இலக்கியச்சோலை

தமிழ் மாணவர்களின் எழுத்தாற்றலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் சிட்னியில் நடந்த தமிழ் எழுத்தாளர் விழா!

“அறிந்ததைப் பகிர்தல் , அறியாததை அறிந்து கொள்ள முயல்தல்” என்ற சிந்தனையை முன்னிறுத்தி 2001 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் தொடங்கப்பட்ட தமிழ் எழுத்தாளர் விழா இயக்கம், பின்பு ஆண்டுதோறும் மாநிலங்களில் முன்னெடுக்கப்பட்டது.

இவ்விழாவை வருடந்தோறும் தங்கு தடையின்றி நடத்திவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இம்முறை சிட்னியில் கடந்த 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தூங்காபி சமூக மண்டபத்தில் சிறப்பாக நடத்தியது.

சங்கத்தின் உறுப்பினர் எழுத்தாளர், சட்டத்தரணி ( கலாநிதி ) திருமதி சந்திரிக்கா சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இவ்விழா நிகழ்ச்சிகளை எழுத்தாளரும், வானொலி ஊடகவியலாளருமான திரு. கானா. பிரபா தொகுத்து வழங்கினார்.

நாட்டியக் கலாநிதி ( திருமதி ) கார்த்திகா கணேசரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இவ்விழாவில், உலகெங்கும் போர் அநர்த்தங்களினால் உயிர் நீத்த இன்னுயிர்களின் ஆத்ம சாந்திக்காக மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், அவுஸ்திரேலியா ஆதிவாசிக்குடிமக்களும் நினைவு கூரப்பட்டனர்.

தமிழ் வாழ்த்துடன், அவுஸ்திரேலியா தேசிய கீதமும் பாடப்பட்டது.

எழுத்தாளர் விழாவின் முதல் அமர்வில் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் கம்பர்லாந்து மாநகர மேயர் திருமதி லிஸா லேக் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

சிட்னியில் தமிழ் கற்றுவரும் மாணவர்களின் எழுத்தாற்றலை இனம்கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் முகமாக சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக படைபிலக்கியத்துறையில் ஈடுபட்டு, பல இலக்கியப் பரிசில்களும், இலங்கை தேசிய சாகித்திய விருது உட்பட பல இலக்கிய விருதுகளும் பெற்றிருப்பவருமான எழுத்தாளர் தாமரைச்செல்விக்கு வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

விருதாளருக்கான பாராட்டுரையை எழுத்தாளர் திரு.லெ. முருகபூபதி சமர்ப்பித்தார்.

அவுஸ்திரேலியாவில் இதுவரைகாலமும் வெளிவந்துள்ள தமிழ் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள் இடம்பெற்ற கண்காட்சியும் நடைபெற்றது. சிட்னி தமிழ் வளர்ச்சி மன்றமும் கம்பர்லாந்து மாநகர சபை மற்றும் வென்ற் வேத்வில் மாநகரத்தின் பொது நூலகம் என்பன இந்த விழாவுக்கான அனுசரணையை வழங்கியிருந்தன.

முருகபூபதியின் தலைமையில் நடந்த வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில், நடேசனின் தாத்தாவின் வீடு ( நாவல் ) பற்றி ரஞ்சகுமாரும், தேவகி கருணாகரனின் அவள் ஒரு பூங்கொத்து ( சிறுகதைத் தொகுதி ) பற்றி சௌந்தரி கணேசனும் முருகபூபதியின் சினிமா: பார்த்ததும் கேட்டதும் ( கட்டுரை ) நூல் பற்றி கிறிஸ்டி நல்லரெத்தினமும் ஐங்கரன் விக்னேஸ்வரா தொகுத்திருக்கும் இலங்கை இதழியலில் சிவகுருநாதன் ( கட்டுரை ) நூல் பற்றி

ம. தனபாலசிங்கமும், கலாநிதி சந்திரிக்கா சுப்பிரமணியனின்

பெண் நூறு ( கட்டுரை ) பற்றி

இந்துமதி சிறீனிவாசனும் தத்தமது வாசிப்பு அனுபவங்களை சமர்ப்பித்து உரையாற்றினர்.

மதிய உணவு இடைவேளையைத் தொடர்ந்து மலையகம் 200 என்ற தொனிப்பொருளில் நடந்த கருத்தரங்கிற்கு குவின்ஸ்லாந்து மாநிலம் கோல்ட் கோஸ்டிலிருந்து வருகை தந்திருந்த மருத்துவ கலாநிதி வாசுகி சித்திரசேனன் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியை கானா. பிரபா தொகுத்து வழங்கினார்.

இலங்கையிலிருந்து, எழுத்தாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மல்லியப்பு திலகர் காணொளி வாயிலாக உரையாற்றினார்.

மலையகம் 200 ஐ முன்னிட்டு இலங்கையில் நடந்த நெடும்பயணமும் காணொளிக்காட்சியாக காண்பிக்கப்பட்டது.

கலாநிதி சந்திரிக்கா சுப்பிரமணியன், மலையகத்தின் அரசியல், சமூக பொருளாதார, கலை, இலக்கிய வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக வீரகேசரி பத்திரிகையின் வகிபாகம் என்னும் தலைப்பில் உரையாற்றினார்.

இவ்விழாவின் இதர அரங்குகளில் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்ட ஸ்ரெத்ஃபீல்ட் மாநகர மேயர் திருமதி கரன் பென்சபென், துணை மேயர் திருமதி சண்டி ரெட்டி மற்றும் பரமட்டா மாநகர மேயர் திரு. சமீர் பாண்டே ஆகியோர்

உரையாற்றியதுடன் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கும், எழுத்தாற்றல் மிக்க மாணவர்களுக்கும் சான்றிதழ்களையும் வழங்கினர்.

—0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.