இலக்கியச்சோலை

இலங்கையின் தமிழ்க் கவிதைப் பரப்பில் மஹாகவியின் குறும்பா!…. இரண்டாம் விசுவாமித்திரன்.

கவிஞர் மஹாகவி தமிழிலக்கிய வெளியில் நன்கு பிரசித்தம் பெற்றவர்.

வள்ளி (1955) அவரது முதலாவது கவிதைத் தொகுதி.மஹாகவியின் குறும்பா (1966). கண்மணியாள் காதை (1968) கோடை (1970) என்பனவும்

அவரால் தொடர்ந்து வெளியிடப்பட்டன.

1971 இல் அவர் மறைந்த துயரம் நிகழ்ந்தது.  ஒட்டியிருந்தவர்களின் உதவியால் பல பாநாடகங்களும் காவியங்களும் வெளியில் வந்தன.

.அவரின் படைப்புகளாக இன்று வரை ஆறு காவியங்களும் மூன்று பா நாடகங்களும்  நான்கு கவிதைத் தொகுதிகளும் நமது கைகளில் உள்ளன.

மஹாகவி ஈழத்து நவீன கவிதையின் முன்னோடியும் நவீன காவியங்களின் முன்னோடியும் ஆவார்.அவர் நமக்குத் தந்த குறும்பா பற்றியதே

 இக்கட்டுரையின் மையமாகும்.

குறும்பாவின் ஆதிமுகம்

லிமரிக் (Limerick ) என்ற ஆங்கிலக் கவிதை வடிவமே தமிழில் குறும்பா என வந்தது.பத்தொன்பதாம் நூற்றாண்டில் எட்வேர்ட் லியர் என்பவர் விமரிக் கவிதை வடிவத்தை பரவலாகப் பயன்படுத்தியவர்.

லிமரிக் என்பது வெறுமனே எள்ளல், நையாண்டி, நகைச்சுவை,அங்கதம், பாலியல் சேட்டை என்று கவிதையாக வெளிவந்ததே தவிர மனித சமூகத்தின் சிந்தனையைத் தூண்டும் வகையில் அதன் உள்ளடக்கம் அமைந்திருக்க வில்லை. மாறாக மஹாகவியின்  குறும்பா லிமரிக் வடிவத்தைக் கொண்டிருந்தாலும் லிமரிக் கவிதையின் இயல்புகளுக்கு மேலதிகமாக  சிந்தனை விரிவுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாய் அமைந்திருந்தது.

இலங்கையில் முதல் குறும்பா

நீர்கொழும்பிலே 30.01.1965இல் தமிழ் விழா ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்

வில் கலந்து கொள்ள வந்திருந்த கவிஞர் மஹாகவி தான் எழுதிய குறும்பா கவிதை தொகுதிக்கு பிரபல எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையிடம் அணிந்துரை கேட்டு அதனைக் கையளித்திருந்தார்.

கவியரங்கத்திற்குத் தலைமை தாங்கிய பொன்னுத்துரை தனது உரையில்

தொகுதியில் இருந்த முதலாவது குறும்பாவை வாசித்துக் காட்டினார்.

உத்தேசம் வயது பதினேழாம்

உடல் இளைக்க ஆடல் பயின்றாளாம்

எத்தேசத் தெவ்வரங்கும்

ஏறாளாம். ஆசிரியர்

ஒத்தாசையால் பயிற்சி பாழாம்

நமக்கு அறிமுகமான முதலாவது குறும்பா இதுதான்.

 கூட்டமுடிவில் மஹாகவியிடம் குறும்பா தொகுதியைப் பெற்ற இளம்பிறை ஆசிரியர் எம்.ஏ.ரஹ்மான் தனது சஞ்சிகையின் மூன்றாவது இதழில்  (மாலை1 பூ3 ) ஒரு குறும்பாவை  பிரசுரித்தார்.

அல்லையிலே வாழ்பவளாம் முல்லை அவளழகால் ஆடவர்க்குத் தொல்லை

       இல்லை எனும் தன்இடையை

        இல்லைஎனா தீந்ததனால்

இல்லைஎன்பார் இப்பொழுதோ இல்லை

இதுவே அச்சில் வெளிவந்த முதலாவது குறும்பா ஆகும். தொடர்ந்து  மாதம்தோறும் ஆறு ஏழு குறும்பாக்கள் இளம்பிறையில் பிரசுரம் கண்டன.

மட்டுமல்லாமல் இச்சஞ்சிகையானது இளம் தலைமுறையினரிடையே குறும்பா மீதான ஈர்ப்பை உண்டாக்கும் வகையில் குறும்பாவுக்கு நயம் எழுதும் போட்டிகளை வைத்து பரிசுகளும் வழங்கியது.

குறும்பா ஏற்படுத்திய சர்ச்சைகள்

மஹாகவி லிமரிக் கவிதைகளின் அருட்டுணர்வினால்  தமிழில் குறும்பா எழுதி வெளியிட்டார். அது தமிழுக்கு புது வடிவம் என்றார். எஸ்.பொன்னுத்துரை எம்.ஏ.ரஹ்மான் போன்றவர்கள் அக்கருத்தை ஆதரிக்க சில்லையூர் செல்வராஜன் தலைமையில் ஒரு குழுவினர் குறும்பா தமிழுக்கு புது வடிவமே அல்ல என்று சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டு எதிர்வாதம் புரிந்தனர்.

சில்லையூர் செல்வராஜன் குழுவினர் தங்களுக்குச் சாதகமாக ஒலிபரப்புச் செய்த  பாடல் இதுதான்.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி

நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தானொரு ஒரு தோண்டி அதை

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி

காவடிச் சிந்து மற்றும் சித்தர் பாடல்களின் அண்மித்த வடிவமே குறும்பா என்று விளக்கமும் கூறினர்.

அண்மித்த வடிவம் என்பதே புது வடிவம் தானே. அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

குறும்பாவின் தனித்துவம்

மஹாகவியின் குறும்பாவுக்கென்று  சில இயல்புகள் உள்ளன. பேரா.செ.யோகராசா அவர்களின் பார்வையில் மஹாகவியின் குறும்பாவின் இயல்புகள் பின்வருமாறு:

அ) குறுகிய பாவடிவம்

ஆ)குறும்புப் பா

இ) ஒரே எதுகையுடைய மூன்று அடிகள்

ஈ) ஐந்து வரிகளில் அமைவது

உ)குறும்புடன் சிந்திக்கவும் தூண்டுதல் ஊ)காட்சி துணுக்கு சம்பவங்கள் ஊடாக வெளிப்படுவது

எ) இறுதி அடியில் அழுத்தம்     வெளிப்படுவது

குறும்பாவுக்கென்று தனியான யாப்பும் வரைவிலக்கணமும்உண்டு.பதின்மூன்று சீர்கள் கொண்டது.

காய் காய் தேமா

காய் காய் தேமா

காய் காய்

காய் காய்

காய் காய் தேமா

எதுகை மோனை இயைபு கொண்டவை

இதன் காரணமாக ஓசை உருவாக்கம் இடம்பெற ஏதுவாகின்றது.

குறும்பாவை பொறுத்தவரையில் அதன் முதலாவது அடி  வழிகோலுவதாகவும் இரண்டாவது அடி கட்டி எழுப்புவதாகவும் அமைய வேண்டும். மூன்றாம் அடி முத்தாய்ப்பாக  முகம் காட்டும்.

குறும்பாவின் அடிநாதமே மூன்றாவது அடிதான்.

தலைப்பு இல்லாமை குறும்பாவின் இன்னுமொரு தனித்துவம் ஆகும். தலைப்பில்லாமல் தனது செய்தியை வெளியே தெரிவிக்க முடியாதவை  பலவீனமான குறும்பா ஆகும்.

மகாகவிக்கு பின்னரான குறும்பா கவிஞர்கள்

1960களில் மையப் பகுதியில் மஹாகவி  குறும்பாக்களை எழுதிய போதும்  மூத்த கவிஞர்கள் எவரும் அந்த வடிவத்தில் கவிதைகளை எழுத முன்வரவில்லை. ஏற்கனவேயுள்ள வடிவமே போதும் என்ற குறும்போக்கு வாதமும்  மஹாகவி மீதான தீட்டு மனப்பான்மையும் காரணமாக இருந்திருக்கலாம்.

எனினும்  மஹாகவி காலத்து

இளம் தலைமுறையினர்  குறும்பா வடிவில் கவிதைகளை எழுதத் தொடங்கினர்.

அவ்வாறானவர்கள் பற்றி ஒரு சிறு குறிப்பொன்றை இடுதல் வரலாற்றுத் தேவையாகும்.

செங்கதிர் சஞ்சிகையின் ஆசிரியர் கவிஞர் செங்கதிரோன் ஜீவநதி சஞ்சிகை(வைகாசி 2019) இல் பின்வருமாறு எழுதியுள்ளார்.

“குறும்பா தமிழில் அறிமுகமான காலத்திலேயே ( 1965 ) உரிய முறையில் உருவ உள்ளடக்கத்தை பின்பற்றி குறும்பா எழுதி தொடர்ந்தும் அம்முயற்சிகளில் ஈடுபட்டவர் என்ற வகையில் மஹாகவிக்குப் பின்னர் முதன்முதலில் குறும்பா எழுதியவர் கவிஞர் ஏ.பீர் முகம்மது என்பது என் கணிப்பு.”

மஹாகவியின் அடியொற்றி  கவிஞர் ஏ.பீர் முகம்மது எழுதிய முதலாவது குறும்பா இது.

சிந்தனையைக் கிளறுகிறான் பாடி சிரிப்பும்  உடனேவருமாம்  கூடி

      வந்து குறும்பாவினை நம்

      வாய் கிழிய மெய்சிலிர்க்க

தந்திடுவான் ஊழல்களைச் சாடி

              (இளம்பிறை செப் 1965)

1970களில் குறும்பா எழுதியவர்களில்

எம்.எச்.எம்.ஷம்ஸ் ,கலைவாதி கலீல், ஜவாத் மரைக்கார் ஆகியோர் முக்கியமானவர்கள். ஏராளமான குறும்பாக்களை அவர்கள் எழுதினாலும் தொகுப்புகளாக அவை வெளிவர வில்லை.

எண்பதுகளில் கவனம் பெற்றவர்களாக அல்.அஸுமத், தீரன் நெளசாத் , கொக்கூர் கிழான் ஆகியோர் உள்ளனர்.

அஸுமத் தனது பூபாளம் சஞ்சிகையில் குறும்பாக்கள் எழுதியதுடன் குறும்பா கவியரங்குகளும் நடாத்தியவர்.

அவரைப் போலவே தீரன் நௌசாத்தும் தனது தூது சஞ்சிகையில் குறும்பா எழுதியதோடு  ஆசிரிய தலையங்கம் கூட குறும்பாவிலேயே எழுதப்பட்டது. இன்றுவரை முகநூலில் சிறப்பான குறும்பாக்களை எழுதி வருகிறார்.

கொக்கூர் கிழான் தனது நண்பர்களுக்கு கடிதம் எழுதுவதே குறும்பாவில் தான்

காப்பியக்கோ ஜின்னாஹ் சரீப்தீன் அண்மைக்காலத்தில் முகநூலில் தொகையான குறும்பாக்களை எழுதியவர். தொகுதி போடும் உத்தேசம் தெரிகிறது.குறிஞ்சித்  தென்னவன் , சிவசேகரம், மலர் என்பவர்களும் குறும்பா எழுதியுள்ளனர்.

இவர்களைத் தவிர இன்னும் பலரும் குறும்பா எழுதியிருக்க வாய்ப்புண்டு. எனது வரையறுக்கப்பட்ட வலை வீச்சில் அவர்கள் அகப்படவில்லை. தகவல் தந்தால் எதிர்காலத்தில் இணைத்துக் கொள்ளலாம்.

குறும்பா தொகுதி

மஹாகவியின் முதலாவது குறும்பா தொகுதி 1966 பெப்ரவரியில் வெளியானது. நூறு குறும்பாக்கள் அதில் இடம்பெற்றன. எம்.ஏ.ரஹ்மான் தனது அரசு வெளியீட்டின் பன்னிரெண்டாவது நூலாக இதனைத் தந்தார்.

எஸ்.பொன்னுத்துரை குறும்பாவை விளக்கி  முன்னீடு தந்து தொகுதிக்கு முடி சூட்டினார்.

எஸ்.கே.சௌந்தரராஜன் எனப்படும் சௌ  கோட்டோவியம் வரைந்தவர். அக்காலத்தில் மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியராக தொழில் சுவைத்தவர்.

ஓவியங்கள்தான் குறும்பாக்களின் ஈர்ப்பு விசை. மேற்படி தொகுப்பில் அய்ம்பது ஓவியங்கள் மருதாணி இட்டு மகிழ்ந்தது.

குறும்பாக்களை மக்களின் கையிலே வைத்த ரஹ்மானுக்கும் கருத்திலே சேர்த்த பொன்னுத்துரைக்கும் கண்ணிலே பதித்த சௌவுக்கும் நன்றிகள் என்று மஹாகவி தொகுப்பின் நுழைவாயிலில் எழுதித் தொங்கவிட்டுள்ளார்.

இரண்டாவதாக வெளிவந்த குறும்பா தொகுதி ( 2000 இல்) ‘நகை’ என்ற தலைப்பில் கிடைத்தது. பிரபல இலக்கியவாதி சோ.பத்மநாதன் அணிந்துரை வழங்கியிருந்தார்.

ஒலுவில் எஸ்.ஜலால்தீன் ‘சுடுகின்ற மலர்கள்’ (2002)என்ற தலைப்பிலும்

2010 இல் ஜே. வகாப்தீன் ‘வெட்டுக் கற்கள் ‘ என்ற தலைப்பிலும் குறும்பா தொகுதிகளை வெளியிட்டனர்..

 ‘பாலமுனை பாறூக் குறும்பாக்கள் ‘ என்ற பெயரில் 2013 இல் கவிஞர் பாறுக் ஒரு தொகுதியை வெளியிட்டார். இவர் ஏற்கனவே கவிதை நூல்களை வெளியிட்டபோதிலும் குறும்பா தொகுதியே அவரின் பெயர் சொல்லும் எனச் சிலாகிக்கப்பட்டது.

 கரவை மு.தயாளன் தொகுத்த ‘குறும்பாக்கள் ‘ (2018) இல் வெளிவந்தது.

கரவை தயாளன் குறும்பாக்களை

இலக்கணம் தவிர்ந்த வகை,மஹாகவி வகை , இறுக்கமான வகை என மூன்றாகக் குறிப்பிடுகின்றார். வழமையான குறும்பா தொகுப்பிலிருந்து இது வேறுபட்டது என்று அவர் முகவுரையிலேயே குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் மஹாகவியின் குறும்பா

இலங்கையில் மஹாகவியின் குறும்பா வித்தாகி அரை நூற்றாண்டு கடந்த நிலையில் தமிழகத்துப் பெரும் கவிஞர்கள் சிலர் குறும்பா  எழுதி

மகிழ்ந்தமை மஹாகவியின் ஆற்றலிலக்கிய வெற்றியென்றே கூறலாம். கவிக்கோ அப்துல் ரஹ்மான், சிற்பி , மீரா, ஈரோடு தமிழன்பன் ஆகியோர் குறும்பாவில் சுவை கண்டனர்.

கவிக்கோ அப்துல் ரஹ்மானின் ஒரு குறும்பா இது.

வள்ளுவரும் மாணவராய் ஆனார் திருக்குறளில் தேர்வெழுதப் போனார்

                             முடிவு  வெளியாச்சு

                             பெயிலாகிப்போச்சு

பாவம் அவர்படிக்கவில்லை கோனார்

முடிப்பு

மஹாகவி குறும்பாவை அறிமுகப் படுத்தினார் என்பதிலும் குறும்பாதான் மஹாகவியை அறிமுகம் செய்தது என்பதே எமது கட்சி.

1965க்கு முன்னர் மூத்த கவிஞர் என்று மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மஹாகவி விலாசம் பெற்றிருந்தார். குறும்பாவின் அறிமுகத்தின் பின்னரே அவர் வெளிச்சம் கிடைத்து வெளியே வந்தார்.

புதுடில்லி பல்கலைக்கழகத்தில் கடமையாற்றிய பேராசிரியர் சாலை இளந்திரையன் அவர்கள் “வள்ளி தொகுப்பில் உள்ள கவிதைகளில் மஹாகவியின் சில தனி இயல்புகள் முகம் காட்டினாலும் பல ஆண்டுகளுக்குப் பின் வந்த குறும்பாவே அவரை தனித்தன்மை வாய்ந்த பெரும் கவிஞனாக நிலை நிறுத்தியது” என்று எழுத்திலே பதிவு செய்தமை

இதனை எண்பிக்கும்.

குறும்பாவின் பரவலான அறிமுகத்தின் பின்னரே அவருடைய நவீன காவியங்களும் பா நாடகங்களும் வெளியே  வந்து பேசித் தொடங்கின என்பதை இன்றைய இலக்கிய உலகம் வசதியாக மறந்து விட்டது என்பதுதான் கவலையான விடயமாகும்.

———————————————

 

Loading

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.