கவிதைகள்
வடிவழகன் வேலவன் மஞ்சமதில் வருகிறான்! …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
மஞ்சமதில் அமர்ந்து மால்மருகன் வருவான்
வெஞ்சமரில் வெற்றி சூடியவன் வருவான்
தஞ்சமென நின்றால் தாங்கியவன் நிற்பான்
வஞ்சமனம் போக்க வைத்திடுவான் முருகன்
நீலமயில் ஏறும் வேலவனாம் முருகன்
ஓலமிடு அடியார் உளமுணர்ந்து வருவான்
ஆலகால முண்ட அரனாரின் மைந்தன்
அடியார்கள் அழைத்தால் அரவணைக்க வருவான்
சாத்திரமும் ஆவான் தோத்திரமும் ஆவான்
சகலகலா வல்லவனாய் வேலவனும் இருப்பான்
அடியார்கள் பாட்டுக்கு அவனாடி வருவான்
அமரர்கள் துயர்களைந்த அப்பனே முருகன்
அருணகிரி தமிழருந்தி ஆனந்தம் அடைந்தான்
ஆலாகால முண்டார்க்கு ஆசானாய் அமைந்தான்
பழனிமலை மீதிலே ஆண்டியாய் அமர்ந்தான்
பணிந்திடுவார் யாவருக்கும் பழமாவான் முருகன்
நல்லூரன் மஞ்சம் வீதிவரும் வேளை
எல்லோரும் இணைந்து மஞ்சமதை இழுப்பார்
கல்லான மனமும் கனியாக மாற
நல்லூரின் முருகன் மஞ்சமதில் வருவான்
வடிவழகன் வேலவன் மஞ்சமதில் வருகிறான்
தனதடியார் துயர்களைய தானவனும் வருகிறான்
உருகிவிடு மடியார்கள் தமைமறந்து நிற்கிறார்
அருளிடவே வேலவன் மஞ்மதில் வருகிறான்.
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மிழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. ஆஸ்திரேலியா