இலங்கை தேசிய சாகித்திய விழாவில் “ சாகித்தியரத்னா “ விருது பெறும் எழுத்தாளர் க. சட்டநாதன்! …. முருகபூபதி.
இம்முறை எழுத்தாளர் க. சட்டநாதனுக்கு இலங்கை அரசின் சாகித்தியரத்னா விருது கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எமது நீண்ட கால இலக்கிய நண்பர் க. சட்டநாதனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்கின்றோம்.
குறிப்பிட்ட விருது வழங்கும் விழா இம்மாதம் 14 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவிருக்கிறது.
வட இலங்கையில் வேலணையில் பிறந்திருக்கும் சட்டநாதன் அந்தத் தீவுப்பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர்கள், சமூகச்செயற்பாட்டாளர்களுடனும் நெருக்கமான உறவை பேணி வளர்த்தவர். இவரை நண்பராகப் பெறுபவர்கள் எளிதில் இவரை மறந்துவிடமாட்டார்கள். இவரை இழக்கத் தயாராகமாட்டார்கள்!
வேலணையில் மறுமலர்ச்சிக்கழகம், தீவுப்பகுதி எழுத்தாளர் சங்கம் முதலானவற்றிலும் அறுபதுகளில் சட்டநாதன் இணைந்திருந்த காலத்திலேயே தரமான இலக்கிய ரசனை மிக்கவராகவே திகழ்ந்திருந்திருப்பதாக பேராசிரியர் சிவச்சந்திரன் பதிவுசெய்துள்ளார்.
” எனது கதைகள் பற்றி நானே ஏதாவது சொல்லவேண்டும் போலிருக்கிறது. விஸ்தாரமாக அல்ல, சுருக்கமாக. எந்தப்புற நிகழ்வுகளுமே என்னைப்பாதிக்கிறது. மனதைத் தொட்டு நெருடுகிறது. சில சமயங்களில் காயப்படுத்துகிறது. இந்த அனுபவங்களையெல்லாம் சிறைப்பிடிக்கும் எத்தனம்தான் எனது கதைகள். இறுக்கமான குடும்ப உறவுகளில் ஆணின் அதிகாரமுனை மழுங்க, பெண் தன்னைச்சுற்றிப்பிணைந்து கிடக்கும் தளைகளைத்தகர்த்து, விட்டு விடுதலையாவது எனது கதைகளில் இயல்பாகவே சாத்தியமாகிறது. ஆண் – பெண் உறவு உணர்வு விவகாரங்களைக்கடந்து சமூகத்துடனான மனித உறவுகளின் சித்திரம்தான் பிச்சைப்பெட்டிகளும் அந்தக்கிராமத்துச் சிறுமியும் முதலான சிறுகதைகள். இக்கதைகளிலும் ஏனைய கதைகளிலும் வருபவர்கள் நமது சிநேகத்திற்கும் நேசத்திற்கும் உரியவர்கள். மனிதநேசம் சாஸ்வதமானது.”
இவ்வாறு தனது முதலாவது கதைத்தொகுப்பான மாற்றம் நூலில் சொல்லும் சட்டநாதன், இதுவரையில் எழுதியிருக்கும் அனைத்துக்கதைகளிலும் மனிதநேயம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. பெண்களின் விட்டு விடுதலையாகும் இயல்பு சித்திரிப்பாகின்றது.
இவருடைய படைப்புமொழி எந்தச்சிக்கல்களும் அற்ற எளிமையானது. அதனால் எத்தகைய வாசகர்களுக்கும் இலகுவில் நெருக்கமாகிவிடும். இலக்கியவட்டாரத்தில் சிறுகதை இலக்கியம் பற்றிய பேச்சு வந்தால், அங்கு சட்டநாதனின் பெயர் தவிர்க்கமுடியாததாயிருக்கும்.
சட்டநாதனின் படைப்பாளுமைப்பண்பு பற்றி தமிழகத்தில் ஜெயமோகன், வெங்கட் சாமிநாதன் உட்பட, அருண்மொழிவர்மன், தி. செல்வமனோகரன், ஜீவநதி பரணீதரன், இரா. சிவச்சந்திரன், குப்பிழான் ஐ. சண்முகன், கலாநிதி நா. சுப்பிரமணியன், பேராசிரியர் சிவசேகரம், கருணாகரன், ஏ.ஜே. கனகரத்னா, மதுசூதனன் முதலானோர் விதந்து எழுதியுள்ளனர்.
எனினும், பெண்களின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்காகவும் எழுதிவரும் சட்டநாதனின் படைப்புலகம் பற்றி நானறிந்தவரையில் பெண்ணியவாதம் பேசும் பெண்கள் இதுவரையில் எழுதவில்லை என்பது எனது நெருடலான அவதானம்!
தமிழ் கதைஞர் வட்டத்தின் (தகவம்) பரிசில்களை சட்டநாதனின் பல கதைகள் பெற்றுள்ளன. சட்டநாதனின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பு ‘உலா’ (1992) யாழ். இலக்கியவட்டம், அகில இலங்கை சுதந்திர இலக்கிய அமைப்பு ஆகியனவற்றின் விருதுகளையும் வட – கிழக்கு மாகாண சாகித்திய விருது, இலங்கை தேசிய சாகித்திய விருது முதலானவற்றையும் பெற்றுள்ளது.
1970 இல் இவரது முதல் சிறுகதை ‘நாணயம்’ வீரகேசரி வாரவெளியீட்டில் வந்திருப்பதாக அறியப்பட்டாலும், நான் முதலில் படித்த அவரது கதை பூரணியில் 1972 இல் வெளியானது. இவரது சில கதைகள் ஆங்கிலத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிநாட்டு இதழ்கள் – நூல்களிலும் ( Journal of South Asian Literature – The Penguin New writing in Srilanka) வந்துள்ளன.
மல்லிகையில் சட்டநாதன் எழுதியிருந்த உறவுகள் சிறுகதை, அது வெளிவந்த காலப்பகுதியில் இலக்கிய உலகில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது.
சட்டநாதன், ஆண் – பெண் உறவுகளை துல்லியமாக இனம் கண்டு எழுதிவரும் அதேசமயம், உளவியல் பாங்கிலும் பாத்திரங்களை படைப்பவர். ஒரு பாடசாலை மாணவனின் எண்ணச்சுழற்சியையும் அதன் அடிப்படையில் வரும் மன அழுத்தத்தையும் (Obsessive Compulsive disorder) அழகாக சித்திரித்து அழுத்தம் என்ற சிறுகதையை எழுதியவர்.
சட்டநாதன், சிறுகதைகளை எழுதத் தொடங்கிய காலம் முதல், ஜீவநதியில் தொடர்நாவல் எழுதும் காலம் வரையில் சித்திரித்த பாத்திரங்களும் அவர்களை நடமாடவிட்டு வாசகரை அழைத்துச்செல்லும் ஊர்களும் மனதை விட்டு அகலாது.
முக்கியமாக பெண்களும் , குழந்தைகளும், அவரது கதைகளில் வரும் ஊர்களும் வீதிகளும் ஏன், மரம் செடி கொடிகளும் காய் , கனிகளும் பறவையினங்களும் எமது வாசிப்பு அனுபவத்தில் உடன் வந்துகொண்டிருக்கும்.
சட்டநாதன் ஆங்கில ஆசிரியராக பணியாற்றியவர். இலங்கை ஆசிரியர் சங்கத்தில் அங்கம் வகித்தவர். 1970 களில் இச்சங்கம் நடத்திய வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டமையால் தனது வேலையையும் இழந்திருந்தார்.
அக்காலப்பகுதியில் வீரகேசரியில் விளம்பரப்பிரிவில் சிறிது காலம் பணியாற்றினார். தினமும் நாம் எமது பணிகளுக்கிடையே இலக்கியம், நாடகம், சினிமா என பல விடயங்களை பேசிக்கொள்வோம்.
கொழும்பில் அவருடன் சில தரமான ஆங்கிலப்படங்களும் பார்த்திருக்கின்றேன்.
அவர் ஆங்கிலப்பட பிரியர். திரைப்பட விழாக்களை தவறவிடமாட்டார்.
அவுஸ்திரேலியாவுக்கு நான் வந்தபின்னர், இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களில் அவரை சந்திக்கநேர்ந்தால், அவரை மார்போடு அணைத்துக்கொள்வேன். அவரது அன்புத்துணைவியார் மறைந்த செய்தியறிந்ததும் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் சொன்னேன்.
அவருக்கு குழந்தைகள் இல்லை. இன்று மனைவியும் நினைவாகிப்போனார். எனினும், அவர் சிருஷ்டித்த குழந்தைகளும் மனைவிமாரும் அநேகம்! அவர் உளமாற நேசித்த மனைவியும் சமூகத்தின் குழந்தைகளும் சகோதர சகோதரிகளும் நண்பர்களும்
அவரது கதைகளில் ஏதோ ஒரு உருவத்தில் வந்துகொண்டிருப்பார்கள்! வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்!
அவர் தனது நூல்களை குடும்ப அங்கத்தவர்களுக்கே சமர்ப்பணம் செய்தவர்.
இலங்கையில் மல்லிகை, ஞானம், ஜீவநதி ஆகியன சட்டநாதனை அட்டைப்பட அதிதியாக பாராட்டி கௌரவித்துள்ளன. ஜீவநதி சிறப்பிதழே வெளியிட்டுள்ளது.
இலக்கிய உலகில் கொண்டாடப்படவேண்டியவரான சட்டநாதனின் படைப்புலகம், பாத்திர வார்ப்புகள், கதைசொல்லும் உத்தி பற்றியெல்லாம் வாசகர் மட்டத்தில் அனுபவப்பகிர்வுகளை எதிர்காலத்தில் நடத்தவேண்டும், அவர் குறித்து ஆவணப்படம் தயாரிக்கவேண்டும் முதலான வேண்டுகோள்களையும் இந்தப்பதிவின் ஊடாக முன்வைக்கின்றேன்.
—0—