இலக்கியச்சோலை
‘பாப்லோ நெருடா’எனும் பெருங்கவி.. சிலி நாட்டை சிலிர்க்க வைத்த மாகவி..! … ஐங்கரன் விக்கினேஸ்வரா.
(உலக கவி பாப்லோ நெருடா மறைந்த செப்டம்பர் 23, நாள் நினைவாக )
பாப்லோ நெருடாவின் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் உலக மொழிகள் எல்லாவற்றிலும் வெளிவந்த சிறப்பினால், மாபெரும் கவிஞர் என லத்தீன் அமெரிக்க எழுத்தாளராகிய கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், நெருடாவினைப் புகழ்கின்றார்.
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவர். இவர் கவிஞராக மட்டுமல்லாது, சமூக உணர்வு கொண்ட போராளியாகவும், மார்க்சிய தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவராகவும் திகழ்ந்தவர். பாப்லோ நெருடா, (Pablo Neruda, ஜூலை 12, 1904 – செப்டம்பர் 23, 1973) என்ற புனைபெயர் கொண்ட ரிக்கார்டோ இலீசர் நெப்டாலி ரீயஸ் பொசால்தோ ( Ricardo Eliecer Neftalí Reyes Basualto), சிலி நாட்டில் பிறந்தவர்.
பாப்லோ நெருடாவின் முதல் கவிதைத் தொகுப்பு, 19ஆம் வயதில் வைகறைக் கதிர்கள் (Books of Twilights) என்ற பெயரில் 1923 ஆம் ஆண்டு வெளிவந்தது. நெருடாவின் “இருபது காதல் கவிதைகளும் ஒரு விரக்தி பாடலும்” என்ற கவிதை தொகுப்பு ஸ்பானிய மொழியில் பெரும் கிளர்ச்சியையும், பரபரப்பையும் ஊட்டியது
இத்தொகுப்பு வெளியிடும் போது நெருடாவின் வயது இருபது. காதல் கவிதைகளில் அதிர்ச்சியும் நேரடித்தன்மையும் கொண்ட அத்தொகுப்பு ஸ்பானிய மொழி பேசும் நாடுகளில் நெருடாவினை மேலும் பிரபலமாக்கியது.
பாப்லோ நெருடா எனும் புனைப்பெயர்:
1920 ஆம் ஆண்டு கவிதை எழுதுவதற்காக, செக்கோஸ்லாவாகியா எழுத்தாளரான ஜோன் நெருடாவின் பெயரால் உந்தப்பட்டு, தன் பெயரையும் பாப்லோ நெருடா என்ற புனைப்பெயரினை ஏற்றுக்கொண்டார்.
பாப்லோ என்பது ஸ்பானிஷ் மொழியில் பால் (Paul) என்பதன் வடிவமாகும்
1904 ஆண்டு, ஜூலை 12 தேதி சிலி நாட்டில் உள்ள பாரல் என்ற ஊரில் பாப்லோ நெருடா பிறந்தார். இவர் பிறந்த சில நாட்களிலேயே இவரை ஈன்ற தாய் மறைந்தார். பாப்லோ நெருடா முதல் முயற்சியாக தனது எட்டாம் அகவையில் எழுதிய கவிதை, தன் பெருந்தாயைப் பற்றியதே. கவிதை எழுதுவதில் நாட்டமும் திறனும் கொண்டவர். சிறு வயதிலேயே இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். 10 வயது முதலே பலரால் அறியப்படும் கவிஞராகப் புகழ்பெற்றார்.
ஆயினும் பாப்லோ நெருடாவின் தந்தை இவரது எழுத்தையும் இலக்கிய நாட்டத்தையும் எதிர்த்தார். ஆயினும் இவரது இலக்கிய ஆர்வம் தடைபடவில்லை. தந்தையின் கோபத்துக்கு ஆளாகாமல் இருக்க ‘பாப்லோ நெருடா’ என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கினார்.
எரிமலையும், கனமழையும், சுரங்கங்களும் சூழ்ந்த சிலி நாட்டின் தென் பகுதியில் ஓர் ஏழை இரயில்வே கூலிக்கு மகனாகப் பிறந்து, துன்பத்தில் வளர்ந்து, உலக நாடுகள் பலவற்றுள் சிலி நாட்டுத் தூதராகப் (Consul) பதவி வகித்து, உலகப் பெருங்கவிஞருள் ஒருவராக வளர்ந்து, நோபெல்பரிசு பெற்ற பெருங்கவிஞரே பாப்லோ நெருடா.
பாப்லோ நெருடா மார்க்சியத் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டிருந்தார். சிலியில் கம்யூனிஸ்ட் கட்சி சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டது. இவரை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. நண்பர்கள் உதவியுடன் மாதக்கணக்கில் தலைமறைவாக இருந்தவர், பின்னர் அர்ஜென்டினாவுக்கு தப்பினார். 1971-ல் பாரீஸில் தூதராகப் பணியாற்றியபோது, இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதே.
யதார்த்த காதல் கவிதைகள்:
காதல், யதார்த்தம், அரசியல் என பல சிந்தனைகளை இவரது கவிதைகளை மையமாகக் கொண்டிருந்தன. கவிதைகளை பச்சை மையில்தான் எழுதுவார். ஆசை மற்றும் நம்பிக்கையின் சின்னம் பச்சை என்பது அவரது கருத்து.
கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடல் வரிகளைப் போலவே அமைந்துள்ள ‘பூமியின் சருமம் உலகெங்கும் ஒன்றுதான்’ (The skin of the earth is same everywhere)’ என்ற இவரது கவிதை வரிகள் பிரபலமானவை. ’20-ம் நூற்றாண்டின் மாபெரும் கவிஞர் என்று புகழப்பட்ட பாப்லோ நெருடா 69 வயதில் (1973) மறைந்தார்.
1924-லிருந்து 1934 வரை அவருடைய வாழ்க்கை ஒரே அலைக்கழிப்பாக இருந்தது. 1927-இல் பர்மாவிலும், 1928-இல் இலங்கையிலும், 1930-இல் ஜாவாடடேவியாவிலும், 1931-இல் சிங்கப்பூரிலும், 1933-இல் அர்ஜெண்டைனாவிலும் சிலிநாட்டுத் தூதுவராக (Consul)ப்பணி புரிந்தார். ஐந்தாண்டுகள் கிழக்காசிய நாடுகளில் வாழ்ந்தபோது தனிமை அவரை மிகவும் வருத்தியது.
தாய்மொழியான ஸ்பானிஷ் மொழியை யாரிடமும் பேச வாய்ப்பில்லாமல் தவித்தார். தூதரக வருமானம் தம்மைக் கெளரவமாக வாழப் போதியதாக இருக்கவில்லை. அதனால் சில அவமதிப்புக்களுக்கும் ஆளாக வேண்டியிருந்தது. தாம் அப்போதிருந்த நிலையை விளக்கி ஒரு நண்பருக்கு எழுதிய கடிதத்தில் ‘தெருநாய்களின் துணையோடு வாழ்ந்தேன்’ என்று வருந்தி எழுதியிருக்கிறார்.
வியட்நாம் காடுகளில் சுற்றியலைந்ததைப்பற்றித் தமது பிற்காலக்கவிதை யொன்றில் குறிப்பிடும் போது “என் வயதில் இருபதாண்டுகள் கூடிவிட்டன; சாவை எதிர் நோக்கிக் காத்திருந்தேன்; என் மொழிக்குள் நான் சுருங்கிக் கொண்டேன்” என்று எழுதுகிறார்.
இலங்கையில் தூதராக பணி :
இலங்கையில் தூதராக இருந்தபோது, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். நேருவைக் கண்டு பேசவிரும்பி டில்லி சென்றார். நேரு முதலில் சந்திக்க மறுத்து விட்டார். இரண்டாம் முறை நேருவைக் கண்டு பேசினார். ஆனால் நேரு அவரைக் கவர முடியவில்லை. தன் வரலாற்று நூலில் நேருவைப் பற்றியும், இந்திய நாட்டைப் பற்றிக் குறிப்பிடுகையில்
அழகிய நிர்வாணப் புத்தர்கள்
மதுவிருந்தைப் பார்த்த வண்ணம்
திறந்த வெளியில்
வெறுமையாகச்
சிரித்துக் கொண்டிருக்கின்றனர்
கிழக்கில் சமயம்
என்று கசப்புணர்ச்சியோடு எழுதுகிறார்.
1933-இல் அர்ஜெண்டைனாவில் தூதராக இருந்தபோது ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த கவிஞரான லார்காவை போனஸ் அயர்லில் சந்தித்து நெருங்கிய நண்பரானார். அச்சந்திப்பைப்பற்றியும், அச்சந்திப்பின் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளைப்பற்றியும் கவிதை நடையில் நெருடா தன் வரலாற்று நூலில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்:
அரசியல் கவிஞனாக உருவாக்கம் :
ஸ்பெயினில் வகித்து வந்த தூதர் பதவி பறிபோனதும் நெருடா பாரிசில் (1937-39) சென்று தங்கினார். அப்போதுதான் அவருள்ளத்தில் அவரது சிறந்த படைப்பான “சிலிப் பெருங்காப்பியம்” உருப் பெற்றது. அதுவே பத்தாண்டுகள் கழித்துப் பதினைந்து பாகங்களைக் கொண்ட ‘பொதுக் காண்டமாக’ வெளிவந்தது.
இப் பத்து ஆண்டுகளில் பொதுவுடைமைக் கட்சியில் ஈடுபாடு கொண்டு தீவிர அரசியல்வாதியானார். 1940-லிருந்து 1943- வரை மூன்றாண்டுகள் மெக்சிகோவில் தூதராகப் பணிபுரிந்தார். அப்போது நாஜிகளால் தாக்கப்பட்டார். 1945-இல் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினராகப் போட்டியிட்டு சிலிப்பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1948- இல் சிலிநாட்டு ஜனாதிபதியாக இருந்த கான்சலஸ் விடெலா (Gonzaine Videia) பொதுவுடைமைக் கட்சியோடும் அக்கட்சி ஆட்சியிலிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடனும் தமக்கிருந்த உறவை முறித்துக் கொண்டது. ஜனாதிபதியின் இச்செயலை நெருடா வெளிப்படையாகக் கண்டித்தார். இதனால் சிலி அரசாங்கம் இவரைச் சிறை செய்ய முயன்ற போது, நெருடா தலைமறைவானார். பொதுவுடைமைக் கட்சித் தோழர்களின் வீடுகளில் மறைந்திருந்து, கடைசியில்
நாட்டைவிட்டு வெளியேறினார். அடுத்த நான்கு ஆண்டுகள் தென் அமெரிக்க நாடுகளிலும், ஐரோப்பாவிலும் நீண்ட பயணங்களை மேற்கொண்டார்.
அரசியல் நெருக்கடி மிக்க இப்போராட்டக் காலமே நெருடாவின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க காலகட்டம், இயற்கையையும் காதலையும் பாடிக்கொண்டிருந்த நெருடா அரசியற் கவிஞனாக உருப்பெற்றார். அவருடைய கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது போல், கவிதைச் சிந்தனையிலும் மாற்றம் ஏற்பட்டது.
உலக முன்னேற்ற கவிதைகள் :
நெருடா தன் கவிதைகளைத் தூயவை, தூய்மையற்றவை (Pure and impure poetry) என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறார். உலக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு பாடப்படும் கவிதைகளே தூய்மையானவை என்பது நெருடாவின் கருத்து. மாணவப் பருவத்தில் காதலை மையப்படுத்தித் தாம் எழுதிய முதல் இரண்டு கவிதைத் தொகுப்பையும் தூய்மையற்றவை என்று அவரே ஒதுக்கி விடுகிறார்.
நான் பெரியவன்; எண்ணற்றவற்றை உள்ளடக்கியவன் (I am large: I contain multitudes) என்ற விட்மனின் வரிகளுக்கு மிகப் பொருத்தமான எடுத்துக் காட்டாக விளங்கிய கவிஞர் பாப்லோ நெருடா.
பாப்லோ நெருடா இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பாகத் தன் கல்லறைப்பாட்டை (epitaph) ‘ஒளியின் ஜீவன்’ (Animal of Light) என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். அப்பாடலின் வரிகளே..
இன்று-
தான் இழந்த அந்தக்
காட்டின் ஆழத்தில்
அவன்-
எதிரிகளின்
காலடிச் சத்தத்தைக் கேட்கிறான்.
அவன்-
மற்றவர்களிடமிருந்து
ஓடவில்லை.
தன்னிடமிருந்து,
ஓயாத தன் பேச்சிலிருந்து
எப்போதும்-
தன்னைச் சூழ்ந்திருந்த
பாடற் குழுவிலிருந்து
வாழ்க்கையின்
உண்மையிலிருந்து
ஓடுகிறான்.
ஏனென்றால்
இம்முறை
இந்த ஒரேமுறை
ஓர் அசை
அல்லது
ஓர் மௌனத்தின் இடைவேளை
அல்லது
கட்டவிழ்க்கப்பட்ட அலையோசை
என் முகத்துக்கு நேராக
உண்மையை
வீசிவிட்டுச் செல்கிறது.
இனிமேல்
ஒன்றும் சொல்வதற்கில்லை
அவ்வளவு தான்!
காட்டின் கதவுகள்
மூடிக் கொண்டன.
இலைகளைத் தளிர்க்கச்செய்து
கதிரவன்
வட்டமிட்டுச் செல்கிறான்
நிலவு
வெண்கனியாகக்
காட்சியளிக்கிறது
மனிதன்
தவிர்த்த முடியாத
முடிவிற்குத்
தலை வணங்குகிறான்
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞராக, உலக மொழிகள் எல்லாவற்றிலும் பாப்லோ நெருடாவின் கவிதைகள் வெளிவந்துள்ளன. இந்த நூற்றாண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க
மாபெரும் கவிஞராக பாப்லோ நெருடா மிளிர்கின்றார்.