இலக்கியச்சோலை

மலரன்னை-தமிழர் ஈழ இலக்கிய தாய்! அமுதவிழா காணும் போராளித் தாய்!!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.

போராளி எழுத்தாளரும் மாவீரருமான கப்டன் மலரவனின் தாயார் அற்புதராணி காசிலிங்கம் – மலரன்னையின் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் பல்வேறு பத்திரிகைகள், வானொலிகள், சஞ்சிகைகளில் இலங்கை மற்றும் பிற நாடுகளில் பிரசுரமாகியுள்ளது.
மாவீரன் கப்டன் மலரவனின் தாயார் :
சில சிறுகதைகள் சர்வதேச வெளியீடுகளில் மீள்பதிவும் செய்யப்பட்டுள்ளது. நாற்பதிற்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் ஒலிபரப்பாகி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளன. ” கனவுகள் நனவாகும் ” என்ற தொடர்நாடகம் (நாற்பத்தி மூன்று அங்கங்கள் ) ஒலிபரப்பாகி மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.பல வானொலி நிகழ்ச்சிகளையும் எழுதியிருக்கிறார்.
இவர் எழுதிய பத்து ஆங்கிலக் கவிதைகள் Hot spring என்ற ஆங்கிலப் பத்திரிகையில் பிரசுரமாகியிருக்கிறது. இவரது நாற்பதிற்கும் மேற்பட்ட ஆக்கங்கள் பல்வேறுபோட்டிகளில் பரிசு பெற்றிருக்கின்றன.
தற்போது அமுதவிழா காணும் அவரின் ‘மலரன்னையின் வாழ்வும் படைப்பும்’ நூல் வெளியீடு நிகழ்வு 08.01.2024 திங்கட்கிழமை மாலை 3.30 மணியளவில் திருநெல்வேலியில் உள்ள ராஜா கிறீம்கவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் ஜீவநதி ஏற்பாட்டில் இடம்பெற்றது.
அமுதவிழா காணும் மலரன்னை :
எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான கோகிலா மகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வரவேற்புரையினை இரா. குலசிங்கம் அவர்களும் வெளியீட்டுரையினை விரிவுரையாளர் புலோலியூர் வேல்நந்தகுமார் அவர்களும் நிகழ்த்தினர்.
மலரன்னையின் சிறுகதைகள் பற்றி எழுத்தாளர் பிரேமினியும், மலரன்னையின் நாவல்கள் என்கிற தலைப்பில் விரிவுரையாளர் அஜந்தகுமாரும் சிற்றுரை நிகழ்த்தினர்.
தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றது. மலரன்னையின் வாழ்வும் படைப்பும் நூலினை ஜீவநதி ஆசிரியர் பரணீதரன் வெளியிட்டு வைக்க மலரன்னை அவர்கள் நூலினை பெற்றுக் கொண்டார்கள்.
பல விருது பெற்ற மலரன்னை :
1950 களில் இலங்கை வானொலியின் தமிழ் ஒலிபரப்பின் சிறுவர் நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய மலரன்னை மூத்த புகழ் பெற்ற எழுத்தாளர் கச்சாயில் இரத்தினத்தின் மகள் ஆவார்.1993 ஆம் ஆண்டில் இவரது முதலாவது சிறுகதை வெளியாகியது.அன்றிலிருந்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.
சர்வதேச அளவில் நடை பெற்ற இலக்கிய போட்டிகளில் நான்கு முறை சிறுகதை, நாடக எழுத்துருவுக்காக பரிசு பெற்றுள்ளார். சிரித்திரன், மல்லிகை சிறுகதைப் போட்டிகளிலும் அகில இலங்கை ரீதியில் பரிசு பெற்றுள்ளார். “பாலைவனத்துப் புஸ்பங்கள்” என்ற நாவல் தேசிய கலாச்சாரப் பேரவையின் தேர்வில் இரண்டாம் பரிசுபெற்றது.
அத்துடன் இலக்கிய விவரணம் எழுதுவதிற்கான பிரிவு போட்டியிலும் முதற்பரிசு பெற்றிருக்கிறார். ஓவியம், ஒளிப்படம் முதலியவற்றிலும் ஈடுபாடு உடைய இவர் தையல்கலையில் சிறந்து விளங்கினார். இவரது சில மொழி பெயர்ப்பு கட்டுரைகளும் , சில கவிதைகளும் பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளது. இலக்கியப்பங்களிப்புக்காக கலைமாமணி, கலைஞானச்சுடர் விருதுகளை பெற்றுள்ளார்.
தமிழர் ஈழ இலக்கிய தாய் விருது:
அமுத விழா நாயகிக்கான விழாவில் கௌரவிப்பினை ஜீவநதி பதிப்பகத்தின் உரிமையாளரும் ஜீவநதி இதழின் ஆசிரியருமான கலாமணி பரணீதரன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தொடர்ந்து இந்துநாகரீகத்துறை தலைவரான சுகந்தினி முரளீதரன் அவர்கள் மாலையணிவிப்பு செய்து கௌரவித்தார்.
ஜீவநதி பதிப்பகத்தின் ஏற்பாட்டிலான தமிழர் ஈழ இலக்கிய தாய் என்கிற கௌரவ விருதினை அம்மாவுக்கு மூத்த எழுத்தாளர் அ. ஜேசுராசா வழங்கி வைத்தார். நூல் பற்றிய கருத்துரையினை எழுத்தாளர் மயூரரூபனும் நிகழ்த்தினர். அதனை தொடர்ந்து ஊரவர்கள், வாசகர்கள், நலன்விரும்பிகள் என பலரும் பொன்னாடை போர்த்தி அவரை வாழ்த்தி கௌரவம் வழங்கினர். இறுதியாக ஏற்புரையினையும் நன்றியுரையினையும் மலரன்னை அவர்கள் நிகழ்த்தினார்.
ஈழத்தின் போற்றுதற்குரிய படைப்புகள்:
மலரன்னையின் நூல்களில்
வேர்பதிக்கும் விழுதுகள் ( 16 சிறுகதைகளின் தொகுப்பு) -2015,
கீறல் ( 23 சிறுகதைகளின் தொகுப்பு) -2016, மறையாத சூரியன் (நாவல்) -2016 – முத்துமீரான் விருது (2017),
மௌனத்தின் சிறகுகள் (நாவல்) -2017,
அனலிடைப்புழு ( 25 சிறுகதைகளின் தொகுப்பு) -2017, மலைச்சாரலின் தூவல் (நாவல்)- 2018, காகிதப்படகு (மூன்று குறுநாவல்களின் தொகுப்பு) – 2018, அப்பாவின் தேட்டம் (25 சிறுகதைகளின் தொகுப்பு) -2019 ஆகிய படைப்புக்கள் ஈழத்து இலக்கியப் பெருவெளியில் முக்கியமானவையாகும்.
மலரன்னை ஒரு ஹோமியோபதி மருத்துவர் என்பதும் ஹோமியோபதி, சுதேச மருத்துவத்திற்காக பிரித்தானியாவில் இயங்கும் மாற்று மருத்துவத்திற்காக அமைப்பு ஒன்றிலும் அங்கத்தவராக இருந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரது பாலைவனத்துப் புஸ்பங்கள் ( நாவல்)- 2019, உயிர் சுமந்த கூடு ( 18 சிறுகதைகளின் தொகுப்பு) -2020, அசை (21 சிறுகதைகளின் தொகுப்பு) – 2021, ஒரு பிடி சாம்பல் (16 சிறுகதைகளின் தொகுப்பு) – 2021 போன்ற படைப்புக்கள் ஈழத்து இலக்கியத்தின் போற்றுதற்குரிய படைப்புக்களாகும்.
தமிழன்னை பெற்ற மலரவன்:
தமிழன்னை பெற்ற மலரவன் என்னும் ஒரு போராளியை மலரன்னை 23/11/1992 களத்தில் இழந்தாலும்,
அந்தப் போராளியை, படைப்பாளியை சுமந்த தாயின் கரங்கள் போராட்டம் தொடர்பான பல பதிவுகளை தொடர்ந்து எழுதியது.
தனது பிள்ளைக்கும் வீரமகனுக்கு தாயின் கவிதை அஞ்சலி! என்ற தலைப்பில் கவிதைகளைக் கண்ணீரோடு வரைந்தார் வீரத்தாய் மலரன்னை. அக்கவிதையின் இறுதி வரிகளில்…
மண்ணில் உதிர்த்திட்ட மைந்தனே! – இன்று
விண்ணில் உயர்ந்திட்டாய் மா வீரனாய்
விதையாய் வீழ்ந்திட்டாய் மண்ணிலே – இன்று
கதையாகி விட்டதே உன் சரிதை….
இருபதே வருடங்கள் வாழ்ந்தாலும்
அர்த்தமாய் வாழ்ந்திட்டாய் வல்லமையால் – இந்த
மண்ணின் விடியலே உன் கனவு – நீ
விண்ணிலிருந்து நோக்குவாய் மலரும் தமிழீழமதை!
தாய் மண்ணிற்காக போராடி, களப்பலியாகிய போராளி எழுத்தாளரும் மாவீரருமான கப்டன் மலரவனின் தாயார் மலரன்னையின் படைப்புக்கள் ஈழத்து இலக்கிய வரலாற்றுக்கு மேலும் பெருமை சேர்க்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.