இலக்கியச்சோலை

தாயக மண்ணின் இதய கீதமாகி.. தமிழ் மக்களின் உயிர் மொழியாகி.. இசையின் வர்ணமான ராமேஸ்வரன்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.

1990களில் வர்ண ராமேஸ்வரனின் குரல் தாயக மக்களிற்கு நன்கு பரீட்சயமான குரலாக அமைந்தது. பக்தி பாசுரங்கள், தாயக எழுச்சிப் பாடல்கள் என பல பாடல்களைப் பாடி அனைவராலும் விரும்பப்பட்ட ஒரு பாடகரானார். நல்லை முருகன் பாடல்கள், திசையெங்கும் இசைவெள்ளம் போன்ற இவரது இசைத்தொகுப்புக்கள் இவரது குரலை மக்கள் மயப்படுத்திய சம காலத்தில், இவரின் குரலில் உருவாக்கம் பெற்ற தாயக எழுச்சிப் பாடல்கள் பலவும் வர்ண ராமேஸ்வரன் என்ற பெயரினை மக்களை பரவசப்படுத்தின.
ஈழத்து இசை வரலாற்றில் எக்காலமும் தவிர்க்க முடியாத பேராளுமை கொண்ட வர்ண ராமேஸ்வரன்,
உலகத் தமிழர் மத்தியில் “எங்கே எங்கே ஒரு தரம் உங்கள் விழிகளைத் திறவுங்கள்’ எனக் கேட்கின்ற போதே கண்ணீரை வர வைக்கின்ற துயிலுமில்லப் பாடலான “தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” பாடல் ஊடாக இவர் நன்கு பரிச்சயமானவர்.
யாழ்ப்பாணம், அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் வர்ண ராமேஸ்வரன். ஆரம்பக் கல்வியை அளவெட்டி சீனன்கோட்டை ஞானோதய வித்தியாசாலையிலும், பின்னர் உயர் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். ராமேஸ்வரனின் கணீர் என்ற இசைக் கச்சேரிப் பாடல்களும், அவரது தோற்றமும் பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்குமெனலாம்.
ஈழத்தின் எட்டுத் திசையெங்கும் ஒலித்த போர்க்கால பாடல்களின் கணீர் என்ற குரல்களில், உயிர்த்துடிப்பை ஏற்படுத்திய வர்ண ராமேஸ்வரன் மறைந்து (5 நவம்பர் 1968 – 25 செப்டம்பர் 2021) ஈராண்டுகள் ஓடிவிட்டன.
வர்ண ராமேஸ்வரன் சிறுவயதிலேயே வாய்ப்பாட்டு, பண்ணிசை, வீணை, வயலின் எனும் கலைகளைத் தமது தந்தையாரான ‘கலாபூஷணம்’ ‘சங்கீதரத்தினம்’ வர்ணகுலசிங்கம் அவர்களைக் குருவாக் கொண்டு கற்கத் தொடங்கியவர். பின்னர் மிருதங்கம், பியானோ ஆகிய வாத்தியக் கருவிகளையும் முறையாகக் கற்றுக் தேறிய பெருமைக்குரியவர்.
பல்வேறு வித்துவான்களையும், கலைஞர்களையும் தந்த யாழ்ப்பாணத்தின் வடபால் அமைந்துள்ள அளவெட்டியின் மைந்தனான இவர், யாழ்ப்பாணம், வன்னி, கொழும்பு என கால ஓட்ட மாற்றத்தில் புலம்பெயர்ந்து அவர் இறக்கும் வரை சிறந்த பாடகராகவே மிளிர்ந்தார்.
வடஇலங்கை சங்கீத சபையினால் நடாத்தப்பட்ட வாய்பாட்டு, மிருதங்கம் ஆகியவற்றுக்கான பரீட்சைகளில் ஆசிரிய தரம் வரை கற்றுத்தேறி சங்கீத, மிருதங்க கலாவித்தகர் என்ற பட்டம் பெற்ற பின்னர், யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுன்கலைக் கல்லூரியில் இசைக்கலாமணி பட்டம் பெற்று, அங்கு ஐந்து ஆண்டுகள் இசை விரிவுரையாளராகவும் பணியாற்றிவர்.
அத்துடன் இலங்கை வானொலி மற்றும் தொலைக்காட்சிச் சேவைகளின் நிகழ்ச்சிகளில் இசைக்கலைஞராக இருந்து பல சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றிருந்தார். இந்து கலாசார அமைச்சினால் இசை நடன ஆசிரியர்களுக்கு என நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறைகளையும் தலைமை தாங்கி நடத்தியிருந்தார்.
பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசை மேற்படிப்பை மேற்கொண்ட வர்ண ராமேஸ்வரன், தமிழகத்தின் முதன்மைக் கலைஞர்களில் ஒருவரான திருவாரூர் பக்தவத்சலம் அவர்களிடம் மிருதங்கத்தையும் இசை மேசை ரி.எம். தியாகராஜன் , கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி, ரி.வி கோபாலகிருஷ்ணன் ஆகியோரிடம் இசை நுணுக்கங்களையும் கற்றுத்தேறி, தமிழ்நாட்டில் பல இசைக்கச்சோிகளையும் நடத்திப் பலரதும் பாராட்டைப் பெற்றவர்.
நல்லதொரு குரலிசைக் கலைஞனாகவும், மிருதங்க வித்துவானாகவும், இசையமைப்பாளராகவும் தன் பணியினை தாயகத்திலும், புலம் பெயர் நாட்டிலும் ஆற்றிய வர்ண ராமேஸ்வரன் போர்ச் சூழல் காரணமாக கனடாவிற்குப் புலம் பெயர்ந்து அங்கும் தனது வர்ணம் இசைப்பள்ளியைத் தொடங்கி பல மாணவர்களின் விருப்புமிகு குருவாக மிளிர்ந்தார்.
வர்ண ராமேஸ்வரன் புலம் பெயர்ந்தாலும் அடிக்கடி தாயகத்திற்கு வருகை தந்து, தனது ஆக்கபூர்வ சிந்தனைகளையும், கருத்துக்களையும், சக கலைஞர்களிற்கு வழங்கினார். பல இளம் கலைஞர்களிற்கு தன்னாலான உதவிகளையும் வழங்கி உள்ளார்.
கனடா, ரொறன்ரோவில் வர்ண ராமேஸ்வரன் மிருதங்க, நடன அரங்கேற்றங்களுக்கு முன்னணிப் பாடகராக விளங்கினார். அத்துடன் வர்ணம் இசைக் கல்லூரியை அங்கு உருவாக்கி பல நகரங்களில் இசை வகுப்புக்களை நடாத்தினார்.
குறிப்பாக கோவிட் தொற்றுக் காலத்தில் வர்ணம் ஒன்லைன் இணைய இசைக்கல்லூரியை உருவாக்கி அதனை நிர்வகித்து வந்திருந்தார்.
அத்துடன் கனடாவில் தாயப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் தாய் அமைப்புடன் இணைந்து அன்றைய காலகட்டத்தில் நடத்தப்பட்ட பல போராட்டங்களுக்கான பல பாடல்களை இசையமைத்துப் பாடியுள்ளார் என்பது இங்க நினைவூட்டத்தக்கது.
பல்துறைக் கலைஞரான வர்ண ராமேஸ்வரன் அவர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இசை விரிவுரையாளராக இருந்த திறமையினால், தாயகத்தில் வன்னி நிலபரப்பில் இசைப் பள்ளியொன்றை புலம் பெயர் உறவுகளின் பங்களிப்போடு ஆரம்பித்து தாயகத்திலும் தன் இசைபபணிகளை தொடர்ந்து ஆற்றினார்.
தாயக கலைப்பரப்பில் பல காலங்கள், பல படைப்புக்கள், பல கச்சேரிகள் நடாத்திய ராமேஸ்வரனை சிறந்த
படைப்பாளி என்றே சொல்ல வேண்டும். அந்தளவிற்கு கலைத்துறைக்கு இவர் ஆற்றிய பணிகள் எண்ணிலடங்காதவை. கலைஞனிற்கு மரணமில்லை என்பார்கள். அவன் படைப்பினால் வாழ்வான். அந்த ரீதியில் இந்தக் கலைஞனும் ஈழத்தின் எட்டுத் திசையெங்கும் ஒலித்தக் கொண்டே இருப்பார்.
விடுதலை எழுச்சிப் பாடல்கள் பலவற்றை பாடி மக்கள் இடத்தில் நீங்கா இடத்தைப் பிடித்த வர்ண ராமேஸ்வரன் எனும் பேராளுமையின் இழப்பு தாயக கலைத்துறையை பொறுத்தமட்டில் பேரிழப்பே ஆகும்.
( இசைக் குரலோன்
வர்ண ராமேஸ்வரன் மறைந்து
25 செப்டம்பர் 2021 – ஈராண்டு நினைவாக இக்கட்டுரை பிரசுரமாகிறது)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.