புதிய திசையில் பயணிக்கும் செங்கதிரோனின் சிறுகதைகள் —இரண்டாம் விசுவாமித்திரன்
நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்து நம்மையெல்லாம் திணறடித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் அவற்றில் ஒன்றிரெண்டு தொகுதிகள் பாராட்டும் வகையில் அமைந்து வருவதுமுண்டு.
அவ்வாறான பாராட்டும் வகையில் வரும் சிறுகதைத் தொகுதியொன்றை யாவும் கற்பனையல்ல என்ற பெயரோடு வெளிக் கொண்டு வந்திருக்கிறார் நண்பர் செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் அவர்கள்.
செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் இலக்கியம்,இலக்கியச் செயற்பாடுகள், அரசியல்,அரசியற் செயற்பாடுகள் என்று ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் மினக்கெட்டுத் திரியும் மனுசன்.
இலக்கியத்தில் கவிதை,கட்டுரை, சிறுகதை,நாவல்,நூல் மதிப்பீடு,ஆய்வு, சொற்பொழிவு என்று பல தளங்களில் தன்னைத் தொடராக ஈடுபடுத்தி வருபவர்.
ஏற்கனவே அரசியல் தொடர்பில் தமிழர் அரசியலில் மாற்றுச் சிந்தனைகள் என்ற ஒரு நூலையும் கவிதையில் விளைச்சல் என்ற குறுங்காவியத்தையும் சமம் என்னும் உருவகக் கதைத் தொகுதி ஒன்றையும் எழுதி வெளிக்கிட்டவர் . தற்போது சிறுகதை தொடர்பில் யாவும் கற்பனையல்ல என்ற இந்தத் தொகுதியை வெளியிட்டுள்ளார்.
சிறுகதை தொடர்பில் அவரின் செயற்பாட்டுத் தளம் எது?
நண்பர் கோபாலகிருஸ்ணன் சிறுகதை தொடர்பான தனது கருத்தை ஞானம் கலை இலக்கிய சஞ்சிகையில் அக்டோபர் 2016 இல் உரத்த தொனியில் பேசி இருக்கிறார்.
நல்ல முற்போக்கான சிறுகதை யொன்றைப் படைப்பதற்கு எந்த இசம்களும் தேவையில்லை. எந்த வாதங்களும் அவசியமில்லை. எந்த மேற்கு நாட்டுக் கலை இலக்கியக் கோட்பாடுகளும் வழிகாட்டத் தேவையும் இல்லை என்று வாதாட்டம் செய்கிறார்.மிகவும் தெளிவாக சிறுகதை தொடர்பான அவரின் கருத்து அது.
2016இல் தெரிவித்த இந்தக் கருத்து எப்படி தொகுதியில் அதற்கு முன்னர் எழுதிய கதைகளுக்கும் பொருந்தும் என்ற கேள்வி எழலாம்.
கோபாலகிருஸ்ணன் 2008 இல் செங்கதிர் என்ற சஞ்சிகை தொடங்கும்போதே இந்தக் கருத்துடன் இருந்தார் இத்தொகுதியின் முதலாவது கதை 2008 இல் எழுதப்பட்ட கதையே. ஏனைய கதைகள் அதற்குப் பின்னர் எழுதியவைதான்எனவே இத்தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் சிறுகதை பற்றிய பலமான அடித்தளத்தில் நின்றுதான் எழுதியுள்ளார் என்பதை மனதில் நாம் இருத்திக் கொள்ள வேண்டும்..
இன்னுமொரு விடயம் 2008க்கு முன்னரும் அவர் சிறுகதைகள் எழுதினார் என்பதும் அவ்வாறான கதைகள் விடயத்திலும் இதேகொள்கையுடன் அவர் இருந்தாரா என்ற கேள்வியும் ஆகும்.
இலங்கையில் நவீனத்துவமும் ஏனைய கோட்பாடுகளும் தொடங்குமுன்னரே அவர் சிறுகதைகள் எழுதினார். நமது நாட்டில் முற்போக்குவாதம்சடைத் தெழும்பிய 1963இல் முற்போக்குவாதம் பற்றிய அறிவு சிறிதும் இன்றி வந்தாறுமூலை மத்திய கல்லூரியின் ஏழாம் வகுப்பு மாணவனாக இருந்து கடமை என்ற கதையை எழுதினார்.இது பற்றிய அவருடைய ஒப்புதல் வாக்குமூலத்தை என்னீடு என்ற பகுதியில் நீங்கள் வாசிக்கலாம்அவரின் முதலாவது சிறுகதை இதுதான்.
கதைநாயகனின் தாய் சுகவீனமுற்று படுக்கையில் இருக்கிறாள்.வறுமை காரணமாக மருந்து வாங்கப் பணமில்லை. பஸ் நிலையத்தில் படுக்கையில் இருந்த ஒரு பிச்சைக்காரனின் பணத்தைத் திருடி மருந்து வாங்கி தாயிடம் சென்ற பொழுது அவள் மரணம் அடைந்திருந்தாள்.
அதிரடியான கதை முடிவு. அந்த கதை அறுபது வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டது. ஆயினும் அந்தக் கதையை இன்று பிரசுரித்தாலும் சிறப்பான ஒரு கதையென்று இலக்கிய உலகம் அதனை வரவு வைக்கும் என்று திடமாக நம்பலாம். அப்படிப்பட்ட கதை அது.
நண்பர் செங்கதிரோன் எழுதிய முதலாவது கதையே இத்தனை சிறப்பு வாய்ந்த கதையா? என்று நாங்கள் வியக்கிறோம்.வறுமையில் வாடும் ஒருவனின் பரிதாப நிலையை தெட்டத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த கதை.
நோய்க்கு மருந்து தர அரசு இல்லையென்பதையும் நோய் தீர்க்கப்பணம் தேவையென்பதையும்அவன் குடும்பம் பிச்சைக்காரனின் பணத்தை திருடும் அளவுக்கு வறுமையில் வாடியது என்பதையும் கூறி சமூக விமர்சனத்துக்கானஊடகமாகவே இக்கதையை செங்கதிரோன் எழுதியுள்ளார்.
ஏழாம் வகுப்புப் பயிலும் காலத்திலேயே சிறுகதைபற்றிய தேற்றத்தை அவர் விளங்கியிருந்தார் என்பதை நாம் விளங்கிக் கொள்கிறோம்.அவர்வசம் அக்கதை இல்லாததால் இத்தொகுப்பில் அக்கதை உள்ளடக்கப் படவில்லை என்பது துரதிஸ்டமாகும்.
அவரது முதல் கதைபோல இன்று அவர் தொகுதியில் தந்திருக்கும் பதின்மூன்று கதைகளும் சிறப்பாக அமைந்திருக்கும் என்ற ஆவலோடு கதைகளை வாசித்தேன்.
முதலாவது கதை குடை கவனம் என்ற தலைப்போடு வருகிறது.குடை போன்ற பொருட்களை இலகுவில் மறந்து விடுவது நமது வாழ்நாள் அநுபவமாகும். அந்த அநுபவத்தை கதையாக்கி வந்துள்ளார் செங்கதிரோன்.
சிறிய விடயங்களையும் பேசுபொருளாக்கி கதைகளை ஆக்கும் வல்லமை செங்கதிரோனின் தனித்திறமை என்பதை குடை கவனம் என்ற இந்தக்கதை ருசுப்படுத்துகின்றது.
ஊர் மானம்,துரோகி,அங்கிருந்து வந்தவர்கள்,சகோதரத்துவம் ஆகியநான்கு கதைகளைத் தவிர ஏனைய கதைகள் இவ்வாறான சிறிய பேசுபொருளோடுதான்தொகுதியில் உலா வருகின்றன.
ஒரு கதையின் பேசுபொருள் எத்தகைய சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் கதைக்குள் அது எதனை நிகழ்த்துகிறது என்பதுதான் முக்கியம் ஆகும்.
குடை கவனம் என்ற கதையில் குசும்புத்தனமானதும்தான் வாழ்க்கை என்று எழுதி இருக்கிறார்.இந்தத் தொகுதியில் உள்ள இரண்டாவது கதை ஊர் மானம் என்பதாகும்.
ஐந்து பெண்பிள்ளைகளைக் கொண்ட மணமுடிக்க வசதியில்லாத தமிழ்க் குடும்பத்தின் மூத்தவள் முஸ்லிம் பெடியனைத் திருமணம் செய்வதால் ஊரின் இளைஞர்கள் குடும்பத் தலைவன அச்சுறுத்த வந்தவேளை எஞ்சிய நான்கு பிள்ளைகளைத் திருணம் செய்ய முடியுமா என்று குடும்பத்தலைவனின் கேள்வியோடு இளைஞர்கள் நழுவிச் செல்லும் கதைதான் ஊர் மானஊரின் மானம் எது? கதைநாயகன் ஊடாக செங்கதிரோன் சொன்னதா? அல்லது இளைஞர்கள் ஊடாகப் பேசியதா?
கலப்புமணம் பற்றி பல கதைகள் நமக்குக் கிடைத்துள்ளன.
தமிழ் இலக்கியப் பரப்பின் முதலாவது சிறுகதை வவேசு ஐயர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் என்று சிறுகதை வரலாறு தொடங்கப்படுவதுண்டு. அக்கதை 1915 களில் எழுதப்பட்டது.
ஆனால் அதற்கு முன்னரே சுப்ரமணிய பாரதியார் 1905இல் சக்கரவர்த்தினி என்ற பத்திரிகையில் துளசியாய் அல்லது ரஜபுத்திரகன்னிகையின் கதை என்ற தலைப்பில் ஒரு கதை எழுதினார். அந்தக் கதை கலப்புமணம் பற்றிய ஒரு கதை. இந்துப் பெண் ஒருத்தியை முஸ்லிம் வாலிபன் திருமணம் செய்கிறான்.
ஏழைப் பிள்ளைகளை சீதனம் பெறாமல் திருமணம் செய்ய இளைஞர்கள் மறுக்கும் நிலையில் கலப்புமணம் என்பது தவிர்க்க முடியாதது.
ஒரு சமூகத்தின் வேண்டப்படாத முகத்தை ஊர்மானம் என்ற இந்தக் கதையில் நாங்கள் காணலாம். உதவாமல் இருந்து கொண்டு உபத்திரவம் செய்பவர்களின்முகத்தில் காறித் துப்புகிறது இந்தக் கதை.
இன்னும் ஒரு கதை துரோகி என்பதாகும். யார் துரோகி என்பதற்கான வரைவிலக்கணத்தை இந்தக் கதையின் ஊடாக முன் வைக்கிறார் கோபாலகிருஷ்ணன் அவர்கள்.
இனக்கலவரம் ஒன்றின்போது தன்னோடு வேலை செய்த சிங்களவர்களை பத்திரமாக அனுப்பி வைத்த தமிழ் மேலதிகாரியை அங்கே வேலை செய்யும் இன்னுமொரு அதிகாரி துரோகியாக அடையாளப்படுத்த முயற்சிப்பதும் அதே அதிகாரி வேறொரு சந்தர்பத்தில் அங்கு வேலை செய்யும் தமிழர்களை பிரதேசவாதம் பேசி கூறு போட முயற்சி செய்ததுமான கதை.
இனக்கலவரம் ஒன்றின்போது மாற்று இனத்தவரை காப்பாற்றுபவன் துரோகியா? அல்லது தம் இனத்துக்குள்ளே பிரதேசவாதம் பார்ப்பவன்துரோகியா?யார் துரோகி என்பதை வாசகர்களே தீர்மானிக்க விட்டுவிடுகிறார் கதை சொல்லி செங்கதிரோன்.
சகோதரத்துவம் என்ற இன்னொரு கதையும் இனங்களுக்கு இடையே நல்லுறவை விதைக்கும் ஒரு கதையாகும்பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக பொத்துவில் தமிழ் மக்கள் கோமாரி பிரதேசத்துக்கு இடம் பெயர்ந்து செல்கிறார்கள்.
ஒரு முஸ்லிம் இளைஞன் பாரிசவாத நோயால் பீடிக்கப்பபட்ட தமிழ்தாயை தன்னிடம் ஒப்படைத்துவிட்டு நீங்கள் கோமாரிக்குப் போங்கள் என்று ஆலோசனை கூறுகிறான் ஆனால் அந்தத் தமிழ் குடும்பம் அவருடைய சைக்கிளை மாத்திரம் இரவல் பெற்றுக் கொண்டு பாரிசவாதம் வந்த தாயை பிள்ளைகள் சைக்கிளில் ஏற்றி சுமந்து செல்லும் ஒரு கதை தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையி லான நல்லிணக்கத்தை விரும்பும் ஒரு சிறுகதையாளனின் உணர்வுகளை வெளிச்சமாக்கிக் காட்டுகிறது கதை.
பேய் பிசாசு ஆவி ஆத்மா போன்ற விடயங்களைப் பேசும் மூன்று கதைகள் இத்தொகுதியில் உள்ளன.யாவும் கற்பனையல்ல,அந்த ஏவறைச் சத்தம், கூடுவிட்டு என்பனவே அக்கதைகள்.
நட்டநடு ராத்திரியில் காட்டுப் பாதையில் செல்லும்போது வாகனம் பழுதடைந்து விடுகிறது. இருவரும் மெள்ள மெள்ள வாகனத்தை தள்ளிக் கொண்டு செல்ல இன்னுமொருவரும் சேர்ந்து அந்த வாகனத்தை தள்ளுகிறார்.ஆனால் அது யார் என்று அவர்களுக்கு தெரியவில்லை. யார் அது? அதுதான் பேய்.
அந்த ஏவறைச் சத்தம் என்ற மற்றொரு கதையில் இறந்தவரின் ஆத்மா வருகிறது.ஒருவர் மரணம் அடைந்துவிட்டால் அவருக்கான எட்டாம் நாள் சடங்கில் படையல் அல்லது மடை வைத்தல் இந்துக்களின் வழமை.
படையல் செய்து அறையில் வைத்து கதவுகளை மூடி விளக்குகளை அணைத்துவிட்டு வெளியில் அமர்ந்திருக்கும் பொழுது மரணித்தவரின் ஆத்மாஅங்கு வந்து உணவுகளை உண்டு விட்டு செல்வதாக ஒரு ஐதீகம் உண்டு. இந்தக் கதை அப்படிப்பட்ட நிகழ்வையே பேசுகின்றது.
குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் வாசலில் வெளியில் இருட்டில் இருக்கிறார்கள். இதனை எழுதிய கதைசொல்லி இவற்றில் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை தன்னுடைய மனைவியிடம் மட்டும் சொல்லிவிட்டு வெளியில் தெரியாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார்.
சற்றுநேரத்தில் கதை சொல்லியின்காதுகளில் ஒரு ஏவறைச் சத்தம் கேட்கிறதுஅது கதை சொல்லியின் தாயின் ஏவறைச்சத்தம். எதிர்பாராத அதிர்ச்சியோடு கதை முடிகிறது.
இறந்தவர்களுக்காகச் செய்யப்படும் எட்டாம் நாள் சடங்குபற்றிய எந்த நம்பிக்கையும் இல்லாத கதை சொல்லி அந்த ஏவுறைச் சத்தம் ஒன்றின் மூலம் இறந்தவரின் ஆத்மா வருவதை எண்பிக்கின்றார். அதுவே இந்தக் கதையின் முடிவின் திரும்பு புள்ளியாகும்.
மூன்றாவது கதை கூடு விட்டு என்பதாகும்உடலில் இருந்த உயிர் வேறாகி இன்னு மொருவரின் உயிரற்ற உடலுக்குள் சென்று இயங்குவதை கூடுபாய்தல் என்று சொல்லுவார்கள்.
பரகாயா பிரவேசம் என்று இதற்கு இன்னுமொரு பெயரும் உண்டு..சில யோகா கலாசார நிலையங்களில் கூடு விட்டு கூடு பாயும் வழிமுறைபற்றி சொல்லிக் கொடுக்கிறார்கள்திருமூலர் என்ற சித்தர் மூன்று தடவைகள் கூடுவிட்டு கூடு பாய்ந்ததாக அவரின் வரலாறு கூறுகின்றதுஆனால் செங்கதிரோனின் கதை சற்று வித்தியாசமானது.
கூடு விட்டு என்ற தலைப்பில் வரும் கதையில் உயிர் வேறாகி வெளியே வந்து காட்சியொன்றினைப்பார்த்து விட்டு மீண்டும் கட்டிலில் கிடக்கும் பழைய உடலுக்குள் வந்து புகுந்து விடுகின்றதுகூடுவிட்டு கூடு பாய்தல் பற்றிய கதையில் பாதியளவில் கூடுபாயும் வித்தியாசமான கதை.
யாவும் கற்பனையல்ல என்ற பேய்பற்றிய கதையும் அந்த ஏவறைச் சத்தம் என்ற ஆத்மாபற்றிய கதையும் கூடு விட்டு என்னும் இன்னுமொரு கதையும் மூன்று வெவ்வேறான தளத்தில் நின்று கதை சொல்லுகின்றன.
அதனூடாக இதுபோன்ற மாயாவாத விடயங்களில் நம்பிக்கை இல்லையென்ற தனது கொள்கையில் கதைசொல்லி தொடர்ந்து உறுதியாக இருக்கிறாரா? இல்லையா என்பதை வாசகனே அவனுக்கு வசதியாக ஊகிக்க விட்டு விடுகிறார் கதைசொல்லி.ஜாவர் சீதாராமன் போன்ற எழுத்தாளர்களின் கதைகள் பூதங்களோடு சம்பந்தப்பட்டது.
விக்கிரமாதித்தன் கதையின் சில அங்கங்களிலும் அம்புலிமாமா பத்திரிகைக் கதைகளிலும் பல மாயாவாத கதைகளை நாங்கள் வாசித்திருக்கிறோம்.
இயல்பு வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட கூறுகளை நடக்குமெனக் காட்டும் எத்தனமே மாயாவாத கற்பனைக் கதைகள் என்றால் ஈசாப் எழுதிய நரியும் திராட்சைப்பழமும் கதையும் மாயாவாத கற்பனையில் அடங்குமா என்ற கேள்வி எழுகிறது.
புலால் உண்ணியான நரி தாவர வகையில் அடங்கும் திராட்சைப்பழத்தை உண்ணுமா? இல்லையே. சமகால சிறுகதைப் பரப்பில் இன்று இடம்பெற்று வரும் மாயாவாதக் கதைகளில் நின்றும் விலகி புதிய திசையில் பயணம் செய்கிறார் செங்கதிரோன் என்பதை மேலுள்ள மூன்று கதைகளும் தெளிவாக்குகின்றன.கரப்பத்தான் பூச்சி என்றொரு சின்னக் கதை வருகிறது.
கரப்பான்பூச்சிகளை அடித்துக் கொல்லும் கதை சொல்லி உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இரண்டு கரப்பத்தான்பூச்சிகளைஅடிக்க வேண்டாம் பாவம் என்று தனது சின்ன மகனைத் தடுத்து விடுகிறார்.
உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அவற்றுக்கு இடையூறு விளைவிப்பது பாவம் என்ற கருத்தியலை மகாபாரதக் கதைக்குள் சென்று பாண்டுவின் கதையை நமக்கு சாட்சியமாகக் கொண்டுவந்து நிறுத்துகிறார்.
உடலுறவு என்பது ஒரு உயிரியின் உடல் தேவை. அது அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது விழுமியம் சார்ந்தது. அதனை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் பாங்கில் நமக்குச் சொல்கிறார் கதை சொல்லி.
மனிதாபிமானப் பாலியலை எழுத்துக்குள் கொண்டுவந்த மட்டக்களப்பைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை இன்றுஉயிருடன் இருந்திருந்தால் இக்கதை எழுதியமைக்காக செங்கதிரோனை வீட்டுக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்திருப்பார்.
தொகுதிக்கு முடிசூடி மகிழ்கிறது காப்பத்தான் பூச்சி கதை. லயன் என்ற ஒரு கதை தொகுதியில் உள்ளது. லயன் என்பது மற்றவர்களுக்கு தேவை உணர்ந்து உதவும் மனப்பாங்கு கொண்ட குடிகாரன் ஒருவனின் வளர்ப்பு நாய். எஜமானுக்காக தானே முன் வந்து உயிரை விடும் ஒரு நாயின் கதை.
நன்றியுள்ள விசுவாசம் பற்றி கதை சொல்லி இந்த கதையின் மூலம் நமக்கு பாடம் நடத்துகின்றார். இதுபோன்ற சிறு பிராணிகளை முன் வைத்து கதைகள் சொல்லும் வழமை பெரும்பாலும் வெளிநாட்டவர்களிடமே உண்டு. நம்மவர்கள் சிலரும் சில கதைகளை எழுதி இருக்கின்றனர். அவர்களில் கோபாலகிருஸ்ணனும் ஒருவர்.
ஆறறிவு படைத்த தனது எஜமானின் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஐந்தறிவு நாய் தன் உயிரைப் பணயம் வைக்கும் கதை. நெஞ்சை நெகிழ வைக்கிறது லயன்.
துறவு, ராஸ்கல் ஆகிய இரண்டு கதைகளும் சமாந்தரத் தன்மை கொண்ட கதைகள். தெளிவான சிந்தனையோடும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பக்குவத்தோடும் கதாயகன் தனது வாழ்வை அமைத்துக் கொண்டவன். ஆனால் அவனுடைய நடவடிக்கைகளை சந்தேகக் கண்கொண்டு சமூகம் பார்க்கிறது.
ஏழைக் கிழப்பெண் ஒருத்தி தன் சம்பாத்தியத்தினை பஸ்ஸினுள் திருடனிடம் பறிகொடுத்து அழும்போது திருடு போனபணத்தை அவளுக்குக் கொடுத்து உதவுகிறான் கதையின் நாயகன்.
உன்னை ஏமாற்றி அவள் பணம் பெற்றுக் கொண்டாள் என்று பஸ்ஸால் இறங்கி வந்து சக நண்பன் கூறியபோது அதனை மறுத்து அவனுக்குஏசுகிறான் நமது நாயகன்.
அவ்வாறே ராஸ்கல் என்ற கதையும் நகர் கிறது. மாலை 5 மணிக்கு பின்னரான ஒரு அவதிப்பொழுதில் வெளியூரில் இருந்து வந்தஒரு பெண்ணின் நிலைமையை அவதானித்து அழைத்து விசாரித்து ஓட்டோ ஒன்றை வாடகைக்கு அமர்த்தி காரியத்தை முடித்து நேரகாலத்தோடு வீடு செல்ல உதவுகிறான்.
அவளுக்கு பணம் கொடுத்து உதவி செய்தபொழுது அதனை வித்தியாசக் கண்கொண்டு பார்த்த ஒருவனை ராஸ்கல் என்று ஏசி அவனதுகன்னத்தில் அறைகின்றான்.
இன்றைய சமூகத்தின் நிலையை ஒலிபரப்புச் செய்கிறது இந்தக் கதைகள். இவ்வாறான நிலைமைகளுக்கு எதிராக எப்பொழுதுமே குரல் கொடுப்பவர் கதை சொல்லி என்று .சமூகத்தின்மீது எட்டி உதைக்கிறது இந்தக் கதைகள்.
அங்கிருந்து வந்தவர்கள் என்ற கதை தமிழ் மக்களின் இயக்க அரசியலைப் பேசுகிறது.ஒவ்வொரு இயக்கங்களினதும் பின்னால் மறைதேற்றம் ஒன்று உண்டு என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் கதை.
ஒன்று மறியாத குழந்தை தன்னை நெஞ்சில் அணைத்து தோளில் போட்டு வளர்த்தவர் யார் என்பதை மட்டும் அறியும் என்று குழந்தை உளவியல் பற்றிச் சுழலுகிறது ஒரு குழந்தையின் அழுகை என்ற கதை.
இவ்வாறாக தொகுதியின் ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு வகைத்துதொகுதியின் சிறப்பு என்பது அளவில் சிறிய கதைகள் என்பதுதான்.
புதுமைப்பித்தன் நவீன சிறுகதையின் முன்னோடி. அவன் பொன்னகரம் என்ற கதையை இரண்டு பக்கங்களிலும் துன்பக்கேணி என்ற கதையை முப்பத்தி இரண்டு பக்கங்களிலும் எழுதினான். எழுத்து விஞ்ஞானி எஸ்.பொன்னுத்துரை தனது தேர் என்ற கதையை நீளமாகவும் சுவை என்ற கதையை 90 சொற்களிலும் எழுதினார். எனவே ஒரு சிறுகதையின் நீளம் முக்கியமானதல்ல. தேவையின் அளவைப் பொறுத்தது.
இத்தொகுதியில் எல்லா கதைகளுமே சிறிய கதைகள்.தேவையும் அதுதான் என்பதால் சோம்பல் முறிக்காமல்சுமையாக இருக்காமல் தொய்வுகள் எதுவுமின்றி கதை இனிதேநகர்கிறது.
தொகுதியின் இன்னுமொரு சிறப்பு கதைக்கான பொருள் சாதாரண நாளாந்த விடயங்கள் என்பது.அணிந்துரை வழங்கிய பேரா. செ.யோகராசாவும் இத்தொகுதியின் நான்கு கதைகள் தவிர ஏனைய கதைகள் சாதாரண விடயங்களை பேசுவதாக சொல்லி உள்ளார்.
இதுவும் சிறுகதைப் பொருளா? என மூக்கில் விரல் வைத்துப் பார்க்கும் விடயத்தை சிறுகதையின் பேசுபொருளாக்கியுள்ளார் செங்கதிரோன்.
புலம் பெயர் வாழ்வு, போர்க்கால அநுபவம்,பெண்ணிலைவாதம்,சாதி ஒழிப்பு, சீதனக் கொடுமை, பாலுணர் ச்சிச் சிக்கல் என்று கதைக்குக் கருதேடி அலைந்து திரியாமல் நமது கைக்கெட்டிய தூரத்தில் இருந்து கதையின் பேசுபொருளைத் தேடியெடுத்து கோர்வையாக்கி இத்தொகுதியை நமக்குத் தந்துள்ளார்செங்கதிரோன்,
கதையில் ஏதாவது அகலிப்பை நிகழ்த்துமாயின் அதுவே சிறுகதைக்கான பேசுபொருளேதவிர சாதாரணம், விசேசம் என்பதெல்லாம் போலியான கோட்பாடுகளாகும்.இத்தொகுப்பின் அனைத்துக் கதைகளினதும் பேசுபொருள் கதைக்குள் புதிது சமைக்கின்றது.
அதன்மூலம் சமகால இலக்கியச்செல்நெறியில் இருந்து விலகி செங்கதிரோன் வேறுபட்டு நிற்கிறார்.பிறிதொரு சிறப்பம்சம் உவமைகளை கதைகளை நுட்பத்துடன் கையாள்வதாகும்.
தவளை பிடிக்க என்று வீட்டுக்குள் நுழைந்த சாரைப்பாம்பு மண்ணெண்ணெய் ஊற்றியவுடன் விரைவாக நழுவி வெளியே செல்வது போல இளைஞர் கூட்டத்தினர் நழுவிச் சென்றனர் என்று ஊர்மானம் கதையிலும்தூண்டிலில் அகப்பட்ட மீனை நீரிலிருந்து வெளியே தரையில் தூக்கிப் போட்ட மாதிரி துடிப்பு என்று அங்கிருந்து வந்தவர்கள் என்ற கதையிலும்அம்பறாத் தூணியில் அம்புகளை அடுக்கினாற்போல பனங்கிழங்குகள் கட்டுக் கட்டாய் பெட்டிக்குள் அடுக்கப்பட்டிருந்தன என்று துறவு என்ற கதையிலும்என்று தொகுதி முழுவதும் உவமைகளும் படிமங்களும் ஆமைகளாக நகர்ந்தும் முயல்களாகத் துள்ளி ஓடியும் திரிவதை அவதானிக்கலாம்.
சிறப்பான மொழிக் கட்டமைப்பும் தொகுதியைச் சிறப்பிக்கின்றது.பிரதேசமொழிப் பயன்பாட்டை லாவகமாகக் கையாண்டமை பற்றிபல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.
எங்கடையாக்கள வெலிக்கடையில சீனாக்கள் சாக்கொண்டு போட்டினம். நீர் என்னென்டாக் காணும் அவயளக் காப்பாத்தி நேற்றுஅவயன்ர ஊருக்கு அனுப்பிப் போட்டெல்லோ வாறீர். நீரெல்லாம் தமிழினத் துரோகி ஐசேஎன்று யாழ்ப்பாணப் பேச்சுவழக்கும்
நானும் ரெண்டு நாளா ஊர்ல இல்ல மனே.மல்லிகத் தீவுக்கு வட்டைக்குள்ள போய்த்தன்.வாற வழில இவன் வண்ணார வைரண்ட பொஞ்சாதிதான் என்னவோ சொன்னாள் என்று அம்பாரைத் தமிழும்
இன்னும் மட்டக்களப்புத் தமிழும் என்று மாறி மாறி பிரதேச மொழிப் பயன்பாட்டை துல்லியமாக வெளிக் கொணரும் மொழிக் கட்டமைப்பை செங்கதிரோன் வல்லமையோடு கையாண்டுள்ளார்.
இந்தத் தொகுதியில் மறைநோக்கு ஒன்றுமில்லையா? விவரணப் பாங்கிலான சில விபரிப்புகள் நேரத்தை வீணாக்குகின்றது.எடுத்துக்காட்டாக சகோதரத்துவம் என்றகதையில் சுதா யார் என்று வரும் பகுதியைக் குறிப்பிடலாம்.இது குறைபாடு அல்ல. சுருக்கமாக விளக்கின் சிறப்பாக இருந்திருக்கும் என்ற சொல்வதுதான்.
மிடுக்கான தலைப்பும் அதிரடியான முடிப்பும் கையடக்கமான கதை அளவும்வசீகரமான தமிழ் நடையும் வாலாயமான கதை உத்தியும் வண்ணத்துக்கொன்றும் வகைக் கொன்றுமாக கதைகள் தரும் பாங்கும் என்று கைதட்டல் வாங்குகிறது யாவும் கற்பனையல்ல என்ற செங்கதிரோனின் சிறுகதைத் தொகுதி