இலக்கியச்சோலை

நில ஆக்கிரமிப்பால் ஒடுக்கப்படும் பாலஸ்தீனமும் தமிழ் மக்களும் ! “பாலஸ்தீனம் – எரியும் தேசம்” நூல் :

பாலஸ்தீன மக்கள் மிகவும் நெருக்கடியான காலத்தில் இனப்படுகொலை ஒன்றுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். உலக நாடுகள் வெறுமனே கண்டிப்பதுடன் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர். இவ்வாறான ஒரு சூழலில் ஒடுக்கப்படுகின்ற, நிலங்களைப் பறிகொடுத்த, இனப் படுகொலையை எதிர்கொண்ட தமிழ் இனமாக பலஸ்தீன மக்களுடன் உணர்வுத் தோழமையுடன் தோள் கொடுத்து நிற்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு உள்ளது.

இந்த நோக்கத்தில் ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் பாலஸ்தீன மக்கள் எதிர்நோக்கிய, நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக “பாலஸ்தீனம் எரியும் தேசம்” என்ற தலைப்பில் நூலாக “ஜீவநதி” வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது என இந்நூலின் முன்னுரையில் கனடா எழுத்தாளர் மீரா பாரதி குறிப்பிட்டுள்ளார்.

இந்நூலில் நிகழ்கால பாலஸ்தீன போர்க்கள நிகழ்வுகளின் ஆய்வுக் கட்டுரைகள் பல வெளியாகியுள்ளன.

நூறாண்டுகளாக தொடரும் துயரத்தை சுமந்த எரிகின்ற பாலஸ்தீன தேசம் பற்றிய வரலாற்றுப் பார்வையில் கட்டுரைகள் இந்நூலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஜீவநதி வெளியீட்டகத்தின் 299 ஆவது வெளியீடாக “பாலஸ்தீனம் – எரியும் தேசம்” எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியாகி உள்ளது.

இன்று பாலஸ்தீனம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு பல துண்டுகளாக்கப்பட்டு சிதறடிக்கப்பட்டுள்ளது. சர்வதேசமும் இவர்களை கைவிட்டுள்ளது. இந்த மக்களின் விடுதலைக்காகப் போராடிய பாலஸ்தீன விடுதலை இயக்கம் அதிகாரத்தை வைத்திருந்த போதும் தமக்குள் ஊழல்கள் செய்து பலம் குன்றிப் போயுள்ளது. இந்த நிலையில் அதீதிவிர நிலைப்பாடுடைய ஹமாஸ் போன்ற இயக்கங்கள் எழுச்சி பெற்றுள்ளதுடன் பாலஸ்தீன மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளன. இவர்கள் தேர்தலில் பங்குபற்றி மக்களால் தெரிவு செய்யப்பட்டு காசா பகுதியில் தம் ஆட்சியை நடாத்துகின்றார்கள் என இந்நூலின் முன்னுரையில் மீரா பாரதி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்தில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவும் நில ஆக்கிரமிப்பு செயற்பாடுகள் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் நடைபெற்றுள்ளன. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் இதனை ஒப்பிட்டு ஆண்டு வரிசையில் தரவுகளுடன் விளக்குகின்றார்.

எவ்வாறு நிலங்கள் துண்டாடப்பட்டன, எவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டன, மக்கள் மீது எவ்வாறு போர் திணிக்கப்பட்டது. வன்முறைகளும் இடப்பெயர்வுகளும் காலனித்துவ நாடுகளின் சதிகளும் துரோகங்களும் அவர்களின் இரட்டை நிலைப்பாடுகளும், பிராந்திய முரண்பாடுகளை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த இந்த முரண்பாடுகளை ஊக்குவிப்பது ஆதரிப்பது, ஊடகங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது தடை செய்வது, ஊடகர்களை படுகொலை செய்வது, பொய்யான தவறான செய்திகளை வெளியிட்டு மக்களை திசை மாற்றுவது, ஏமாற்றுவது, சர்வதேச உறவுகளில் ஏற்படும் மாற்றங்களும் இதனால் இந்த மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும், ஒரு பக்கம் அமெரிக்காவும் மேற்குலகமும் மறு பக்கம் சீனாவும் ரஷ்சியாவும் இடையில் இந்தியா போன்ற நாடுகளின் தடுமாற்றங்களும் தவறான முடிவுகளும், ஐக்கிய நாடுகளின் சபையின் இயலாமை, எனப் பல பொதுத்தன்மைகளை குறிப்பிட்டுக் காட்டுகின்றார். ஈழத்து இலக்கிய உலகில் நீண்ட காலம் அறிமுகமான ஐங்கரன் விக்கினேஸ்வரா நீண்ட காலமாக சர்வதேச அரசியல் விவகார ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவருபவர்.

சார்ள்ஸ், நவீனன் எனும் புனைபெயர்களாலும் அறியப்பட்டஇவரது படைப்புகள் பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளன.

ஈழத் தமிழர்கள் பாலஸ்தீன மக்கள் மீதான ஒடுக்குமுறையை புரிந்துகொள்ள பங்களிக்கின்றார். இப் புரிதலானது பாலஸ்தீன மக்களுடன் உணர்வுத் தோழமையுடன் ஒன்றுபட்டு செயற்படுவதற்கான விழிப்புணர்வை ஈழத்தமிழர்களுக்கு வழங்கும் என நம்புகின்றேன்.இரண்டு தேசத்தவர்களும் தமக்கு ஏற்பட்ட (வரலாற்று) அனுபவங்களிலிருந்து கற்று பரஸ்பரம் பகிர்ந்து ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருந்து செயற்பட வேண்டும். இதற்கு ஆழமான புரிதலும் நீண்டா கால தெளிவான நோக்கமும் இருக்க வேண்டும் என்றும் இந்நூலின் முன்னுரையில் மீரா பாரதி தெரிவித்துள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களாகிய ஈழத்தமிழர்கள் என்றும் ஒடுக்கப்பட்ட மக்களுடன் தம்மை அடையாளப்படுத்துவதே சிறந்த வழிமுறையும் அறமுமாகும். தற்போது வெளியாகியுள்ள “பாலஸ்தீனம் எரியும் தேசம்”கட்டுரைத் தொகுப்பு நூலானது பாலஸ்தீன மக்கள் மிகவும் நெருக்கடியான காலத்தில் இனப்படுகொலை ஒன்றுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் காலத்தில் வெளியாவது குறிப்பிடத்தக்கது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.