இலக்கியவாதியாகவும் அரசியல்வாதியாகவும் திகழும் ” செங்கதிரோன்” த. கோபாலகிருஷ்ணன்…… முருகபூபதி {இன்று டிசம்பர் 02 இல் புதிய நூல் வெளியீடு}
ஒரே குடும்பத்தைச்சேர்ந்த உறவினர்கள், பொது வாழ்வில் ஈடுபடும்போது, அவர்கள்அரசியலிலும், கலை, இலக்கிய, ஊடகத்துறையுடனும் நெருக்கமாகியிருந்தால்,நிச்சயமாக கருத்து முரண்பாடுகள் தவிர்க்கமுடியாதது.
நேரெதிர் துருவங்களாகியிருக்கும் இருவரில், ஒருவர் பற்றியே இந்த முதல் சந்திப்புதொடரில் இம்முறை பதிவுசெய்கின்றேன். அவர்தான் கிழக்கிலங்கையிலிருந்துஎழுதிக்கொண்டிருக்கும் இலக்கியவாதி – அரசியல்வாதி செங்கதிரோன்கோபாலகிருஷ்ணன்.
இவர் கவிஞர் காசி. ஆனந்தனின் மனைவியின் தங்கையைத்தான் மணம்முடித்திருக்கிறார். எனினும் காசி. ஆனந்தனும் இவரும் அரசியலில் வேறு வேறுதுருவங்கள்.
கோபாலகிருஷ்ணன், சிறுகதை, கவிதை, உருவகம், இலக்கிய ஆய்வு, விமர்சனம்,இதழியல் முதலான துறைகளில் ஈடுபாடுள்ளவர். அத்துடன் அரசியல் விமர்சனங்களும்எழுதிவருபவர்.
மட்டக்களப்பிலிருந்து செங்கதிர் என்னும் கலை, இலக்கிய பண்பாட்டுபல்சுவைத்திங்கள் இதழை வெளியிட்டவர்.
2011 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாம் கொழும்பில் நடத்திய முதலாவது சர்வதேசதமிழ் எழுத்தாளர் மாநாட்டின் பணிகளிலும் அர்ப்பணிப்புடன் இயங்கியவர்.அவ்வேளையில்தான் எனக்கும் அவருக்குமிடையிலான முதல் சந்திப்பு நிகழ்ந்தது.
தனக்கு சரியெனப்பட்டதை துணிந்து சொல்லும் திராணியும் வெளிப்படையானபேச்சும் இவரது ஆளுமைக்குச்சான்று. முன்னர் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணியில் ( E. P. R. L. F ) இவர் அங்கம் வகித்திருந்த காலப்பகுதியில் 1990ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி சென்னையில் சக்காரியா கொலனியில் அமைந்தஈ.பி.ஆர். எல். எஃப்.பின் பணிமனையில் பத்மநாபாவும் மேலும் சிலரும்கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அங்கு சென்றுதிரும்பியிருந்தமையால் உயிர் தப்பியவர்.
அந்தக்கண்டத்திலிருந்து தப்பிய பின்னரும் அரசியல் ஈடுபாடுகளிலிருந்த தீவிரம்குறையவில்லை. அம்பாறை மாவட்டத்தில் டொக்டர் விக்னேஸ்வரன் தலைமையில்சுயேட்சைக்குழுவின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டவர்.
இவர் எழுதிய தமிழர் அரசியலில் மாற்றுச்சிந்தனைகள் என்ற நூல் பற்றியஅறிமுகத்தில் பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம் இவ்வாறு பதிவுசெய்துள்ளார்:
இலங்கைத்தமிழ் மக்கள் தங்களது அரசியல் உரிமைப்போராட்டத்தின் வரலாற்றில்இன்று தெளிவானதொரு திசையறியாத இடரார்ந்த கட்டத்தில் நிற்கிறார்கள்.
உள்நாட்டுப்போரின் முடிவுக்குப்பின்னர், ஏழரை வருடங்களுக்கும் அதிகமான காலம்கடந்துவிட்ட நிலையில் அவர்கள் தங்கள் உரிமைப்போராட்டத்தின் அடுத்த கட்டம்குறித்து நிதானத்துடனும் விவேகத்துடனும் சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கிறார்கள். கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் அதிகமான காலகட்டத்தில்முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களிலிருந்து முறையான படிப்பினைகளைப்பெற்றுக்கொண்டு இன்றைய உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல்நிலைவரங்களுக்குப் பொருத்தமான முறையில் – அதேவேளை அடிப்படை அரசியல்அபிலாசைகளுக்கும் இலட்சியங்களுக்கும் சேதம் இல்லாத வகையில் தங்களதுஉரிமைப்போராட்டத்தை தொடருவதற்கான பாதையை வகுக்கவேண்டியவர்களாகதமிழ் மக்கள் இருக்கிறார்கள்.
தமிழர் அரசியல் பொதுவெளியில் ஆரோக்கியமான விவாதங்களுக்குஊக்கந்தரக்கூடியதாக இந்த நூலிலுள்ள அவரின் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன
செங்கதிரோன், நீர்ப்பாசனத்திணைக்களத்தின் பயிற்சிக்கல்லூரியால் முன்னர்வெளியிடப்பட்ட அருவி இதழில்தான் 1969 இல் தனது முதல் கவிதையைஎழுதியிருக்கிறார்.பாரதியார் எழுதியிருக்கும் முதல் கவிதை ( குயிலானாய்..! நின்னொடு குலவியின்கலவி…) முதல் சிறுகதை ( துளசிபாய் அல்லது ரஜ புத்திரகன்னிகையின் சரித்திரம் )ஆகியன பற்றி விரிவான ஆய்வுகளையும் செங்கதிரோன் ஞானம் இதழில் எழுதியவர்.
கவிஞர் காசி ஆனந்தனுடன் இவருக்கு அரசியல் கருத்து முரண்பாடுகள்இருந்தபோதிலும், அவர் எழுதி வெளிவராத இரண்டு குறுங்கவிதைகளை ஞானம்இதழுக்கு அனுப்பியவர் செங்கதிரோன். அதனை இங்கே பதிவிடுகின்றேன்.யாழ்ப்பாணம் ஒடியல் கூழ் பற்றி காசி. ஆனந்தன் எழுதிய கவிதை: “நண்டிருக்கும்நல்ல இறாலிருக்கும் மீனின்துண்டிருக்கும் இன்பம் தொகையிருக்கும் – உண்டிருக்கும்ஆளுக்குச் சொர்க்கம் அருகிருக்கும் இத்தனையும்கூழுக்கிருக்கும் ஞானம்”
1972 – 1976 காலப்பகுதியில் இலங்கை சிறைகளில் தடுப்புக்காவலில் காசி.ஆனந்தன் இருந்தபோது அங்கு கைதிகளுக்கு தரப்பட்ட உணவு குறித்து எழுதப்பட்டவெண்பா:
” இரையாகும் பாணில் புழுக்கள் இருக்கும்சுரையளவு கல்லிருக்கும் சோற்றில் – அரையவியல்மாட்டிறைச்சித் துண்டில் மயிரிருக்கும் என்னுயிரைக்கேட்டிருக்கும் கீரைக்கறி”
1997 ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட மூதூர் எம்.பி. அ.தங்கத்துரைக்காகவும் அஞ்சலிக்கவிதை எழுதியிருக்கும் செங்கதிரோன், மல்லிகைஜீவாவின் பிறந்த தின காலத்திலும் நீண்ட வாழ்த்துக் கவிதை எழுதியிருப்பவர்.
நான் மட்டக்களப்பில் இவரிடம் சென்றிருந்த வேளையில் சென்னையில் கவிக்கோஅப்துல் ரகுமான் மறைந்திருந்தார். கவிக்கோ எனதும் இனிய நண்பர். முதல் முதலில்அவர் இலங்கை வந்திருந்த சமயம் நண்பர் கவிஞர் சோலைக்குமரனுடன் ( ஜவாத்மரைக்கார்) கொழும்பில் எஸ். எம். கமால்தீனின் இல்லத்தில் சந்தித்திருக்கின்றேன்.
மெல்பன் தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழாக்காலத்தில் வருகைதந்திருக்கும் கவிக்கோஎனதில்லத்திற்கும் இரண்டு தடவைகள் வந்திருக்கிறார்.கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றிய நினைவுகளை கோபாலகிருஷ்ணனுடன்பகிர்ந்துகொண்டபோது, 2002 ஆம் ஆண்டு கவிக்கோ இலங்கை வந்தவேளையில்தமிழ்ச்சங்கத்தில் கவிக்கோவுக்காக நடத்தப்பட்ட வரவேற்பில் தான் வாசித்தளித்தகவிதையின் பிரதியை காண்பித்தார்.
மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் இடையே நவீனத்துவம் நடத்திய நிழல்போரைதுல்லியமாக அதில் பதிவுசெய்திருந்தார்.
அதிலிருந்து சில வரிகள்:
பூப்படையாப் பெண்களெல்லாம்
பிள்ளைபெற வந்ததுபோல் – கவிதை
யாப்பறியாப் பேர்களெல்லாம்
பாப்புனைய வந்துவிட்டார்.
புற்றுக்குள் ளிருந்தீசல்
புறப்பட்டு வந்ததுபோல்
” புதுக்கவிதை”ப்புலவர்கள்
கொட்டும் குளவிக்
கூட்டைக்கலைத்தது போல்
எட்டுத்திக்கெங்கும்
இவர்கள்தான் ஏராளம்
வெற்றுத் தகரத்தில்
வீணை ஒலிக்குமா..? இக்
கற்றுக் குட்டிகளால் – தமிழ்க்
கவிதை செழிக்குமா..?
ஆதலினால் – கவிக்கோவே …!
அப்துல் ரகுமானே ..!
தடம் புரளா தென்றும்
தமிழ்க் கவிதைத்தேரோட
வடம் இழுக்க வாருங்கள் !
வாழ்த்துகிறோம் ! வாழ்த்துகிறோம். “
— இவ்வாறு ஈழத்து இலக்கியப்பரப்பில் தமது படைப்பாளுமையைஅழுத்தமாகப்பதிவுசெய்துவரும் செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணனிடம் ஈழத்துகலை, இலக்கிய உலகம் பற்றிய எமக்குத்தெரியாத பல தகவல்களும் இலங்கைஅரசியல் குறித்த சுவாரசியமான செய்திகளும் நிறைந்திருக்கின்றன. தற்போது கனகர்கிராமம் என்ற நவீனத்தை எழுதிக்கொண்டிருக்கிறார்.
அத்துடன் வாக்குமூலம் என்ற தலைப்பில் தொடர்ந்தும் அரசியல் பத்தியும்எழுதிவருகிறார்.
இம்மாதம் 02 ஆம் திகதி இவருடைய யாவும் கற்பனையல்ல என்றசிறுகதைத்தொகுதி மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் வெளியாகிறது.