இலக்கியச்சோலை
ஈழப் போராட்டத்தில் ஓவியக் கண்காட்சிகளும் ஓவியர் ஆசை இராசையாவின் தூரிகை வர்ணங்களும்!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா.
( ஈழத்தின் தலைசிறந்த மறைந்த ஓவியர் ஆசை இராசையாவின் 77ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது)
“வாழ்ந்த வாழ்வும் – வளரும் நாட்களும்“ ஈழத்தின் தலைசிறந்த ஓவியர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தியது இவ் ஓவியக் கண்காட்சி. 1988 இல் ஈழத்தின் பல பகுதிகளிலும் நடாத்தப்பட்ட இவ் ஓவியக் கண்காட்சியில்
அ.மாற்கு, ஆசை இராசயா, மற்றும் பல இளம் ஓவியர்களின் ஓவியங்கள் யாழ்ப்பாணம், பருத்தித்துறை , திருகோணமலை , மட்டக்களப்பிலும் கண்காட்சி வெகுசிறப்பாக நடாத்தப்பட்டது.
தலைநகர் திருகோணமலையில் :
ஈழத்தின் தலைநகர் திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் நடாத்திய ஓவியக் கண்காட்சி மக்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.மாவட்டத்தின் அனைத்துக் கிராமங்களிலும் உள்ள, மூலை முடுக்கெலாமிருந்தும் மக்களும், மாணவர்களும் வருகைதந்து பார்வையிட்டு சென்றார்கள்.
கண்காட்சியை விடவும், ஓவியர் தேவாவின் மூலம் வரைந்து, திருக்கோணமலை நகர வீதிகள், சேதமாகிக்கிடந்த கட்டிட இடிபாடடைந்த சுவர்கள், மதில்கள் தோறும் வரைந்து சோடிக்கப்பட்டிருந்த பதாகைகளும், பேனர் தோரணங்களும் இன்னும் சிறப்பாகவும், கவர்ச்சியாகவும் காணப்பட்டன.
இந்திய ஆக்கிரமிப்பு காலகட்டத்தில் 1989 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஈரோஸ் அமைப்பு திருக்கோணமலை மாவட்டத்தில், தமிழினம் வரலாறுகாணாத, அமோக வெற்றியீட்டியதற்கு குறித்த ஓவியக் கண்காட்சியும் பிரதான காரணியாக இருந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்காட்சியை ஈழப்புரட்சி அமைப்பின் மாணவர் அமைப்பான GUYS தாயகம் எங்கும் “வாழ்ந்த வாழ்வும் வளரும் நாட்களும்” எனும் மௌடத்தில் நடாத்தி மக்களிடையே தேசிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது.
ஓவியர் இராசையா நினைவாக கண்காட்சி:
ஈழத்தின் தலைசிறந்த ஓவியரான
ஆசை இராசையா நினைவாக கலைநிகழ்வுகளும், கண்காட்சியும் ஓவியர் ஆசை இராசையாவின் 77ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு ‘பிரம்மம்’ என்ற தலைப்பிலான நினைவுகூரல் நிகழ்வு மற்றும் ஓவியக் கண்காட்சி என்பன இம்மாதம் ஆகஸ்ட் 19,20 ஆகிய தினங்களில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது.
ஓவியர்களையும் ஓவியக் கலையையும் கொண்டாடும் விழாவாக இந்தநிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை சிறப்பாகும்.
ஓவியர் ஆசை இராசையா ஆகஸ்ட் 16, 1946 அச்சுவேலியில் பிறந்தவர். இவர் தரமான நூல்களின் வடிவமைப்பாளராகவும், அட்டைப்பட ஓவியராகவும், நிலவுருக்கள் மற்றும் மெய்யுருக்களை வரைவதில் புகழ் பெற்றவராகவும் விளங்கியவர். இவர் இலங்கை முத்திரைப் பணியக ஓவியக் குழுவில் ஒருவர். இலங்கை அரசின் எட்டு முத்திரைகளுக்கான ஓவியங்களை இவர் வரைந்துள்ளார்.
இளம் பராயத்தில் பாடசாலை வாழ்வு முடிந்ததும் அவரது கலை வேகமாக கொழும்பு நுண்கலைக் கல்லூரியை நோக்கிச் சென்று, அவரது வாழ்க்கையின் திருப்பு முனையை ஏற்படுத்திய தேடல் காலமாகியது. அவருள்ளிருந்த ஓவியக் கலைஞன் புதிய பரிணாமத்தை நோக்கிய வளர்ச்சியில் தன்னை இனம் காட்டத் தொடங்கினார்.
பல கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள் அவரது தனித்துவக் கலை ஆளுமையை அடையாளப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. தேடல், ஆய்தல், கற்றல், அறிதல் என விரிந்து பரந்தளத்தில் அவரின் கலையார்வம் விஸ்வரூபம் கொள்ளத் தொடங்கியது. வளர்ச்சி பிரமிக்கவைக்கும் வகையில் வளர்ந்து வந்து இவரை ஒரு மகா கலைஞனாக்கியுள்ளது.
ஆரம்பத்தில் 1971 இல் வேலணை மத்திய கல்லூரியில் சித்திரபாட ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் பலாலி ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்று 1975 தொடக்கம் 1983 வரை கொழும்பு றோயல் கல்லூரியில் பணியாற்றினார். இனக்கலவரத்தின் பாதிப்புக்களினால் தமிழ் மண்ணிலேயே வாழ்வது என்ற முடிவுடன் உறுதி பூண்டு வாழ்ந்து வந்தார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் சித்திரமும் வடிவமைப்பும் துறையில் கற்கும் மாணவர்களுக்கு வருகை விரிவுரையாளராகப் பணியாற்றிய
இவரது படைப்புக்களில் வெளிக்காட்டப்படும் உருவங்கள் யாழ் மண் சார்ந்ததாகவே இருக்கின்றன. இவரது முதலாவது தனிநபர் ஓவியக் கண்காட்சி 1985 இல் அச்சுவேலி புனித தெரேசா மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.
ஆசை இராசையா தரமான நூல்களின் வடிவமைப்பாளராகவும் அட்டைப்பட ஓவியராகவும் நிலவுருக்கள் மற்றும் மெய்யுருக்களை வரைவதிற் புகழ் பெற்றவராகவும் இறுதிவரை தனது கலைச்சேவையைத் தொடர்ந்தவர். ஓவியர் ஆசை இராசையா அவர்கள் தனது ஓவியங்கள் பற்றியதான “விம்பம்” நூலினையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பரிசுகள், விருதுகள், பாராட்டுக்கள், கௌரவங்கள் என அவருக்கு கிடைத்த தேசிய அங்கீகாரங்கள் பல.
ஓவியத்துறை சார்ந்து பல பட்டங்களையும் விருதுகளையும் ஆசை இராசையா பெற்றுள்ளார். நல்லூர் பிரதேச செயலகம் வழங்கிய கலைஞானச் சுடர் (2009), வடமாகாண ஆளுநர் விருது (2009), கலாபூஷணம் விருது (2010), கொழும்புத் தமிழ்ச் சங்க விருது (2012), ஞானம் சஞ்சிகை விருது (2012), எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் ‘தமிழியல் விருது’ (2013), திருமறைக் கலாமன்றம் வழங்கிய கலைஞானபூரணன் விருது (2014) என்பன குறிப்பிடத்தக்கனவாகும். விருதுகளையும், பரிசுகளையும் அனைத்தையும் மௌனமாக ஏற்றுக்கொண்டு அமைதியாகத் தன்னியல்பு மாறாத கலைஞனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளமை வியப்பிற்குரிய ஒன்று.
தான் பிறந்து, தவழ்ந்த அச்சுவேலிப் பிரதேசத்தின் இயற்கை அழகு, வல்லைப் பிரதேச நீரோடைக் காட்சிகள், பனைகளும் தாளம் பற்றைகளும் நிரம்பிய காட்சிகள் என இளமையில் தான் தரிசித்த ஊரின் அழகை நிலக்காட்சி ஓவியங்களாக வரைந்து பெருமை பெற்ற ஈழத்தின் தூரிகை முன்னோடி ஓவியர் ஆசை இராசையா ஆகஸ்ட் 29, 2020இல் விழிமூடினாலும், அவரின் வர்ணங்களும் – வண்ணங்களும் தமிழர் மனங்களில் என்றும் நிலைத்து நிற்கிறது.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா