இலக்கியச்சோலை

வடமராட்சியில் உதித்து – கிழக்கில் பிரகாசித்த பேராசிரியர் செ.யோகராசா….- ஐங்கரன் விக்கினேஸ்வரா

கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் மூத்த பேராசிரியர் திரு.செ.யோகராசா அவர்கள் நேற்று (7/12/23)மதியம் கொழும்பில் காலமாகிய செய்தி தமிழ் உலகை மிக்க கவலையுறச் செய்துள்ளது.

பேராசிரியர் செ. யோகராசா அவர்களை பற்றியும் ஈழத்து இலக்கியப் பரப்பில் அவரது பாரிய பங்களிப்பு பற்றியும் வெறும் எழுத்துக்களில் சுருக்கி விட முடியாது. பேராசிரியர் செ. யோகராசா பல்துறைப் பரிமாணங்களைக் கொண்ட படைப்பாளியாகவும், ஆற்றல் மிக்க ஆய்வாளராகவும், பலராலும் மதிக்கப்படுகின்ற பண்பாளனாகவும் இருந்து கொண்டு, சிறந்த திறனாய்வாளராக என்றும் உயர்ந்து நிற்கிறார்.

கரவெட்டியைச் சேர்ந்த பேராசிரியர் திரு.செ.யோகராசா இளமைக் காலத்தில் கருணை யோகன் என்ற புனை பெயரில் கவிதைகளும், சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

பேராசிரியர் திரு.செ.யோகராசாவின் தமிழ் இலக்கியப் பணி மிக காத்திரமானது. இதுவரையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், எட்டு நூல்கள், ஆறு தொகுப்பு நூல்களை படைத்துள்ளார்.

இவரது நூல்களில் இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண்பாத்திரங்கள், ஈழத்து நவீன இலக்கியம்,ஈழத்து நவீன கவிதை,

ஈழத்து வாய்மொழிப் பாடல் மரபு போன்ற பலநூல்களை படைத்துள்ளார்.

கடந்த மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக நவீன இலக்கியம் சம்பந்தமான பல்துறை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை வெளிக்கொணர்ந்துள்ளார்.

‘ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்’, ஈழத்து சிறுவர் பாடல் களஞ்சியம்’ என்ற இவரது நூல்கள் இரண்டையும், ஆழ்ந்த அகன்ற அறிவிற்காய் ‘குமரன் புத்தக இல்லம் ‘வெளியிட்டுள்ளது.

செ. யோகராசா ‘ஈழத்துத் தமிழ் சிறுகதைக் களஞ்சியம்’ என்னும் நூல் இலங்கையில் வெளிவந்த மிக முக்கிய, மிகச் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களையும் கொண்ட இத்தொகுப்பு இலங்கைச் சிறுகதை வரலாற்றில் முக்கிய தடம் பதித்த சிறு கதை ஆசிரியர்கள் பற்றியகுறிப்பினையும் கொண்டுள்ளது என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது.

நவீன இலக்கிய வளர்ச்சியில் இவரது இலக்கிய பங்களிப்பு விசாலமாக அமைந்துள்ளது. எந்த ஆய்வரங்கிலும் தமது காத்திரமான கட்டுரைகளை முன்வைத்து ஆற்றுகின்ற உரை புதிய அணுகுமுறைகளைப் பிரதிபலித்து நிற்பதைக் காணலாம். அத்துடன் ஈழத்தில் வெளிவந்த அதிக நூல்களுக்கு அணிந்துரை எழுதியவரும் இவரே. தனது எழுத்துக்கள் மூலம் பல இளம் படைப்பாளிகளின் இலக்கிய வாழ்வுக்கு உந்து சக்தியாகவும் விளங்கியவர்.

பேராசிரியர் திரு.செ.யோகராசாவின் ஈழத்து இலக்கிய வரலாறு, புகலிட இலக்கியம், போரிலக்கியம், பெண்ணிய இலக்கியம் நாட்டார் இலக்கியம், சிறுவர் இலக்கியம் போன்ற பல்வேறு துறை சார்ந்த இவரது ஆய்வுகள் மிகவும் பெறுமதி வாய்ந்தவை.

அத்துடன் ‘ஈழத்து நவீன கவிதை புதிய உள்ளடக்கங்கள்- புதிய தரவுகள்- புதிய போக்குகள்’ என்ற நூலிற்காக தேசிய சாகித்திய விருது 2007ல் பேராசிரியர் செ. யோகராசா பெற்றுள்ளார். ‘பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை – பிரதேச சாகித்திய விருதை 2007இலும், பின்னர் ‘ஈழத்து நாவல் வளர்ச்சியும் வளமும்’பிரதேச சாகித்திய விருதை 2008இலும் பேராசிரியர் செ. யோகராசா பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்து எழுத்திலக்கிய உலகின் முக்கிய ஆய்வாளரை, பேராசிரியரை தமிழ் கூறும் நல்லுலகம் இழந்துள்ளது.

சிறுவர் இலக்கியம், சிறுகதை, கவிதை, நாவல் சஞ்சிகைகள் ஆகிய துறைகளில் கொண்ட ஈடுபாடும், அக்கறையும், தேடலும் அவரைச் சிறந்த ஆய்வாளராக தமிழ் இலக்கிய உலகு அறிந்துள்ள பேராசிரியரை தமிழ் கூறும் நல்லுலகம் தற்போது இழந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.