இலக்கியச்சோலை
வரலாறு உமை விடுதலை செய்யும் : 76வது அகவையில் பொதுமைப் புரட்சியாளன் க.வே.பாலகுமாரன்! … நவீனன்.
(க.வே.பாலகுமாரனின் 76வது பிறந்த நாள் (15 – 09 – 1947) நினைவாக.
எல்லா யுகங்களிலும் என்றுமாய் முகிழும் புரட்சியின் முகமே தோழர் பாலகுமாரன். ஈழப்போராட்ட வரலாற்றில் நேரியபார்வை சீரிய பண்பு கொண்ட செயற்பாடுகள் மூலம் பண்பான தலைமைத்துவத்தின் அடையாளமாக என்றும் மிளிர்ந்தவர்.
புரட்சியின் முகமே பாலகுமாரன்:
நான்கு தசாப்த கால ஈழப் போராட்ட வாழ்க்கையில் தனிமனித வரட்டுவாத பிரச்சாரங்களை தவிர்த்து, மக்களுடன் மக்களாய் போராட்ட களத்தில் தன்னை தியாகித்தவர். தமிழ் தேசியத்திற்காய் தோள்நின்று தியாகித்த யதார்த்தவாதி தோழர் பாலகுமாரன்.
இளம் பராயத்திலிருந்தே பொதுவுடமைக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட பாலகுமார், தமிழ் தேசிய விடுதலைப் பாதையில் நிதர்சனமாய் தன்னை இணைத்துக் கொண்டவர். அவர் ஈழப்புரட்சிக்காய் தன்வாழ்வையே
ஆகுதியாகிய தர்க்கீகவாதி. தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் பரந்துபட்ட மக்கள் போராட்டமாகவும் அதேவேளையில் சமூக நீதிக்கான போராட்டமாகவும் அமைய வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.
உலகப் புரட்சியாளர் வரிசையில் தோழர் பாலகுமாரனும் தனித்துவமாக என்றும் பிரகாசிக்கின்றார். மெளனிக்கப்பட்ட போராட்டத்தின் இறுதிக் கணங்களில் தோழர் பாலகுமார் மாயமானது உலகின் மனச்சாட்சியையே உலுப்பியுள்ளது.
உலக புரட்சியாளராக பாலகுமாரன் :
எளிமை என்றால் அதற்கு இன்னொரு பெயர் உண்டு. அதுதான் தோழர் க.வே.பாலகுமார்.ஆர்ப்பரிக்காத அரசியலும், எதிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத பெருந்தன்மை கொண்டவர் தோழர் க.வே.பாலகுமார்.
நாம் ஆயுதங்களின் பின்னால் பித்துப்பிடித்துத் திரியவில்லை.ஆயுதங்கள் என்பதற்காகவே அவற்றை நாம் ஏந்தியிருக்கவும் இல்லை.எங்களின் சக்தி ஆயுதங்களுக்குள் மாத்திரமே அடங்கியிருக்கவில்லை.அதாவது எங்களுக்கு ஆயுதங்கள் வெறும் அதிகாரச் சின்னமல்ல.உண்மையைச் சொல்வதானால், எங்களின் மகத்தான அரசியல் இலக்கை அடையத் துணைசெய்கின்ற கருவிகளே ஆயுதங்கள். இவ்வாறு 1987 இல் இந்து பத்திரிகைக்கு க. வே. பாலகுமாரன் அளித்த பேட்டியில் அவரின் முற்போக்கு தீர்க்க தரிசனம் மிகத் தெளிவாக தெரிந்தது.
இளம் வயதில் தோழர் பாலகுமாரன் இடதுசாரி கருத்துக்களில் ஈடுபாடாகி, சீனசார்பு இடதுசாரி கட்சியுடன் நெருக்கமாக செயற்பட்டும் வந்தார். . இவர் வடமராட்சியை புறப்பிடமாக கொண்ட பாலகுமாரன் சமூக அக்கறை கொண்டவராகவும் விளங்கினார்.
முற்போக்கு தீர்க்க தரிசனவாதி :
பட்டதாரியான பாலகுமாரன் வங்கி முகாமையாளராக இருந்தவர். புலோலி வங்கியில் பணிபுரிந்தார். 1975இல் புலோலி வங்கி கொள்ளையின் பின்
விடுதலை அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டார். அக்காலத்தில் ஆயுதவழியில் நம்பிக்கை கொண்ட இளைஞர்கள் உருவாக தொடங்கிவிட்டனர். ஆயுதவழியில் ஈர்ப்புள்ள இளைஞர்கள் எல்லா கிராமங்களிலும் கணிசமாக உருவாகிவிட்டனர்.
முற்போக்கு எண்ணமுடைய இளைஞர்களை சந்திக்கும்போது பாலகுமாரன் கொடுக்கும் ஆலோசனை, முதலில் உயர்தரம் வரை படித்து முடித்துவிட்டு அரசியலில் இறங்குங்கள். அரசியலிற்கு இறங்கும்போது முதிர்ச்சி அவசியம் என்பதே அவரது எண்ணப்பாடாகும். பாலகுமாரன் வங்கி முகாமையாளராக இருந்தாலும், சமூக அக்கறை காரணமாக பகுதி நேரமாக சமூகக்கல்வி, வரலாறு கற்பித்துக் கொண்டுமிருந்தார்.
அகிம்சை வழியால் எந்த தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாதென தீர்மானித்த இளைஞர்கள் 1970 களின் தொடக்கத்தில் தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தனர். பாரம்பரிய தமிழ் அரசியல்வாதிகளின் போக்கு விடுதலைக்கு உதவாதென பகிரங்கமாக பேச தொடங்கி, பின்னாளில் பிரபல்யமான விடுதலை அமைப்புக்களின் தலைவராக பாலகுமார் உருவானார். ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஈழப்புரட்சி அமைப்பின் செயலாளராக (ஈரோஸ்)பிற்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளது
முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் தேசியப் போராட்டத்தில் மாபெரும் பங்காற்றினார்.நீதியின் கண்கள் திறக்குமா ?
மிகச்சரியாக 13 வருடங்கள் முன்பு தனது மகன் சூரியதீபனுடன் முள்ளிவாய்க்கால் போர் மௌனிப்பின் பின்னர் விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாக முதலில் தகவல்கள் வெளியானதன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட போராளிகளில் பாலகுமாரும் ஒருவர்.
தோழர் பாலகுமார் எங்கு கொண்டு செல்லப்பட்டார், எந்த இரகசிய சித்திரவதை முகாமில் மறைத்து வைக்கப்பட்டார் என்கிற தகவல்கள் எதுவும் பின்னாளில் வெளிவரவில்லை.
தோழர் க. வே. பாலகுமாரன் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். இவர் விடுதலைப் புலிகளுக்கு ஒரு அரசியல் மதியுரைஞராக செயற்பட்டார். புலிகளுடன் இணையும் முன்னர் இவர் ஈழ புரட்சி அமைப்பின் செயலதிபராக்
இருந்தார். பின் ஈரோஸ் அமைப்பு விடுதலைப் புலிகளுடன் 1990களின் இறுதியில் சுயமாக இணைந்தது.
2009இல் அன்றைய சிங்கள அரசின் புனர்வாழ்வு அமைச்சரோ, பாலகுமார் இறுதிப்போரில் கொல்லப்பட்டு விட்டார் என்றும், அவர் அரச படைகளிடம் சரணடையவில்லை என்றும் அப்பட்டமான பொய்யை சொன்னார். முள்ளிவாய்க்காலில் உச்சகட்ட இன அழிப்புப்போர் நடந்து முடிந்து 13ஆண்டுகள் ஆனாலும் இன்னும் நீதியின் கண்கள் திறக்குமா என்று ஏக்கத்தோடு காத்திருக்கும் எண்ணற்ற ஈழ மக்களில் அவரும் ஒருவர்.
ஆனால் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் பிரான்சிஸ் ஹாரிசன் ஒரு புகைப்பட ஆதாரத்தினை வெளியிட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.
அந்தப் படம்தான் தோழர் பாலகுமார்
தனது மகனுடன் சிறீலங்கா் இராணுவம் சுற்றி நிற்க, கையில் காயப்பட்ட கட்டுடன் போர் வலயத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் படம். இப்படம் சிறீலங்கா அரசின் பொய்யை அம்பலமாக்கியது. பத்திரிகையாளர் ஹாரிசன் வெளியிட்ட ஔிப்படம் உலகெங்கும் பாலகுமாரின் நிலையை விளக்கியது.
சிறிலங்கா அரசு மெளனம் :
தோழர் பாலகுமாருடன் திரு.யோகி, கவிஞர் புதுவை இரத்தினதுரை ஆகியோர் சரணடைந்திருந்தாலும், மூல ஆதாரம் சிக்கியிருப்பது இவர் ஒருவருடையது தான்.
தோழர் வே.பாலகுமார் உயிருடன் இருக்கிறாரா இல்லையா, அவரின் கதி என்னவாயிற்று, என்கிற கேள்விகளுக்கான பதில் இன்னும் கிடைத்தபாடில்லை. ஆயினும்
பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஆதாரத்தோடு எண்ணற்ற கேள்விகள் எழுப்பினாலும், வாய் திறக்காமல் கள்ள மெளனத்தை சிறிலங்கா அரசு இன்னமும் காக்கிறது
உலகத்தின் மனசாட்சியை
உலுப்பி மெளனித்த முள்ளிவாய்க்கால் போரின் இறுதியில், தமிழ் மக்களில் உள்ள ஏக்கமெல்லாம்
மண்ணை மீட்க தம்மைத்தொலைத்துக் கொண்ட பாலகுமாரும் சரணடைந்த மற்றய போராளிகளும் எப்போது சுதந்திரக் காற்றை சுவாசிப்பார்கள் என்பதுதான்.புன்முறுவல் என்றும் பூத்த குறுந்தாடிக்கு சொந்தக்காரனான தோழர் வே.பாலகுமார் நேரியபார்வை
கொண்ட பண்பான தலைமைத்துவத்தின் அடையாளமாக என்றும் மிளிர்ந்தவர்.
அவருடன் தேச விடியலுக்காய்
பயணித்த தோழர்களும், மக்களும் தோழர் வே.பாலகுமாரை ஒரு போதும் மறவர். இன்றல்ல, என்றாவது ஓர் நாளினில் வரலாறு அவரை விடுதலை செய்யும் என்ற நம்பிக்கைகளுடன் ஈழவர் காத்திருக்கின்றனர்.
(15 – 09 – 1947 இல் ஈழத்தாயின் புரட்சி வித்தாய் மலர்ந்த க.வே.பாலகுமாரனின் 75 வது பிறந்த நாள் நினைவாக இக்கட்டுரை பிரசுரமாகிறது)