிந்திருந்தாலும், இங்கிலாந்தை புகலிடமாக பெற்று சென்றபின்னர், ஒரு ஆண்மகவுக்கு தாயான பின்னர், கணவனுடன் ஏற்படும் பிணக்கு, இறுதியில் பெற்ற மகனை ஒரு மருத்துவனாக பார்க்கும் மன நிறைவு . இத்தனைக்கும் மத்தியில் ஊரிலிருக்கும் பெற்றதாய் தன்னை தொடர்ந்தும் புறக்கணிக்கிறாளே என்ற ஏக்கத்திலேயே அபியின் வாழ்க்கை தொலைந்துபோகிறது.

சில திரைப்படங்களை பார்த்திருப்பீர்கள். எழுத்து ஓடும்போது, இத்திரைப்படத்தில் வரும் பாத்திரங்கள் எவரையும் குறிப்பன அல்ல எனவும், உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் எடுக்கப்பட்ட படம் எனவும் காண்பிப்பார்கள்.

கானல்நீர் நாவல் சொல்லும் கதையும் யாராவது ஒருவரது வாழ்வில் நிகழ்ந்திருக்கலாம். ஆனால், இதுபற்றி நாவலாசிரியர் சியாமளா தனது முன்னுரையில் ஏதும் சொன்னால்தான் வாசகர்கள் தெரிந்துகொள்வார்கள்.

சமூகத்திற்காக பேசுவதும், சமூகத்தை பேசவைப்பதுமே படைப்பாளிகளின் நோக்கமாகும். சியாமளாவும் தனது இரண்டாவது நாவல் கானல் நீர் மூலம் பேசவைத்துள்ளார்.

பருவ வயது, கண்ணாடித் தம்ளரைப்போன்றது என்பார்கள். அதனை நிதானமாக பக்குவமாக கையாளவேண்டும். அவ்வாறு கையாளத் தவறும் பட்சத்தில் வாழ்க்கை என்னவாகும் என்ற செய்தியை சியாமளா இந்நாவலில் கூறியிருக்கிறார்.

அவர் தொடர்ந்தும் படைப்பிலக்கியத்தில் பயணித்து வளரவேண்டும், நாவலிலக்கியத்தில் உச்சங்களை தொடல் வேண்டும் எனவும் வாழ்த்துகின்றேன். letchumananm@gmail.com

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.