கவிதைகள்
குவலயம் உன்னைப் போற்றும்! …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
பரந்த மனமெழ வேண்டும்
பார் சிறக்க வேண்டும்
ஊர் சிரிக்க வாழாமல்
ஊர் போற்ற வேண்டும்
குழந்தை மனம் வேண்டும்
குதூகலம் அதில் வேண்டும்
ஒரு தீங்கு மெண்ணாமல்
உய ரெண்ணம் வரவேண்டும்
ஈவதை இதயத்தில் இருத்து
எடுப்பதைப் பகிர்ந்துமே கொடு
வாழ்வினில் நல்லதை தெரி
வழியினைத் தேர்ந்துமே நட
ஓய்வினை எடுப்பதைத் தவிர்
உழைப்பினை உறுதியாய் பிடி
தாழ்வென நினைப்பதை வெறு
தளர்விலா வாழ்வினில் நில்
தலைவிதி என்பதை மற
உளமதில் உறுதியை விதை
நிலமதில் நிமிர்வுடன் நட
நிம்மதி வந்துனைச் சேரும்
அளவிலா ஆசையைத் துற
அளவுடன் அனைத்தையும் அணை
இளகிடும் குணத்தினை இணை
என்றுமே நல்லொளி தெரியும்
கறையுடை செயல்களைக் களை
குறையுடை செயல்களைத் தவிர்
நிறையுடை செயல்களை நினை
நிலமதில் நல்லதை கொடு
மூத்தவர் சொற்களை மதி
மூர்க்கரின் தொடர்புகள் அறு
வார்த்தையில் நல்லதைத் தெரி
வையகம் போற்றிடும் உன்னை
ஒளவை வார்த்தை இருத்து
அருமைக் குறளைப் பாரு
உய்யும் கருத்தைத் தேரு
உயர்வாய் என்றும் உலகில்
இறையின் நினைப்பில் என்றும்
இருந்தால் அனைத்தும் நலமே
குறைகள் யாவும் அகலும்
குவலயம் உன்னைப் போற்றும்.
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா