இலக்கியச்சோலை

கரையில் மோதும் நினைவலைகள்…. நடேசன்

முன்னுரை.

இதுவரையில்  நான் கடந்த பாதையில் நடந்த சம்பவங்களை இரைமீட்டி எழுதும்போது இந்த  வரலாற்றையும்  ஏன் எழுதவேண்டும் என்ற கேள்வி என் மனதிலே  எழுகிறது.

அதற்கும் அப்பால்  மற்றவர்கள் இதனைப் படிப்பதால் அவர்களுக்கு என்ன பயன் கிட்டும் ? என்ற கேள்வியொன்றும்  தொக்கி வருகிறது. இரண்டுக்கும் பதில் கூறாது விடமுடியாது.

நான் ஒரு தலைவராகவோ,  முக்கிய பிரமுகராகவோ இல்லாதபோது எனது வரலாற்றில்  மற்றவர்கள் தெரிந்துகொள்ள என்ன இருக்கப் போகிறது?  என்ற வினாவும் மகாபாரதத்தில் வரும் யக்ஷனாக என்னை  வழிமறிக்கிறது . தாகம் தீர்க்க குடிதண்ணீருக்கு மட்டுமல்ல,  சகோதரர்களை உயிர்ப்பிக்க யக்ஷனது கேள்விகளுக்கு  விடை தந்த தருமன்போல்,  நானும் இந்த முக்கிய கேள்விகளுக்குப்  பதில் மறுத்து  மேலே போகமுடியாது.

நானும் என் வயதைச் சார்ந்தவர்களும் இலங்கையில் தமிழ் பகுதியில்   வாழ்ந்த காலம்  சூறாவளிகள் சூல்கொண்ட பருவகாலம். சூறாவளி கடந்த பகுதிகளில் அழிவுகள் உடைவுகள் எப்படி இருக்குமோ அதைப் போன்ற காட்சிகளைப்  பார்த்துப்  பயந்தபடி  வளர்ந்தேன் ,  படித்தேன்,  தொழிலும் செய்தேன் .

இலங்கையின் வடபகுதியில் நான் படித்த காலத்தில் உருவாகிய தரப்படுத்தல், அதற்கு  எதிரான  தமிழ் இளைஞர்களது வன்முறை, அதன் எதிர்விளைவாக  அரச வன்முறைகள் காட்சிகளாக எனது மனதில் பதிந்தன .  இரு தரப்பின் செயல்கள் ஒன்றுக்கு எதிராக ஒன்று இருந்தபோதிலும்,  அவர்களது வன்முறைகள் சாமானியர்களுக்கு எதிராகவும் இருந்தன.

யாழ்ப்பாணத்தில் வளர்ந்து  தென் இலங்கையில் பல்கலைக்கழகத்தில் படித்து,  பின்பு  சிங்கள மக்கள்  மத்தியில் மிருக வைத்தியராக நான்கு வருடங்கள்  வேலையும்  செய்ததால் ஒன்றை ஒன்று சந்திக்காத நாணயத்தின்  இரு பக்கமாக இலங்கையின் தமிழர் – சிங்களவர் என்ற இரு சமூகத்தையும்  என்னால் பார்க்க முடிந்தது.

போராட்ட காலத்தில் இந்தியாவில் ஆயுத இயக்கங்கள் மத்தியில் குடும்பமாக வாழ்ந்து,  அவர்களுக்கு மருத்துவ நிலையம் அமைத்ததுடன் மூன்று வருடங்கள் முழு நேரமும் கல்வி மருத்துவம் என இலங்கை அகதிகளுடன் வேலை செய்தபோது,  ஆயுதம் தரித்த இளைஞர்கள் மட்டுமல்ல,  சாதாரண மனிதர்களையும் சந்திக்க முடிந்தது.

எனது குழந்தைகள் அங்கிருந்த  இளைஞர் பயிற்சி முகாமுக்கு உள்ளே போய்வந்தார்கள். பிற்காலத்தில் இந்தியாவில் எனது உயிருக்கு எச்சரிக்கை இருந்தது. இவை புலம் பெயர்ந்த பின்பும் சாதாரணமாக ஒரு வாழ்கையை  வாழமுடியாத  நிலைக்கு என்னைத் தள்ளியது. இது எனக்கு மட்டும் ஏற்பட்டது எனச் சொல்லவில்லை . ஆனாலும் இவை எனது வருங்கால  செயற்பாடுகளை உருவாக்குவதில் முக்கிய அக, புறக்காரணிகளாக விளங்கின.

அரிஸ்ரோட்டில்,   “  ஒருவன் தனது ஜீவனம் சார்ந்த தொழிலுக்கப்பால் என்ன செய்கிறான் என்பது சமூகத்திற்கு முக்கியம்.  “  என்கிறார் .

1987 ஜூனில் அவுஸ்திரேலியாவிற்கு  வந்ததும்  மற்றவர்கள்போல் சொந்தத் தொழிலை மட்டும் பார்க்காது, சிட்னியில் நண்பர்களுடன் இணைந்து இலங்கை மனித உரிமை கழகத்திலும் , பின்பு மெல்பன் வந்ததும்  இலங்கை தமிழ் அகதிகள் கழகத்தில் உறுப்பினர்களில்  ஒருவனாகவும்,  பின்னர் அக்கழகத்தில்  பல பதவிகளிலும் பணியாற்றி,   ஏழு வருடகாலம்  அவுஸ்திரேலிய அரசுடன் எமது தமிழ் அகதிகளுக்காக நண்பர்கள் பலருடன் சேர்ந்து  பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டேன்.

1997  ஆண்டில் தமிழ்  – ஆங்கில  இரு மொழிப்பத்திரிகையாக  உதயம் என்ற மாத இதழை  எனது நண்பர்களுடன் இணைந்து  சுமார்  13 வருடங்கள்  அதனை  நிறுவன ஆசிரியராக வெளியிட்டு வந்தேன்.

உதயம் பத்திரிகையிலிருந்தபோது அவுஸ்திரேலிய பிரதமர்கள்,  இந்திய வெளி விவகார அமைச்சர் எனப் பலரைச்  சந்தித்து உரையாடும் வாய்ப்பும் கிட்டியது. பல தடவைகள் அவுஸ்திரேலிய வெளி விவகார அமைச்சு அதிகாரிகள் என்னை தலைநகரம் கன்பராவுக்கு  அழைப்பார்கள்.  இந்த விடயங்கள் என்னைப் பிரபலமாக்குவதற்குப் பதிலாக,  முரண்நகையாக சமூகத்தில்  ஒதுக்கப்படுபவானாக ஆக்கியது . பத்திரிகை எரிக்கப்பட்டு, எனக்கு மிரட்டல்களும்  வந்தன.   எனது படம் சமூகத்துரோகியாக போர்க்காலத்தில் இலங்கையின் வடபகுதியில் ஓமந்தை  கண்காணிப்பு முகாமிலுமிருந்தது.

இவை எல்லாம் அரசியல் தலைவர்கள்,  தேசத்தலைவர்கள்  மற்றும் முக்கியஸ்தர்கள் சந்திக்கும்  விடயங்கள். ஆனால் சாதாரண ஒரு மிருகவைத்தியனாக எப்படி அவற்றையெல்லாம்   எதிர்கொண்டேன் என்ற வரலாற்றுடன்   எனது இந்திய , அவுஸ்திரேலிய அகதி வாழ்வும் இந்த புத்தகத்திலுள்ளது.

இறுதியான அத்தியாயமாக எனது  மனைவிக்கு வந்த புற்றுநோயையும் எப்படியான உத்திகளால் எதிர்கொண்டோம் என்பது பற்றியும்  எழுதியிருக்கின்றேன்.  இந்தப்பதிவு  நிச்சயமாக மற்றவர்களுக்குப் பிரயோசனமாகவிருக்கும்  என்பது எனது  கருத்து.

இதில் இடம்பெறும்  கட்டுரைகள் இணையத்தில் வந்தபோது படித்தவர்களில் பலர்,  இவை தொகுக்கப்பட்டு நூலாக வரல்  வேண்டும் எனக் கோரியதால்  நூலாக்க விரும்பினேன்.  புனைவுக் கதைகள்,  நாவல்கள் பலவற்றை ஏற்கனவே  எழுதியபோதிலும்,  இந்த நூலில் இடம்பெறும்  விடயங்கள் நூறு வீதம் உண்மையானது.

இந்த நூலிலுள்ள கட்டுரைகள் எழுதப்பட்ட  காலத்தில் இவற்றை  ஒப்பு நோக்கிய நண்பர் எழுத்தாளர் முருகபூபதிக்கு எனது நன்றிகள்.

என்னோடு கடந்த1973 இலிருந்து  ஐம்பது வருடகாலமாக  துணை நிற்கும்  டாக்டர் சியாமளா நடேசனுக்கு இந்த  நூல் சமர்ப்பணமாகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.