யாழ் நூலின் தோற்றம் -செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன்.
விபுலானந்த அடிகளாரைப் பற்றிய வாசிப்பு அனுபவங்களினூடாகப் பயணிக்கும்போதுயாழ்நூலின் தோற்றத்திற்கு அடிகோலிய இரண்டு காரணிகளை எம்மால் உணர்ந்து கொள்ளமுடியும். ஒன்று ‘சிலப்பதிகாரம்’ மீது அடிகளாருக்கு இருந்த அதீதபற்று. மற்றது மட்டக்களப்புவாவியின் ‘பாடும்மீன்’ இசையில் அடிகளார் தன் மனதைப் பறிகொடுத்தமை.
கிழக்கிலங்கையில் அடிகளார் பிறந்த பூமியான காரைதீவுக் கிராமத்தில் அமைந்துள்ள ‘கண்ணகைஅம்மன் ஆலயம்’ பிரசித்தமானது. இளமைப்பருவத்தில் தன் தாயாரான கண்ணம்மையுடன்இவ்வாலயத்திற்குச் சென்று வழிபட்டதோடு வருடாவருடம் நடைபெறும் திருவிழாவிலே -கண்ணகை அம்மன்; குளுர்த்திச் சடங்கிலே பாடப்பெறும் ‘கண்ணகிவழக்குரைக் காதை’ப்பாடல்களில் தோய்ந்தார். மட்டுமல்லாமல் திருவிழாக்காலங்களிலே நிகழ்த்தப்பெறும்சிலப்பதிகாரச் சொற்பொழிவுகளையும் மாந்தி மகிழ்ந்தார்.
சிலப்பதிகார ஓலைச்சுவடியைத் தேடி எடுத்து அதனை உ.வே.சாமிநாதஐயர் அச்சில் பதிப்பித்த1892 ம் ஆண்டிலேயே அடிகளார் பிறந்தார். அடிகளாரின் தந்தையின் பெயர் சாமித்தம்பி. தாயின்பெயர் கண்ணம்மை. பெயர்ப் பொருத்தங்களும் பொருந்துமாறு அமைந்தமையும் கவனத்தைப்பெறுகிறது. இந்தப் பின்புலத்தில் இளமைப் பராயத்திலிருந்தே அடிகளாருக்குச்சிலப்பதிகாரத்தின்மீது அதீத பற்று ஏற்பட்டிருந்தது. (யாழ்நூல் அரங்கேற்றத்தின்போதுகைலாயபிள்ளை எனும் அறிஞரிடம் சிலப்பதிகாரம் பயின்றபோது தமக்கு யாழில் மனம்சென்றதாக அடிகளார் கூறியுள்ளார்) பின்பு மதுரைத்தமிழ்ச்சங்கப் பண்டித பட்டமும்,விஞ்ஞானத்தில் பி.எஸ்.சி.பட்டமும் பெற்றபோது அடிகளாரின் அறிவுப் புலம் ஆழமும் அகலமும்பெற்றது.
அடிகளார் சிலப்பதிகாரத்தைக் கற்று ஆய்ந்து அதில் தோய்ந்தபோது சிலப்பதிகாரத்தில்இசைநுட்பம் செறிந்த பகுதிகளுக்குக் குறிப்பாக ‘அரங்கேற்றுகாதை’ப் பகுதிக்கு முழுமையானஉரை இருக்கவில்லை என்பதை உணர்ந்தார்.
இசை நுட்பங்களைக் கூறும் பண்டைக்காலத்தில் இருந்ததாகக் கருதப்படுகின்ற-முதுநாரை,முதுகுருகு, பஞ்சமரபு, பஞ்சபாரதீயம், பதினாறுபடலம், இந்திரகாளியம், வாய்ப்பியம் முதலியஇசைத்தமிழ்நூல்கள் மறைந்து போயிருந்தன. சிலப்பதிகார உரையாசிரியர்களின் காலத்தில்வழக்கிலிருந்ததாக அறியப்படுகின்ற ‘இசை நுணுக்கம்’ எனும் நூலும் பின்னாளில் இல்லாமற்போய்விட்டது. இந்நூல்களின் துணைகொண்டு அடியார்க்கு நல்லார் எழுதிய இசைநுட்பங்களைவிளக்கும் உரைப்பகுதிகளும் கிடைத்தில. இந்தப் பின்புலத்தில்தான் சிலப்பதிகாரத்தில்அரங்கேற்றுகாதையில் இளங்கோவடிகளால் இசைநுட்பம் தெரிந்தவனாகக் கருதப்படும்யாழாசிரியன் கூறும் பாடல்வரிகளுக்கு உரையெழுத சுவாமி விபுலானந்த அடிகளார் துணிந்தார்.
அடிகளாருக்கு இயல்பாகவே இசைத்தமிழ் மீது ஈடுபாடு இருந்தது. இதனை அவர் 1942ம் ஆண்டுஆகஸ்ட் 01ம் திகதி மதுரையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாட்டில் இயற்றமிழ் அரங்கிற்குத்தலைமைத்தாங்கிய போது ‘இயல்இசை நாடகம்’ எனும் பொருளில், நிகழ்த்தியதலைமையுரையிலிருந்து தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். அந்த உரையின் இசைத்தமிழ்குறித்த பகுதிகள் வருமாறு.“பாரத நாட்டு இசையினை குறித்து ஆங்கிலத்திலே நூலெழுதிய ‘பக்ஸ் ஸ்டிராங்கு வேய்ஸ்’என்னும் பேரறிஞரும் பிறரும் வட மொழியிசை நூல்களையே குறிப்பிட்டுச் சென்றனர்.
தமிழராகிய யாம் நமது இசைக் கலையினைக் குறித்து அவர் போன்றோருக்கு அறிவித்திலேமாதலின், சாரங்கதேவர் இயற்றிய சங்கீதரத்திநாகரம் தேவாரத்திற் பொதிந்த தெய்வஇசையினைப் பெருகக் குறிப்பிடுகின்றதென அறிந்திருந்தும் நம்மவருள் ஒரு சாரார்அவ்வுண்மையினை உலகிற்குணர்த்தாது மறைக்க முயல்கின்றனர்”
“வடமொழிப்பரதமும் சங்கீதரத்திநாகரமும் சிறந்த முறையிலே தமிழில் மொழிபெயர்க்கப்படுமாயின் அம்மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழிசையின் மறுமலர்ச்சிக்குப் பெரிதும்உதவுவதென்பது எனது கருத்து”“கழிந்த பத்தாண்டுகளாகப் பழந்தமிழிசை மரபினை யாம் ஆராய்ந்து கொண்டுவருதலைஇப்பேரவையானது நன்கறியும். ஆதலினாலே பழந்தமிழிசை மரபு விரைவிலே நூல்களாகவரலாம்”
அடிகளார் அண்ணாமலைப் பல்கiலைகழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியகாலத்தில் (1931 – 1933) அங்குள்ள இசைக்கல்லூரியையும் மேற்பார்வை செய்யும்பொறுப்பினையும் ஏற்றிருந்தார். அப்போது அங்கு இசைக்கல்லூரி ஆசிரியராகவிருந்த இசைப்பேரறிஞர் சங்கீத கலாநிதி. பொன்னையாபிள்ளை அவர்களிடம் கர்நாடக சங்கீதம் எனஅழைக்கப்பெற்ற இசையின் அமைப்பினைச் சீராக அறிந்துகொண்டு இசைத்தமிழ் ஆராய்ச்சியில்ஈடுபடத் தொடங்கினார். பண்டைய இசைத்தமிழ் நூல்களெல்லாம் என்றோ மறைந்துபோய்விட்டநிலையில் தனது கணித அறிவினதும் ஒலி பற்றிய விஞ்ஞான அறிவினதும் துணை கொண்டுசிலப்பதிகார அரங்கேற்று காதையில் இசைநுட்பம் பொதிந்த இருபத்தைந்து பாடல்வரிகளுக்குவிளக்கவுரை கண்டார்.
அடிகளார் தனது இசை ஆராய்ச்சியின் போது பல்வகை யாழ் இனங்களையும் வீணைகளையும்அடையாளம் கண்டார். முளரி, யாழ் போன்ற யாழினங்களையும் – சுருதிவீணை, பாரிசாதவீணை,சதுர்தண்டி வீணை முதலியவற்றையும் கண்டறிந்து அவற்றை சங்கீதகலாநிதிக.பொன்னையாபிள்ளை அவர்களின் புதல்வன் சங்கீதபூஷணம் சிவானந்தம்பிள்ளை அவர்களின்மூலம் ஒலிக்கவும் செய்தார்.
அண்ணாமலைப்பல்கலைக்கழகப் போராசிரியர் பதவியை 1933 இல் துறந்த அடிகளார்‘பிரபுத்தபாரத’ எனும் ஆங்கிலச் சஞ்சிகைக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்பதற்காக இந்தியாவின்வடக்கே இமயமலைச்சாரலில் அமைந்த மாயாவதி எனும் இடத்திற்குச் சென்றார். அங்கு கைலாயதரிசனம் முடிந்தபின் இசைத்துறை ஆராய்ச்சியைத் தொடர்வதற்காக வடக்கிலிருந்துதென்னாட்டிற்கு மீண்டார்.
தென்னாட்டிலிருந்து தமிழ்ப்பணி – ஆன்மீகப்பணி – சமூகப்பணி ஆற்றிக்கொண்டிருந்த காலத்தில்தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்துடன் நெருங்கிய இணைப்பை ஏற்படுத்தினார்.
1934 இல் கரந்தைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவுக்குத் தலைமை தாங்கினார். அடிகளாரின்இசைத்தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் கரந்தைத் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட ‘தமிழ்ப்பொழில்’ எனும்திங்கள் ஏட்டில் வெளிவரத் தொடங்கின. ‘செந்தமிழ்’இ ‘விடுதலை’ ஆகிய ஏடுகளிலும் இக்கட்டுரைகள் பிரசுரம் கண்டன. சென்னைப்பல்கலைக்கழகம் 1936 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்அடிகளாரை அழைத்து இசைத்தமிழ்பற்றி ஆறுநாட்கள் பேருரை நிகழ்த்த வைத்தது.
அடிகளார் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திற்குத் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பதவியேற்கச்செல்லுமுன்னர், இலங்கையில் இராமகிருஷ்ணமிசன் பாடசாலைகளின் முகாமையாளராகவும்மட்டக்களப்பு கல்லடி, சிவானந்தா வித்தியாலய அதிபராகவும் விளங்கினார். அக்காலத்திலேயேதனது இசைத்தமிழ் ஆராய்ச்சியை ஆரம்பித்தும் இருந்தார். கல்லடி சிவானந்தா வித்தியாலயவளாகத்தில் ‘சிவபுரி’ எனும் கட்டிடத்தை அமைத்து அதில்தான் தங்கியிருந்து ‘யாழ்நூல்’ ஆராய்ச்சிசெய்ய ஆரம்பித்தார். இக்காலத்தில் சுவாமி அவர்கள் வீணையொன்றைத் தான் தங்கியிருந்தஇடத்தில் வைத்து மீட்டுவதை அவரது மாணவர்கள் பலர் கண்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து வந்து அடிகளார் அவர்களுடன் தங்கியிருந்த ஒரு சுவாமியும் அடிகளாரும்ஒருநாள் பூரண நிலவிலே மட்டக்களப்பு வாவியிலே ‘பாடும்மீன்’ ஓசையைக் கேட்பதற்காகச்சென்றுள்ளனர். மட்டக்களப்பு வாவி கடலொடு கலப்பதால் அங்கு ஒருவகைச் சங்கு வாழ்வதற்குச்சாத்தியமாகிற்று. சங்குகள் முரல்வதானாலே ஏற்படும் ஓசையின் சேர்க்கை இசைத்தன்மை பெற்றுயாழின் ஓசையை ஒத்திருப்பது உண்மையே. இதுவே ‘பாடும்மீன்’ என வர்ணிக்கப்படுகிறதுஎன்பதே விபுலானந்த அடிகள் தந்துள்ள விளக்கமாகும். மட்டுமல்லாமல், இப் ‘பாடும்மீன்’ களைக்கற்பனயில் பெண்ணாக உருவகித்து அதற்கு ‘நீரரமகளிர்’ எனப் பெயர்சூட்டி,
“நீல வானிலே நிலவு வீசவே
மாலை வேளையே மலைவு தீருவோம்!
சாலநாடியே சலதி நீருளே
பாலைபாடியே பலரோடாடுவோம்!
நிலவு வீசவே மலைவு தீருவோம்!
சலதி நீருளே பலரோடாடுவோம்!”என்ற பாடலையும் யாத்தார்.
கற்பனையில் தான் வடித்த நீரரமகளிரின் வடிவத்தை – தோற்றத்தை,
“பைம்புனலின் மேற்படர்ந்த பாசி நிகர் கூந்தலார்
அம் பொன்னின்மேனி அரையின் கீழ் மீன்வடிவம்
செங்கமலம் போற்கரங்கள் திங்கள் முகத்திற்
பொங்கிய புன் முறுவல் பூத்தார் புலமையார்”
எனக் காட்டியுள்ளார். இச் செய்யுள்கள் தஞ்சைக் கரத்தைத்தமிழ்ச்சங்க வெளியீடான‘தமிழ்ப்பொழில்’ ஏட்டில் 1940 இல் வெளிவந்தது. (யாழ்நூல் சிறப்புப் பாயிரத்திலும் இதனைஅடிகளார் மேற்கொள் காட்டியுள்ளார்)மட்டக்களப்பு வாவியிலே மட்டக்களப்புக் கோட்டைக்கும் (தற்போது கச்சேரி)கல்லடிப்பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதிதான் ‘பாடும்மீன்’ இசைகேட்பதற்குப் பொருத்தமானஇடம். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் மட்டக்களப்பு வாவி பூரண நிலவொளியில் இந்தப்‘பாடும்மீன்’ ஒலியில் நிறைந்திருக்கும். ஆரவாரங்கள் அடங்கிய நள்ளிரவின் அமைதியானநேரத்தில் இவ்வொலியைக் கேட்கமுடியும். இதனையும் அடிகளாரின் பாடலொன்று எடுத்துக்கூறும். அப்பாடல் இதுதான்.
“அஞ்சிறைய புள்ளொலியும்
ஆன் கன்றின் கழுத்தில்
அணிமணியின் இன்னொலியும்
அடங்கியபின் நகரார்
பஞ்சியைந்த அணை சேருமிடை
யாமப் பொழுதிற்
பாணொடும் தோணிமிசை
படர்ந்தனனோர் புலவன்
தேனிலவு மலர்ப் பொழிலிற்
சிறை வண்டு துயிலச்
செழுந்தரங்கத் தீம்புனலுள்
நந்தினங்கள் துயில
மீனலவன் செலவின்றி
வெண்ணிலவில் துயில
விளங்குமட்டு நீர்நிலையில்
எழுந்ததொரு நாதம்”
இற்றைக்குச் சுமார் 5500 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து நதிதீரத்தில் வாழ்ந்த ஆதித்திராவிடமக்கள் ‘யாழ்’ எனும் இசைக்கருவியைப் பயன்படுத்தினர் என்ற அகழ்வாராய்ச்சித் தகவலைஉள்வாங்கியே அதுபற்றிய ஆராய்ச்சியிலும் அத்தகைய யாழின் மீளுருவாக்கத்திலும் அடிகளார்ஈடுபட்டார்.
இலங்கைப் பல்கலைக்கழகத்திற்கு (தற்போது பேராதனைப்பல்கலைக்கழகம்) முதல்தமிழ்ப்பேராசிரியராகக் கடமையேற்பதற்கு இந்தியாவிலிருந்து 1941 இல் இலங்கைக்கு வந்தஅடிகளாருக்குத் தனது ஆராய்ச்சியைத் தொடர்வதற்கும் ஆராய்ச்சி நூலான யாழ்நூலை அச்சிட்டுவெளியிடுவதற்குமான முழுச் செலவையும் பொறுப்பேற்பதற்குத் தமிழ்நாடு புதுக்கோட்டையில்வாழ்ந்த கோனூர் ஜமீன்தார் பெ.ரா.ராமசிதம்பரம் செட்டியார் உதவ முன்வந்தார். இலங்கையில்‘றோசல்ல’ எனும் இடத்தில் அமைந்த ‘ஊவூட்ரொக்ஸ்’ எனும் தனது மாளிகையை அடிகளார்தங்கியிருந்து யாழ்நூல் எழுதுவதற்காக அனுமதித்தார்.
யாழ்நூலின் பகுதிகளை எழுதிமுடித்த அடிகளாருக்கு இறுதியில் ஆயிரம் நரம்பு யாழின்நுட்பங்களை விளக்குவதே மீதியாகவிருந்தது. ஈற்றில் அதனையும் கண்டறிந்து அதனைஎழுதிமுடித்தார். யாழ்நூலை எழுதி நிறைவு செய்யும்போது அடிகளாருடன் கூட இருந்தவர் சுவாமிநடராஜானந்தர் ஆவார்.
ஈற்றில் யாழ்நூலை அச்சிடும் பொறுப்பைக் கரந்தைத் தமிழ்ச்சங்கமே ஏற்றது. கரந்தைத்தமிழ்ச்சங்கத்தின் காரியதரிரியான கந்தசாமி அவர்களின் முகவுரையுடனும் அடிகளாரின்மாணாக்கரும் கரந்தைத் தமிழ்ச்சங்கம் நடாத்திவந்த கரந்தைப் புலவர் கல்லூரியின் ஆசிரியருமானவித்துவான் க.வெள்ளைவாரணன் அவர்களின் சிறப்புப்பாயிரத்துடனும் யாழ்நூல் அச்சாகியது.
1947 ஆம் ஆண்டு யூன்மாதம் 5ஆம் 6ஆம் திகதிகளில் அப்போதைய சென்னை மாகாணக் கல்விமந்திரி டி.எஸ் அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்களின் தலைமையிலே இந்தியாவிலேதிருக்கொளம்புதூரில் நாச்சியார் ஆலய முன்றலில் ‘யாழ்நூல்’ அரங்கேற்றம் கண்டது.அடிகளாரின் ஆராய்ச்சியில் உருவான மூளியாழ், பாரிசாதவீணை, சுருதிவீணை,சதுர்த்திதண்டிவீணை ஆகிய கருவிகளைத் தாங்கிய தொண்டர்கள் புடைசூழசங்கீதவித்துவான்கள் கலைஞர்கள் அணிசேர்க்க அடிகளாரையும் யாழ்நூலையும் யானையின்மீதேற்றி ஊர்வலமாக ஆலய முன்றலையடைந்து அங்கே ‘யாழ்நூல்’ அரங்கேறியது.
சிலப்பதிகாரத்திலும் மட்டக்களப்பு வாவியின் நீரரமகளிரின் (பாடும்மீன்) இசையிலும் மனதைப்பறிகொடுத்த சுவாமி விபுலானந்தர் பண்டைத் தமிழர்களுடைய இசைப் பாரம்பரியத்தில்பாவனையிலிருந்து அழிந்துபோன ‘யாழ்’ எனும் இசைக் கருவியை ‘யாழ்நூல்’ மூலம்மீளுருவாக்கம் செய்தார். *