முருகபூபதியின் “சினிமா: பார்த்ததும் கேட்டதும்” …. நூல் நயவுரை….. சகுந்தலா கணநாதன்.
சினிமா பிரியர்களுக்கு பல செய்திகளை கூறும் நூல்
சகுந்தலா கணநாதன்.
எழுத்தாளர் முருகபூபதி, வாராவாரம் அவுஸ்திரேலியா அக்கினிகுஞ்சு, தமிழ் முரசு, கனடா பதிவுகள் இணைய இதழ்கள் உட்பட இலங்கையிலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் மற்றும் இதழ்களில் எழுதிக்கொண்டே இருப்பார். இவ்வாறு தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கும் இவருக்கு ஒரு வருடத்தில் சுமார் இருநூறு திரைப்படங்கள் பார்ப்பதற்கு எவ்வாறு நேரம் கிடைக்கிறது என்று நான் ஆச்சரியப்படுவேன்.
ஆனால், அது ஆச்சரியமல்ல, உண்மைதான் என்பதை ஆதாரமாகக் கூறுகிறது, முருகபூபதி எழுதி, யாழ்ப்பாணம் ஜீவநதி பதிப்பகத்தினால் கடந்த ஆண்டு நடுப்பகுதியில் வெளியாகியிருக்கும் சினிமா: பார்த்ததும் கேட்டதும் நூல்.
இலக்கிய நண்பரும் ஓவியருமான கிறிஸ்டி நல்லரெத்தினம் முன்னர் கூறியதுபோன்று, “ இந்திய சினிமாவில் சத்தியஜித்ரே போன்ற சில இயக்குனர்கள் இந்திய திரைக்களத்தை மேம்படுத்தினார்கள். இதற்கு மாறாக இந்திய தமிழ் சினிமா, பாட்டு, நடனம், கேளிக்கை, சண்டை என்று நேரத்தை வீணடிக்கிறது “ என்றே சொல்லத்தோன்றுகிறது.
முருகபூபதி, திரை இயக்குனர் முள்ளும் மலரும் மகேந்திரன் பற்றி பல விடயங்களை எழுதியுள்ளார். இப்பதிவில். முக்கியமாக மற்ற இயக்குனர்கள் கைவிட்ட கல்கியின் பொன்னியின் செல்வன் பற்றிய செய்தி.
மேலும் முள்ளும் மலரும் மகேந்திரன், எழுத்தாளர்களின் சிறுகதை, நாவல்களை திரைப்படமாக்கிய அனுபவசாலி என்கிறார் முருகபூபதி.
பாரதி சொல்லும் ரௌத்திரம் பழகு என்றவாறு வாழ்ந்து காட்டிய ஜெயகாந்தனிடம் அமைதியும், நிதானமும், அசாத்தியமான துணிச்சலும் குடியிருந்தன என்பதை அவர் பற்றிய முருகபூபதியின் பதிவிலிருந்து வாசகர் அறிய முடிகிறது.
நடிகர் நாகேஷ் பற்றி நல்ல அபிப்பிராயம் கொண்டிருந்த ஜெயகாந்தன், நாகேஷின் நடிப்பு தமிழ் பட உலகிற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று புகழ்கிறார். “நல்ல வேளையாக டைரக்டர்களின் ஆளுகை தன் மீது கவிழ்ந்து, அமிழ்த்தி விடாதவாறு பாதுகாத்துக்கொள்ளும், அதே சமயத்தில்
ஒரு நடிகனுடைய எல்லையை மீறி நடந்து கொள்ளாதவர், தன் பாத்திரத்தை தன் கற்பனையால் டைரக்டரோ தயாரிப்பாளரோ எதிர்பாராத முறையில் மிகவும் சிறப்பாக அமைத்துக் கொள்கிற ஒரு புதுமையான கலைஞர்தான் நாகேஷ் “ என்கிறார் ஜெயகாந்தன்.
பேரப்பிள்ளைகளும் கண்டுவிட்ட ஒரு முதிய தாய், தனது கணவனால் மீண்டும் எதிர்பாராத வகையில் கர்ப்பிணியாகி, வெட்கத்தினால் அரளி விதையை அரைத்து சாப்பிடுகிறாள். அவ்வேளை ஒரு மேல் நாட்டு வெள்ளையினப் பெண்ணை மணந்த அவளது டாக்டர் மகன், அங்கு வந்து, அவளை தனியே சந்தித்து நாடி பார்த்து தாயார் தாய்மையுற்றதை அறிந்து பரவசமடைகின்றான். பிரசவகாலத்தில் தன் பராமரிப்பில் வைத்திருக்க தாயாரை அழைத்துச் செல்கிறான்.
அந்த வீட்டு முற்றத்தில் பலாமரத்தின் கிளையில், அல்ல அல்ல, வேரில் காய்த்த பலாப்பழத்தை ரசித்து ருசிக்கிறான்.
எவ்வளவு நாசூக்காக ஜெயகாந்தன் எழுதியுள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்பே ஜெயகாந்தன் காலத்தையும் மீறி சிந்தித்தவர் என்பதற்கு இக்கதையும் ஒரு சிறந்த உதாரணம் என்கிறார் முருகபூபதி.
பொதுவாகவே வசீகர தோற்றத்தையே இந்திய சினிமா உலகம் எதிர்பார்க்கும் என்கிறார் முருகபூபதி. ஆனால் வழக்கத்துக்கு மாறாக, இந்திய சினிமாவில் மட்டுமின்றி மேலைத்தேய ஆங்கிலம் உட்பட சில மொழிகளிலும் வெளியான படங்களில் நடித்து, விருதுகளும் பெற்று புகழ் பெற்ற நடிகர் ஓம்பூரி, மும்பையில் தனது இல்லத்தில் 2017 ஆண்டு காலமானார்.
பல இந்திய மொழிtகளில் நடித்த ஓம்பூரியின் மறைவு, நூற்றாண்டு கண்டுவிட்ட இந்திய திரைப்பட உலகிற்கு பேரிழப்பு என்கிறார் முருகபூபதி. அவரின் அர்த்த சத்யா திரைப்படத்தை கண்டிப்பாக வாசகர் பார்க்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
இத்திரைப்படத்தை அவசியம் பார்க்குமாறு முருகபூபதிக்குச்சொன்னவர்கள் எழுத்தாளர் சுஜாதாவும், கவிஞர் அக்கினி புத்திரனும் என்ற செய்தியையும் மறக்காமல் பதிவுசெய்துள்ளார் முருகபூபதி.
தொலைக்காட்சி நாடகங்கள் ரப்பர் போன்று இழு இழு என்று மாத, வருடக்கணக்கில் இழுபட்டுக்கொண்டிருக்க, ஒளிப்பதிவாளர் – இயக்குநர் பாலு மகேந்திரா மிகச்சிறந்த பணியொன்றைச் செய்தார். பல சிறந்த கதைகளை தெரிவு செய்து குறும்படங்களாகத் தந்தார் என்றும் அறிகிறோம் இப்புத்தகத்தில் இருந்து.
எழுத்தாளர் முருகபூபதியின் ஞாபகசக்தியை என்னே என்று வர்ணிப்பேன்..?
தமிழ் சினிமா பிரியர்கள் .அவசியம் படிக்கவேண்டிய நூல் முருகபூபதியின் சினிமா: பார்த்ததும் கேட்டதும். இந்நூலில் சினிமா மற்றும் சிறந்த திரை இயக்குநர்கள் பற்றிய 16 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
—0—-
மிகவும் சிறப்பான ஒரு நயவுரை. வாழ்த்துக்கள் சகுந்தலா