நல்ல தீர்ப்பு நாயகன் ஏலையா முருகதாசன்!
காலத்தால் மறக்க முடியாத ஈழத்தின் உன்னத நாடக நடிகர்.
நண்பர் ஏலையா முருகதாசன் அவர்களை சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னரே ஜேர்மனியில் நடத்தப்பட்ட எழுத்தாளர் மாநாட்டில் சந்தித்திருக்கிறேன்.
அப்போது அவர் தான் வாழ்ந்த நகரத்திலேயே தன்னை ஒரு படைப்பாளியாக அடையாளப்படுத்த வேண்டிய போராட்டம் இருந்தது.
எழுத்தாளர் மாநாட்டுக்காக டென்மார்க், பாரீஸ் போன்ற நாடுகளில் இருந்து எழுத்தாளர்கள் அங்கு சென்றிருந்தோம் ஆனால் மாநாடு நடத்தப்பட்ட ஜேர்மனியில் இருந்த பல எழுத்தாளர்கள் அழைக்கப்படவில்லை அதில் ஒருவர் ஏலையா முருகதாசன்.
பின்னர் அவரை அழைத்ததும், இத்தகைய செயல்களை செய்வது சிறுபிள்ளைத்தனமானது என்பதை சுட்டிக்காட்டியதும் அவரையும் மற்றய எழுத்தாளர்களையும் பங்குபெற செய்ததும், நட்பானதும் பழைய கதை.
ஆனால் அந்த வலியின் அளவு இப்போதுதான் மிகவும் பெருத்து பலூன் போல உள்ளத்தில் ஊதியிருக்கிறது.
அதை ஊத வைத்தது புலம் பெயர் நாடுகளில் இருந்து பல எழுத்தாளர்களை இணைத்து தொடரான கதையை எழுதுவிக்கும் அவரது முயற்சியில் காணப்பட்ட ஒரு தகவல்தான்.
அந்தக் கதைகளில் முதலாவதாக வெளியாகியிருந்த ஏலையா முருகதாசனின் கதையை வாசித்தபோது அதில் இருந்த முன்னோட்டக் குறிப்புத்தான் என்னை அதிர்ச்சியடைய வைத்தது.
அவர் நல்லதீர்ப்பு நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தவர் என்ற செய்தியே அது.
நல்ல தீர்ப்பு…. ஈழத்தில் உள்ள எந்தக் கலைஞன் மறப்பான் அந்த நாடகத்தை…?
உடனடியாக அவருடன் தொடர்பு கொண்டு பேசினேன்… எதற்காக அன்று ஜேர்மனியில் சந்தித்தபோதே எனக்கு இந்த விடயத்தைச் சொல்லவில்லை என்று கேட்டேன்..
சுய விளம்பரம் தவறு என்ற கொள்கையால் சொல்லவில்லை என்றார்.
+இந்தத் தவறான கொள்கையால் எமது இனத்தின் தலைசிறந்த கலைஞர்கள் எல்லாம் புலம் பெயர் நாடுகளில் தடயமற்றுப் போகிறார்களே… இங்குள்ள பல அரைவேக்காடுகளால் அவன் அடித்துச் செல்லப்பட்டுவிடுகிறானே என்ற வேதனையைப் பகிர்ந்து கொண்டேன்.
எனக்கு மட்டும் நல்ல தீர்ப்பு நாடகத்தில் நடித்த முக்கிய நடிகர் அந்த நகரத்தில் இருக்கிறார் என்பது முன்னரே தெரிந்திருந்தால் கண்டிப்பாக அவரைத் தலைவராக வைத்தே அந்த நிகழ்வை நடத்த வேண்டுமென அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருப்பேன்.
ஜேர்மனியில் கலைப்பணி என்று மகுடமிட்டுத் திரிவோர் இப்படியொரு உன்னதக்கலைஞன் இருந்ததை எமக்கெல்லாம் ஏன் அடையாளம் காட்டத் தயங்கினார்கள் என்ற தார்மீகக் கோபமும் என்னை வாட்டியது.
காரணம் நல்ல தீர்ப்பு நாடகம்தான்.
எழுபதுகளில் தமிழீழ மண்ணில் கொடிகட்டிப்பறந்த நாடகம் அம்பனை கலைப்பெரு மன்றம் வழங்கிய நல்லதீர்ப்பு.
அந்த நாடகம் மேடையில் ஏறினால் தோல்வியடைந்து கீழே இறங்கியதை நான் எங்கும் காணவில்லை, அப்படியொரு நடிப்பு வெளிப்பாட்டு அழகு.
அக்காலத்தே புகழ்பெற்ற நாடகங்களை எல்லாம் தோற்கடித்து வெற்றி வாகை சூடிய அற்புதப் படைப்பு.
எழுபதுகளில் வல்வை நேதாஜி நடத்திய நாடகப்போட்டியில் பங்கேற்கவிருக்கும் நாடகங்களுக்கான முதற்கட்ட தேர்வு நடந்து கொண்டிருந்தது, அவர்களுடைய நடிப்பை அருகிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
அதன் காட்சிகள் மனத்திரையில் மறக்க முடியாமல் பதிந்துவிட்டன.. முதற்பரிசு அவர்களுக்கே என்று எண்ணிக்கொண்டேன், 1972ல் நான் பங்கேற்ற முதலாவது நாடகப்போட்டி அதுதான்.
அன்று எமது நாடகம் சாம்ராட் அசோகனுக்கு கடைசிக்கு முதலிடம் கிடைத்தது.
அன்று மத்தியஸ்தராக தெல்லிப்பழையைச் சேர்ந்த நடுவர் ஒருவர் வந்திருந்தார் அவர் மாவை மறுமலர்ச்சி நாடக மன்றத்தின் மகுடபங்கத்திற்கு முதலிடமும், நல்ல தீர்ப்பிற்கு இரண்டாமிடமும், புலோலி எல்லைக்கோடு நாடகத்திற்கு மூன்றாமிடமும் கொடுத்திருந்தார்.
அவர் மத்தியஸ்தராக வந்தால் அந்த நாடகத்திற்கே முதற்பரிசு கிடைக்கும் என்றார்கள், உண்மையில் மகுடபங்கம் முதற்பரிசுக்குரிய நாடகம்தான் ஆனால் அதற்கு கடுகளவும் குறைந்ததல்ல நல்ல தீர்ப்பு..
என் உள்ளத்தில் அழியாத ஓவியமாக வரையப்பட்டுவிட்ட நல்ல தீர்ப்பு நாடகத்தின் நாயகனைத்தானா நான் ஜேர்மனியில் சந்தித்தேன்…
அன்று நான் ஜேர்மனியில் அவரைக்கண்டபோது ஏறத்தாழ கால்நூற்றாண்டு கடந்துவிட்டதால் நல்ல தீர்ப்பு நாயகனை என்னால் அடையாளம் காணமுடியவில்லை.
அந்த நாடகத்தில் அண்ணனாக நடித்தவரை ஒரு வானொலியில் அறிவிப்பாளராக இருந்தபோது அவருடைய குரலில் வைத்துகண்டுபிடித்தேன், ஆனால் ஏலையா முருகதாசனை என்னால் அடையாளம் காண முடியாமல் போய்விட்டது.
காரணம் ஏலையா என்ற சஞ்சிகையால் அவர் வைத்துக்கொண்ட புதுப்பெயரும், அவர் தன்னை ஓர் எழுத்தாளராகவும் காட்டிக் கொண்டதாலும் என்னால் அவருடைய நாடக வாழ்வை நினைவுக்குள் கொண்டுவர முடியவில்லை.
நேற்று முன்தினம்தான் அவர் நல்ல தீர்ப்பில் நடித்தவர் என்றவுடன் துடித்துப் பதைத்துவிட்டேன், அந்த நாடகத்தின் மறக்க முடியாத காட்சிகளைக் கூறி வினவினேன்.
நாடகத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகர் ஆணாக இருந்தாலும் அவருடைய பெண் நடிப்பு கற்பனை பண்ணமுடியாதளவுக்கு ஜீவனுடன் இருக்கும் எங்கே அவர் என்றேன்.. பார்க்கத்துடித்து மனம்…
அவர் அகால மரணமடைந்துவிட்டதாக தெரிவித்தார்… இடி விழுந்ததைப் போலிருந்தது.
இன்னொரு நடிகர் சிகரட்டை புகைத்துவிட்டு புகைய ஆரம்பித்துவிட்டது என்று வசனம் பேசுவார் எங்கே என்றேன்…
அந்த நகைச்சுவை நடிகர் கனடாவில் வாழ்ந்து இப்பொழுது அமரராகிவி;ட்டார்.
கடைசிக்காட்சியில் துப்பாக்கிச் சூடு தவறுதலாக விழுந்து வில்லன் இறக்கும் காட்சி..
ஏலையா முருகதாசன் கலங்கிவிட்டார்… தான் நடித்த நாடகத்தை 45 வருடங்கள் கடந்த பின்னரும் ஒருவன் அங்கம் அங்கமாக எடுத்துரைக்கிறானே..
நாம் அத்தனை சாதனை படைத்திருக்கிறோமா.. நமது நாடகம் அவ்வளவு தூரம் மக்கள் மனதில் பதிந்திருக்கிறதா.. தடுமாறினார்.
கலையரசு சொர்ணலிங்கம், நடிகமணி வீ.வைரமுத்து, மௌனகுரு, புகழ்பூத்த ராஜ் நாடக மன்றததின் ராஜரட்ணத்தின் ஆ.சிவனேசச்செல்வன் போன்ற கலைஞர்களால் வாழ்த்தப்பட்ட ஒரு கலைஞர் அவர்..
அப்படிப்பட்ட கலைஞர் ஜேர்மனியில் வாழ்கிறாரே.. அவரை அழைக்காமல் ஒரு தமிழ் எழுத்தாளர் மாநாடு அவர் வாழும் வீட்டுக்கு பக்கத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறதே..
மனம் அழுதது..
இன்று வெளிநாடுகளில் ஆளுக்கு நூறு பட்டங்களை சுமப்போரை கலைஞர்களாக போற்றுகிறோம்.. எத்தனையோ சாதனைகள் படைத்துவிட்டும் ஓர் ஈழத்துக் கலைஞன் அடையாளமின்றி வாழ்கிறானே.. இது நியாயமா.. என்ற துடிப்பு என்னை நிலத்தில் போட்டுப் புரட்டி அடித்தது..
நாம் தாயகத்தில் இருந்து நமது வாழ்க்கையை, உற்றார் உறவினரைத் தொலைத்துவிட்டு இங்கு வந்தோம் என்று கவலையுடன் வாழ்ந்தேன்..
ஏலையா முருகதாசனைப் பார்த்த பிறகு நாம் வரலாற்றையும் தொலைத்துவிட்டு நிற்கிறோம் என்ற வேதனை மேலும் ஒரு சுமைபோல முதுகில் இறங்கியது.
இப்பொழுது ஒரு கடமை கண்முன் நிற்கிறது..
புலம் பெயர் நாடுகளில் வாழும் மூத்த கலைஞர்களின் விபரம் திரட்டப்பட்டு அவர்களுடைய வரலாறு பதிவு செய்யப்பட வேண்டும், இல்லையேல் உண்மைக்கலைஞர்களை காலம் அடித்துச் செல்ல வெறும் கண்ணாடிகளே கலை வைரங்களாக ஒளிரும் அவலம் ஏற்பட்டுவிடும்.
இப்போது ஏறத்தாழ அது நடந்துவிட்டது, ஆழக்கடலில் மூழ்கும் உண்மையின் ஒரு சிறிய கை மட்டும் மங்கலாகத் தெரிகிறது மீட்டெடுக்க வேண்டும்..
கடலில் முற்றாக மூழ்கிப்போக முன் அந்தக் கரத்தைப் பற்றிக்கொள்ள விரைய வேண்டும்..
ஏலையா முருகதாசன் நடித்த நல்ல தீர்ப்பு ஒரு நாடகம் மட்டுமா.. இல்லை சரியான கலைஞர்களை அடையாளம் காட்டும் ஒரு நல்ல தீர்ப்பும் வழங்கப்பட வேண்டுமென்ற ஒளியாக மறுபடியும் வந்து நம்முன் நிற்கிறதே..
இது ஆச்சரியம்… ஆனால் உண்மை.
45 வருடங்கள் தாண்டி நல்ல தீர்ப்பு நாடகம் எப்படிச் சிந்திக்கத் தூண்டுகிறது பாருங்கள்.. அதுவல்லவோ படைப்பின் பெருமை..
வாழிய நல்லதீர்ப்பு ஏலையா முருகதாசன்..
கி.செ.துரை டென்மார்க். 18.05.2014