நிலவின் பாடம் நிதமெமக்கு வழியைக் காட்டிடும் !..கவிதை
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … அவுஸ்திரேலியா
வானமீதில் நீந்தியோடும் வண்ணநிலாவே – உன்
வடிவழகைப் பாடாத கவிஞரில்லையே
நானுமுன்னைப் பாடவெண்ணும் ஆசையினாலே – இங்கு
பாடுகிறேன் பால்நிலவே நின்றுகேட்டிடு !
உண்ண மறுக்கும் குழந்தைக் கெல்லாம் உன்னைக் காட்டியே – இங்கு
உணவை யூட்டி உளம் மகிழ்வார் உலகில் பலருமே
விண்ணில் நீயும் ஓடி யோடி விந்தை காட்டுவாய் – அதை
வியந்து வியந்து பிள்ளை பார்த்து விரும்பி மகிழ்ந்திடும் !
பூரணையாய் வந்து நீயும் பொலிந்து விளங்குவாய் – அதை
பூரிப்போடு பலரும் பார்த்து உளம் மகிழுவார்
காதலர்க்கு களிப்பையூட்ட களத்தில் இறங்குவாய் – அதை
கவிதையிலே பல கவிஞர் கண்டு வாழ்த்துவார் !
உன் வரவை ஆவலோடு உலகம் நோக்கிடும் – இங்கு
உன் வரவால் பலரும்வாழ்வில் உளம் மகிழுவார்
மின் மினிகள் வானில் சூழ விரைந்து ஓடுவாய் – நாளும்
உன் னொளியால் உலகை நாளும் உவகை யூட்டுவாய் !
இறைவனது தலையின் மீது இருக்கிறாயென – இங்கு
இந்துமதம் சொல்லி யுன்னை உயர்த்தி நிற்குது
குறையுடைய நிலவே யுனை நிறைவு படுத்தவே – நாளும்
இறைவன் உன்னை தன்னிடத்து ஏற்றுக் கொண்டனன் !
மதியைப் பற்றி பல கதைகள் மதங்கள் சொல்லிடும் – ஆனால்
மதியைப் பற்றி யோசித்தால் நம்மதி தெளிந்திடும்
பாதி நாளில் மதியின் வாழ்வு இருண்டு போயிடும் – ஆனால்
மீதி நாளை வெளிச்சமாக்கி மதி கொணர்ந்திடும் !
உயர் வுதாழ்வு உலக வாழ்வில் இயற்கை என்பதை – இங்கு
உணர்த்தி நிற்கும் செயலை நிலவே தெளிவாய் காட்டுது
வெளிச்சம் கொடுக்க நாளும் நிலவு விண்ணில் வருகுது – ஆனால்
வெளியில் குறையைக் காட்டிக் கொள்ளா நிலவும் விரும்புது !
கூடு கின்ற காதலர்க்கு குளிர்ச்சி கொடுக்குது – இங்கு
வாடு கின்ற காதலர்க்கு வரட்சி காட்டுது
நிலவு அது வானமீது தவழ்ந்து போகுது – ஆனால்
மனித மனம் விதம்விதமாய் மாய்ந்து போகுது !
மனதில் மகிழ்ச்சி மலரும்போது நிலைவை வாழ்த்துவோம் – இங்கு
மனமகிழ்ச்சி தொலையும் போது நிலைவைத் தூற்றுவோம்
நிலவு என்றும் வான்வழியாய் தவழ்ந்து போகுமே – அது
கவலை கொண்டு போவதை நாம் காணமுடியுமா !
துன்ப மின்ப மெல்லாமே சுழலும் சக்கரம் – அதை
இன்ப முடன் ஏற்றுக் கொண்டால் எல்லாம் இன்பமே
தேய்ந்து வளர்கின்ற பாதை நிலவின் பாதையே – அதை
ஆய்ந்து பார்த்தால் மனித வாழ்வில் அமைதி தோன்றுமே !
இருட்டும் வரும் வெளிச்சம் வரும் எனவுணர்த்திட – இங்கு
எல்லோருக்கு பாட மதை நிலவு நடத்துது
மனிதரெலாம் நிலவைப் பார்த்து மதியைத் தீட்டுவோம் – இங்கு
நிலவின் பாடம் நிதமெமக்கு வழியைக் காட்டிடும் !