இலக்கியச்சோலை
பிக்பாஸாக வந்ததொரு! … சங்கர சுப்பிரமணியன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் எல்லோருமே பணம் ஒருபக்கம் கிடைத்தாலும் தம்மீது விளம்பர ஒளி பாயும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் கலந்து கொள்கிறார்கள். மனிதர்கள் அனைவருக்குமே இரண்டு முகங்கள் உண்டு. அந்த இரண்டையும் திறமையுடன் கையாள்பவர்களால் மட்டுமே நல்லவர்களாக
தம்மை இனங்காட்ட முடியும். இரண்டு முகங்களில் ஒருமுகத்தை வரம்புமீறி சிறிதே அதிகம் காட்டினாலும் நல்லவர்கள் போன்ற தோற்றத்தைப் பெற்று விடுகிறார்கள். இது எப்படி என்றால் மயிரிழையில் உயிர் தப்பினார் என்பதைப் போன்றது. அதே முகத்தை அதிகம் காட்டினால் மிக நல்லவர் என்ற தகுதியை பெற்றுவிடுகிறார்கள். இந்த நல்லவர்களுக்கும் வக்ரமும் இருக்கிறது. மற்ற கெட்ட பண்புகளும் இருக்கிறது. இது சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருப்பது போன்றது. உணவுக் கட்டுப்பாடு மற்றும் தேகப்பயிற்சியை கடைப் பிடிக்காதபோது சர்க்கரை நோய் அதிகமாவதுபோல் கெட்ட பண்புகளை கட்டுப்படுத்தாத போது மனிதன் கெட்டவனாக அடையாளப் படுத்தப்படுகிறான். ஆனால் அவனுள்ளும் மெச்சத்தகு பண்புகள் இருக்கும். இருந்தும் என்ன பயன்? குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் என பெரும்பாட்டன் வழிவகுத்து அறிவுறுத்தி அல்லவா இருக்கிறான். அடுத்ததாக மற்ற முகத்தை வரம்பு தாண்டி சிறிது அதிகம் காட்டினால் கெட்டவனாக காட்டப் படுகிறான். இது சூனியம் வைப்பது போன்றது. அதே முகத்தை அதிகமாக காட்டும்போது மிகவும் கெட்டவனாக காட்டப்படுகிறான். இது சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வது போன்றது. இப்படிப்பட்ட குணாதிசயங்களோடுதான் எல்லா மனிதர்களுமே இருக்கிறார்கள். திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இதுபோன்ற குணாதிசயங்களுடன் கூடிய படைப்புக்களை பார்க்கிறோம். இரண்டிலுமே ஒரு நிகழ்வு அரங்கேறுகிறது. அந்த நிகழ்வை மக்கள் வெவ்வேறு கண்ணோட்டத்துடன் அனுகுகிறார்கள். திரைப்படத்திலோ அல்லது தொலைக்காட்சி தொடரிலோ அந்த நிகழ்வை பார்க்கும்போது அது அந்த கதையுடன் சம்பத்தப்படுவதால் அதை அவசியம் என்று மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள. அந்த நிகழ்வு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடக்கும்போது வேறு கோணத்தில் பார்க்கிறார்கள். எய்தவன் இருக்க அம்பை நோவதாக நிகழ்வை விட்டுவிட்டு அந்த நிகழ்ச்சியில் நடித்தவரை விமர்சனம் செய்கிறார்கள். இப்போது இந்த கோணத்தில் நம்மை நிறுத்திக் கொண்டு விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரு கண்ணோட்டம் விடுவோம். பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி. முதலில் இந்த நிகழ்ச்சியை விவரிக்கும்முன் இது நமது பண்பாட்டிற்கு ஏற்ற நிகழ்ச்சியா என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். முழுக்க முழுக்க நனைந்த பின்னே முக்காடு எதற்கு? என்பதைப்போல நம் பண்பாட்டிற்கே ஒவ்வாத நிகழ்ச்சி என்பதால் அதில் என்ன தரம் வேண்டிக் கிடக்கிறது? கழுதைவிட்டையில் முன்விட்டை என்ன பின் விட்டை என்ன? ஒரு நிகழ்ச்சி அதுவும் சிறுவர் முதல் பெரியவர்வரை நிகழ்ச்சியை குடும்பத்தோடு பார்ப்பார்களாம். அதில் பங்கேற்பவர்களை அரைகுறை ஆடையுடன் கோடிக்கணக்காணவர்கள் பார்ப்பார்களாம்? நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் என்ற கேள்வியை கேட்டுவிட்டு அல்லவா அந்நிகழ்ச்சியில் பங்குபெற்றவர் உத்தமர்தானா என்பதை யோசிக்க வேண்டும். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவல்லவா? கமல்ஹாசன் நடத்தும் நிகழ்ச்சி என்பதால் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சி பண்பட்ட நிகழ்ச்சி ஆகிவிடுமா? நிகழ்ச்சியே விவாதத்துக்குள்ளாகி இருக்கும்போது அதில் பங்கு பெற்ற ஒருவரைப பற்றி அதிலும் அவரது கண்ணியத்தை எந்த தராசில் வைத்து நிறுத்திப் பார்ப்பது? பிக்பாஸ் நிகழ்ச்சி இருபத்திநான்கு மணி நேரமும் காமிரா கண்காணிப்பில் உள்ளது? அப்படி இருக்கும்போது அங்கு ஒருவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையாம். ஆடு நனைகிறது என்பதால் ஓநாய்க்கு வருத்தமாம். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் அந்த நிகழ்ச்சியை அல்லவா தடை செய்யவேண்டும்? அந்ந நிகழ்ச்சியை நடத்தும் தொலைக்காட்சிக்கல்லவா ஒட்டு மொத்தமாக அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் தும்பை விட்டு ஏன் வாலைப் பிடிக்கிறார்கள் என்பது அந்த வெற்றிவேல் முருகனுக்கே அரோகரா! அடுத்ததாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லுமளவுக்கு அதில் பங்கு பெற்றிருக்கும் பெண்கள் அப்பாவி பெண்களா? அவர்களில் எவருக்குமே தற்காத்துக் கொள்ளும் தற்காப்புக்கலை எதுவும் தெரிந்திருக்காதா? பாரதி கண்ட புதுமைப்பெண்களாக அவர்கள் இல்லையா? நூறு நாட்கள் ஆண்களும் பெண்களும் வெளியுலக தொடர்பின்றி ஒரே இடத்தில் அடைந்து கிடக்கும் நிலையறிந்த பெண்கள் எத்தகு மனவலிவுடன் இருப்பார்கள்? இவற்றை எல்லாம் முதலில் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். ஆணும் பெண்ணும் சரிசமம் என்று கொண்டாடி வரும் நாளில் ஆணின் தற்காப்புக்கு என்று ஒரு பெண்கூட உரிமைக்குரல் எழுப்பவில்லையே? அது ஏன்? ஏனென்றால் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும் இது ஒரு திட்டமிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சி என்று. துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதை பழமொழியாக மட்டும் பார்க்கக்கூடாது. அதை நடைமுறைப்படுத்தவும் சந்தர்ப்பம் நேரும்போது முயலவேண்டும். ஒருவர் கழிவறைக் கதவை மூடாமல் நடந்து கொள்கிறார் என்றால் அது அவரது மனநிலைக் கோளாறு. அதை அவருக்கு எடுத்து நல்வழிப் படுத்தவேண்டும். அதைச் செய்யாமல் அவரை போய் எட்டிப் பார்ப்பவர்களை எந்தவகை பட்டியலில் சேர்ப்பது? ஒருவர் ஒரு தரமற்ற செயலைச் செய்யும்போது அவர் செய்வதை சரியென்றோ அல்லது அவருக்கு நான் துணை போகவேண்டும் என்றோ சொல்லவில்லை. ஆனால் ஒரு தப்பு செய்யும் நபருக்கு அவர் திருந்த ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்க வேண்டும். அதாவது ஒரு எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டும். எச்சரிக்கை கொடுத்தும் திருந்தாதவரை தண்டித்தால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. பிரதீப் ஆண்டனியை வெளியேற்றியதில் கமல்ஹாசன் மிகவும் புத்திசாலியாக நடந்துகொண்டு சாதுர்யமான முடிவெடுத்திருந்தாலும் ஏதோ ஒரு அழுத்தத்தின் பேரில் தவறுதலான முடுவெடுத்து விட்டார். அந்த பழியை தான் சுமக்காமல் ஏதோ ஒரு ஜனநாயகவாதி போல் தன்னை அடையாளப்படுத்தி அவரது முடிவில் பார்வையாளரையும் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களையும் சாதுர்யமாக கோர்த்து விட்டிருக்கிறார். நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று உறுதியாகச் சொல்லும் துணிவுமில்லை பிரதீப் செய்தது மாபாதக குற்றமில்லை என்று எடுத்துக் கூறவும் முடியவில்லை. இதனால் இவர் எடுத்த முடிவின்மேல் பெரிய சர்ச்சையே ஓடிக் கொண்டிருக்கிறது. நான் பிரதீப்பை மிகவும் நல்லவர் என்று வக்கலாத்து வாங்கவில்லை. என் ஆதங்கம் என்னவென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருமே ஏதாவது ஒரு நன்மை நடக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான் வந்திருப்பார்கள். மிகவும் பாதிப்பும் பரிதாமமும் சூழ்ந்த பின்னணியுடன் கலந்து கொண்ட பிரதீப்புக்கும் அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய ஒருவருக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்து பார்த்திருக்கலாம். அப்படியும் அவர் திருந்தாவிட்டால் எத்தனையோ காரணங்களில் ஒரு காரணத்தை சொல்லி அவரை வெளியேற்றியிருக்கலாம். நம்பிவந்த ஒருவரை நட்டாற்றில் விட்டதுபோல் அவரின் பெயரைக்கெடுத்து பெண்களின் பாதுகாப்புக்கு ஆபத்தானவர் என்ற அவப்பெயரை முத்திரையாக குத்தி கமல்ஹாசன் போன்ற ஒருவர் வெளியேற்றியிருப்பதுதான் வேதனையளிக்கிறது. மக்களின் அழுத்தத்தின் காரணமாக கமல்ஹாசனும் விஜய் தொலைக்காட்சியும் இணைந்து பிரதீப்பை திரும்பவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைப்பதற்கும் வாய்ப்புள்ளது. அப்படி ஒருவேளை அழைத்தால் பிரதீப்பின் காரக்டரை பொருத்தவரை கலந்து கொள்வாரா என்பதையும் யோசிக்க வேண்டியுள்ளது. எதிர்பாரததை எதிர்பாருங்கள் என்ற போர்வையில் கமல்ஹாசன் தன் முகத்தில் வடியும் அசடையும் துடைத்துக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. அதுசரி பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ஒன்றும் தெரியாத அப்பாவிகளாக இருந்தா பிரதீப்பை நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுத்திருப்பார்கள். அவர்கள்தான் நம் காதுகளில் பூவைச்சுற்றுகிறார்கள் என்றால் நாமும் அவ்வளவாக ஒன்றும் தெரியாதவர்களா என்ன அவர்கள் பூவைச்சுற்ற நம் காதுகளை கொடுத்துக் கொண்டு இருப்பதற்கு. கவுண்டமணி பாணியில் அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா என்பதுபோல் பிக்பாஸில் இதுவெல்லாம் சகஜமப்பா என்றபடி பொழதுபோக்காக பார்க்க வேண்டும் அல்லது நம்ம பிழைப்பை பார்க்க வேண்டும். -சங்கர சுப்பிரமணியன்.