மகிழ்ந்தேன் அகமகிழ்ந்தேன்!…. கவிதை – சங்கர சுப்பிரமணியன்.
எனது தாத்தா நூல்களைப் படித்தார்
அவர் படித்த நூல்கள் அனைத்தும்
மிகவும் கனமாக இருந்தன
எவ்வளவு கனம் என்பது தெரியுமா?
நூல்களின் பருமன் மூன்ற அங்குலம் இருந்தது
எனது அப்பா நூல்களைப் படித்தார்
தாத்தா படித்த நூல்கள் அளவுக்கு கனமில்லை
இருந்தாலும் அதன் பருமன் இரண்டு அங்குலம் இருந்தது
நானும் நூல்களை படித்தேன்
அவற்றின் பருமனோ ஒரு அங்குலமே இருந்தது
எனது மகனும் நூல்களைப் படிக்கிறான்
அவற்றின் பருமனோ ஒரு அங்குலம்கூட இல்லை
எனது பேரனிடம் நூல்களைப் படி என்றேன்
அலமாரியில் இருந்த நூல்களை காட்டினேன்
எனது தாத்தா முதல் என்மகன் வரை படித்த நூல்கள் அவை என்றேன்
நூல்களைப் படி அறிவைப் பெருக்கும் என்றேன்
என்னிடம் ஒரு வினா எழுப்பட்டுமா என்றான்
கேள் கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை என்றேன்
எங்கள் அப்பா பயன்படுத்திய
இன்னொரு அலமாரியில் அடுக்கி வைத்திருந்த
கனமான புத்தகங்களை எங்கே என்றான்
எதைப்பற்றி கேட்கிறாய்
கலைக்களஞ்சியமா என்றேன்
ஆம் என்று தலையசைத்தான்
என் அருமைப்பேரன் அவன்
விற்றுவிட்டோம் என்றேன்
ஏன் தாத்தா உங்களுக்கெல்லாம்
அறிவு பெருகிவிட்டதா அல்ல இனி
அறிவு தேவையில்லையா என
அறிவுக்களஞ்சியமாய் வினா எழுப்ப
வியந்து உறைந்தேன் ஒரு கனப்பொழுது
அவை இன்றைய உலகுக்கு தேவையில்லை
என்றேன்
கணனி கூட வேண்டாம் கைபேசி போதுமென்றேன்
ஒரு பொத்தானை அழுத்தினால்
பலவற்றை அறியலாம் என்றேன்
மாட்டு வண்டிகளையும் குதிரை வண்டிகளையும் எங்கே என்றான்
விஞ்ஞானத்தின் வளர்ச்சி
அவற்றை விழுங்கிவிட்டது என்றேன்
அலாரம் கடிகாரமும் அஞ்சல் வரத்தும்
குறைந்தது ஏன் என்றான்
கைபேசி வந்து கபளீகரம் செய்தது
என்று சொன்னேன்
கணனியிலும் கைபேசியிலும்
அறிவுலகம் சுருண்டு கிடக்கிறது
சமூக ஊடகங்களோ விரிந்து
எல்லையற்று பரந்து கிடக்கிது
பொது ஊடகங்கள் பெருமளவு
பெருகிக் கிடக்கின்றன
கணனியும் கைபேசியும்
சமூக ஊடகங்களும் பொது ஊடகங்களும்
இல்லாதிருந்த காலங்களில்
அறிவை வளர்த்திட நூல்கள் உதவின
என்று சொன்னான் என் அருமைப் பேரன்
இப்போது அறிவென்பது
நூல்களில் மட்டும் அடங்கவில்லை என்றான்
நூல்கள் எல்லாம் நூலகத்தில் உண்டு
நூல்களை நாடுவோர் நூல்களை நாடட்டும்
நூல் வாசித்து அறிவு பெறுவோர்
அவ்வாறே வாசித்து அறிவைப் பெறட்டும்
அறிவைப் பெறுவதற்றகும் ஒரே ஒரு
வழிதான் என்றில்லை
வழிகள் பலவாறு விரிந்து கிடக்கின்றது
அவரவர் வழி அவரவர்க்குண்டு
என்வழி தனிவழி என்றான்.
வியந்து பார்த்து வியப்புடன் நின்றேன்
என்னுடன் பயணிக்க இங்கே பலருண்டு
இருப்பினும் நானோ முகநூலில்
மூழ்கிக் கிடக்கிறேன்
கீச்சகத்தில் கிறங்கிக் கிடக்கிறேன்
புலனமதில் விடாது பயனித்து
புலகாங்கிதம் அடைகிறேன்
என் பேரனிடம் மட்டும் நூலப்படி என்கிறேன்
வாசிப்பு உன்னை வளப்படுத்தும் என்கிறேன்
பகிர்ந்து கொண்டால் பலனுண்டு என்கிறேன்
திரும்பி பார்க்கிறேன் இப்போதும் மக்கள்
வாசித்து கொண்டிருந்ததை அறிந்தேன்
ஊருக்கு உபதேசம் எனக்கில்லை எனினும்
மகிழ்ந்தேன், மகிழ்ந்தேன் அகமகிழ்ந்தேன்!