அகஸ்தியர் ( 1926 – 1995 ) ஓகஸ்ட் 24 – அகஸ்தியருக்கு 99 வயது!…. நேர்கண்டவர்,,,,, முருகபூபதி.
“ இலக்கியம் காலத்தைப் பதிவுசெய்யும் ஆவணம் மட்டுமல்ல, அது சார்ந்து நிற்கும் போராயுதமுமாகும். “
நேர்கண்டவர் – முருகபூபதி.
( 1997 ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்டது. சந்திப்பு நேர்காணல் தொகுப்பில் ( 1998 இல் ) இடம்பெற்றது )
இருளினுள்ளே, நீ, திருமணத்திற்காக ஒரு பெண் காத்திருக்கிறாள், மண்ணில் தெரியுதொரு தோற்றம், கோபுரங்கள் சரிகின்றன, நாட்டுக் கூத்துக் கலாநிதி பூந்தான் யோசேப்பு வரலாறு, ஒரு நூற்றாண்டின் இரு தமிழ் நாவல்கள், அகஸ்தியர் கதைகள், மேய்ப்பர்கள், கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும், நரகத்திலிருந்து, எரிநெருப்பில் இடைபாதை இல்லை, அகியன உட்பட மேலும் சில நூல்களை வரவாக்கியவர்.
அகஸ்தியர் சுமார் 24 புனைபெயர்களிலும் எழுதியிருப்பவர்.
இலங்கை முற்போக்கு இலக்கிய அணியில் வீறு கொண்டெழுந்து ‘மனிதாபிமானம்’ பேசிய
பண்பாளர்.
மரணிக்கும் வரையில் அயராமல் எழுதிக் கொண்டிருந்தவர்.
எனினும், என்னை ஒரு சோகம் அழுத்துகிறது.
இந்த நேர்காணலை பத்திரிகை வாயிலாக பார்க்க சந்தர்ப்பம் கிட்டாமலேயே நிரந்தரத் துயில் கொண்டவர். அகஸ்தியரின் மறைவின் பின்பே – இந்த நேர்காணல் கொழும்பில் தினகரன் வார மஞ்சளியில் வெளியானது.
அந்திம காலம் வரையில் அயராது எழுத்து ஊழியம் புரிந்தவரின் ஆளுமையை இங்கே தரிசிக்கலாம்.
1924 ஓகஸ்ட் 24 ஆம் திகதி அகஸ்தியரின் 99 ஆவது பிறந்த தினம். அதனை முன்னிட்டு இந்த நேர்காணல் மறுபிரசுரமாகின்றத
கேள்வி :
நீங்கள் எழுத ஆரம்பித்த காலம் எப்போது? எழுத்துத் துறையில் ஆர்வம் ஏற்பட்டமைக்கு ஏதும் காரணங்கள்.? முதல் எழுத்து பிரசுரமான காலம்.களம்?
பதில்:- கவிதையே என் முதல் இலக்கிய எழுத்து, கவிதை இலக்கணம் தெரியாத 1944-45 காலப்பகுதியில் எழுதத் தொடங்கினேன். இலக்கணம் தெரியாமல் எழுதினாலும் எழுதப்படுவது கவிதையாகிவிடும். சிறுவயதில் பாட்டும் பயனும், படித்தும் கேட்டும் மகிழ்வதில் அலாதி மோகம். காலகதியில் நாட்டுக்கூத்துப் பாடல்கள் பாடவும் இயற்றவும் வாலாயமாகியது. எனது பேரன், தந்தையார், தாயாரின் சகோதரர் சிங்கராசா எனது மூத்த சகோதரர், சிலுவைராசா, சித்தப்பா ஆசீர்வாதம் ஆகியோர் நாட்டுக்கூத்து கலைஞர்களாக விளங்கினர். உறவினர் வசந்த குலசிங்கம் கர்நாடக இசையில் புல்லாங்குழல் வித்துவானாகத் திகழ்ந்தார். இத்தகைய கலைக்குடும்ப பின்னணியுடன் மானிப்பாய் மிருதங்க வித்துவான் கா. செல்லையாவிடம் மிருதங்கமும் பயின்றேன். இவ்வழித்தோன்றல்களும் எனது எழுத்துலகப் பிரவேசத்திற்கு உந்துதல்தான்.
புதுமைப்பித்தனால் ‘ஜடாமுனி’ என வர்ணிக்கப்பட்ட ஹிட்லர், இத்தாலி முசோலினி, ஹோயரிங் போன்ற பாஸிஸ்டுகளாலும் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களினாலும் கட்டவிழ்த்து விடப்பட்ட இரண்டாம் உலக மகா யுத்தத்தை மையப்படுத்தி ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை பாடிய பாடல்கள், கவிதைகள், துண்டுப் பிரசுரங்களாக யாழ். பட்டினத்தையும் தாண்டி கிராமங்கள் தோறும் பரவின. நாடக சபாக்களில் பாடப்பட்டன. மிக எளிய பதங்களில் லகு சங்கீதம் போன்று கலை நயத்தோடு வாரி இறைக்கும் நீராக அவரின் பாடல்கள் அடி, சீர், தளை, சந்தம், எதுகை, மோனையோடு அமைந்தமையால் மக்கள் மனப் பாடம்
பண்ணவும் இலகுவாயிருந்தன.
மக்கள் மயப்பட்ட
எழுத்துக்கு ‘ஆசுகவியும்’ உதாரண புருஷராக விளங்கினார் என்பது இப்போது தெரிகிறது. மகாகவி பாரதியும் நான் எழுத்துத்துறையில் ஈடுபட என்னுள் தாக்கம் ஏற்படுத்தியவர்.
எழுதும் ஆர்வம் ஏற்பட்டது எனச் சொல்வதைவிட, அதையே ஒரு சத்தியப் போராட்ட வேள்வியாகக் கொண்டேன் என்பதே பொருத்தமானது.
சிறுவயது முதலே எனக்கொரு ‘கெட்ட பழக்கம்’ இன்றும் ‘அது’ என்னைவிட்டகலவில்லை. அதாவது – யார் எதைச் சொன்னாலும் ஆதாரமின்றி நம்பமாட்டேன். சும்மா விடவும் மாட்டேன். ‘உண்மையை அறிய வேண்டும்’ என்ற தேடல் மனப்பான்மை. இம்மனப்பான்மையால் பலரதும் நிந்தனைக்கும் ஆளாகியதுண்டு.
தொழிலாள, விவசாய, பாட்டாளி மக்கள் படும் துயரம் அவர்கள் ஒயாமல் உழைத்த போதிலும் – சனதனவான்களால் கீழ்மட்டத்தில் தள்ளப்பட்ட அவலம் என்பன என்னை எழுதத் தூண்டின.
பாரதியும், புதுமைப்பித்தனும் என்னைக் ‘கெடுத்த வர்களில் முதன்மையானவர்கள்.
இதற்கிடையில் பாதிரி யாகப்போக ஆசை வந்தது.
மைலிட்டி வீரகத்திப்பிள்ளையின் மகன் இரத்தினம் இந்து சமயத்திலிருந்து மாறி ‘தாஸிஸ்’ என்ற குருவானவர் என்னை அழைத்து ‘உன்னை குருவானவராக்க உதவுகின்றேன். – என்றார்.
“பைபிளை’ படித்து முடித்தேன். எனினும் திருப்தி இல்லை. “எதையும் நம்பாத உனக்கு இது சரிவராது” என்று என்னை விட்டதுடன் நிற்கவில்லை ஊர் மக்களையும் எனக்கு எதிராக தூண்டி விட்டார் கரைச்சலும் தொடங்கியது. 1947இல் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். “பிரேத விசாரணை’ ‘பங்களாச் செய்தி” இரண்டு கதைகளும் சுதந்திரனில் எழுதினேன்.
“பிரேத விசாரணை’ – பிரச்சினைகளை எதிர் நோக்கியது. அது பிரசுரமாகிய மறுதினமே சுதந்திரன் ஆசிரியராக அப்போது கடமையாற்றிய எஸ்.டி. சிவநாயகம், ‘சுதந்திரன்’ உரிமையாளர் எஸ்.ஜேவி. செல்வநாயகத்தினால் எச்சரிப்புக் குள்ளாகினார். இவ் விதம் – என் கதையை பிரசுரித்தவரை, விசாரணைக் குள்ளாக்கிய செல்வநாயகம், பின்பு எனது அபிமான வாசகராகவும் மாறியமைதான் அதிசயம்.
பின்னாளில் அ.ந. கந்தசாமி, சில்லையூர் செல்வராசன், பிரேம்ஜி முதலானோர் சுதந்திரனில் பணியாற்றிய காலங்களிலும் தொடர்ந்து எழுதினேன். அத்துடன் தேசாபிமானி, வீரகேசரி ஆகியவற்றிலும் எனது எழுத்துகளுக்கு களம் கிடைத்தன.
கேள்வி: சிறுகதை, நாவல், விமர்சனம் முதலான மூன்று துறைகளிலும் ஈடுபட்டுள்ளீர்கள். ஒரு சிறு கதையையோ நாவலையே உருவாக்கும் பொழுது, ஏதும் திட்டங்கள் உண்டா? அப்படியாயின்
எவ்வாறு? கருவிற்கா, சம்பவத்திற்கா உத்திமுறைகளுக்கா பாத்திரங்களை முழுமைப்படுத்தும் ‘வார்ப்பு முறைக்கா முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்.?
பதில்:- வாழ்வனுபவங்களை கதைகளாக்கவேண்டும் என்ற எண்ணம் தவிர வேறு நோக்கம் இல்லை, எந்தத் திட்டத்’ தோடும் படைப்புகள் என்னுள் திடுதிடுப்பென உருவாவதில்லை. இலக்கியம் படைப்பே தவிர உற்பத்தியாவதில்லை. அதற்கு வரையறுப்புகளும் கிடையாது. “கரு”க் கொண்ட விஷயம் தன்னியல்பாக வெளிவருதலே படைப்பின் ஆத்மார்த்தம். பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்ற போது அவை தாக்கத்தினை ஏற்படுத்தி விடுகின்றன.
தாக்கத்தின் வேகம், உந்துதல் எழுத வைக்கிறது. அதற்கு உருவம் கொடுக்கும்பொழுது – அது எந்தக் களத்தில் சொல்லப்படுகிறதோ, அந்தக்களத்திற்கேற்ற இயல்புடன் சிருஷ்டியாகிறது. களத்திற்கேற்றவாறு கதாபாத்திரங்கள், சிருஷ்டியாகின்றனவேயன்றி, சம்பந்தமற்ற ‘பாத்திரங்களை’ கதைக்காக வலிந்து இழுத்துவிடுவதல்ல.
களத்திற்குத் தகுந்த கதைமாந்தர்கள் இயல்பாக நடமாடும்போதுதான் சிருஷ்டி கலை நயமாகின்றது.
அதே வேளை, கருத்துருவம் அழுத்தாத கலைநயம் சமூகவியல் இலக்கியத்திற்கு ஒவ்வாதது. நிகழ்வுகளால் கருத்துக்கள் பிறக்கின்றதேயன்றி, கருத்துக்களால் சம்பவங்கள் உருவாவதில்லை.
ஆக்க இலக்கியம் என்று வரும்பொழுது உருவம், உள்ளடக்கம் கருத்தும் உருவமும் தோதாக இணைய வேண்டும்.
கருத்தியலற்ற உருவமோ, உருவமற்ற கருத்தியலோ சிறந்த படைப்பாகக் கொள்வதற்கில்லை.
சம்பவங்களிலிருந்து பிறக்கும் கருதுகோள், இலக்கியத்தில் மட்டுமல்ல, ஏனைய துறைகளிலும் உண்டு. துப்பாக்கியிலிருந்து அரசியல் பிறப்பதில்லை. அரசியலிலிருந்தே துப்பாக்கி வெடிக்கிறது.
துப்பாக்கி ஒரு பொருள். அதனை இயக்கவைப்பது ஒரு கருத்து. பொருள் சார்ந்த நிகழ்வுகளிலிருந்தே இந்தக் கருத்தியலும் பிறக்கின்றது.
படைப்பில் ஒரு கருத்தை அழுத்துவதற்கு உருவமும் (பொருள்) அது சார்ந்த சம்பவங்களும் (பகைப்புலன்) இணைவது உத்திவகைகளால் சிறக்கின்றன.
உத்திகளைக் கையாளும்போது எடுத்துக் கொண்ட களம், மாந்தர், கரு மூன்றுக்கும் இசைவான வகையில் கதை அமைதல் வேண்டும். பாத்திரம், களம் இரண்டையும் கவனத்தில் எடுத்தே புதிய புதிய உத்தி
வகைகளை நான் கையாள்கின்றேன். எந்தக் கதைக்கும், எந்தக்களத்துக்கும் எப்போதும் ஒரே வகையான நடையைக் கையாள்வது பலவீனமாகும்.
கதை, களம், மாந்தர், பேச்சுமொழி மட்டுமன்றி மொழியின் உள்ளார்ந்த அர்த்தத்துடன் எழுதும் முறையும் ஒர் உத்திவகைதான். உருவத்தில் மட்டுமல்ல, மொழி நடையிலும் உத்தியைக் கையாள முடியும்.
புதுமைப்பித்தனின் ஒவ்வோர் வாக்கிய அமைப்பிலும் இதனைக் கவனிக்கலாம். இவ்வகை உத்தி இயல்பாக அமையாவிடின், படைப்பு பயனற்று ‘சப் பென்று போய்விடுகிறது.
தனித்துவம் வேறு, இலக்கிய ஆளுமை வேறு. உதாரணமாக, யாழ்ப்பாண பேச்சுவழக்கு மலையகப் பேச்சு வழக்கு, முஸ்லிம் மக்களின் பேச்சு வழக்க என்றெல்லாம் பேசப்படுகினும் யாழ்ப்பான பேச்சு வழக்கிலேயே இடத்துக்கிடம் ஊருக்கு ஊர் முற்றிலும் வித்தியாசப்பட்ட பேச்சு வழக்கினைப் பார்க்கலாம்.
மலையகத்திலும் இடத்துக்கிடம் வித்தியாசமான பல ரக பேச்சுத் தமிழ் உண்டு. யாழ்ப்பாணத்தமிழ் – என்று சில கொழும்பு வாழ் யாழ் வானொலிக் கலைஞர்கள்
சிலர் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கினை, அதன் இயல்புக்கு மாறாக, வலிந்து இழுத்துப்பேசுவதனால் – அது கலைநயமின்றி கொச்சையாக இருப்பதை கவனிக்கலாம்.
எந்தப் பேச்சு வழக்கினையும் அதன் ஒலிவடிவத்தில் எழுதத் தெரியாத ஒருவர் பேச்சு வழக்கினையே
தொடுவது பிசகாகும்.
லயம் பிசகாத சங்கீதம் போன்றதே பேச்சு வழக்கில் எழுதுவதாகும். படைப்பு என்பது உற்பத்தி அல்ல. அது ஒரு பிரசவம். இதை முன்பே சொன்னேன். “பேச்சு வழக்கு” எந்தவொரு இலக்கியப் படைப்பிலும் இயல்பாக அமையும் போதுதான் அது முழுமை பெறும்.
கேள்வி:
‘உணர்வூற்றுருவகச் சித்திரம்’ (நீ) முதலான பரிசோதனை இலக்கியங்களிலும் ஈடுபட்டுள்ளீர்கள். இம்முயற்சி பயனளித்துள்ளதா? அல்லது, அதுபோன்ற இலக்கிய வடிவங்களின் தாக்கம் எப்படி?
பதில் : சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மேல் நாட்டிலிருந்து கீழைத் தேசத்துக்கு வந்த நாவல், நாடக இலக்கியங்களுக்குப் பின்பு வந்த சிறுகதை வடிவம், புதிய இலக்கியப் பரிசோதனையாகவே கொள்ளப் பட்டது. புதிதாக
அறிமுகமாவதெல்லாம் பரிசோதனையானதுதான். அது தொடர்ந்து கையாளப்படும் போதுதான் ‘பரிசோதனை என்ற தளத்தினின்றும் விடுபட்டு, மக்கள் மத்தியில் பழக்கப்பட்டு விடுகிறது. புதுக்கவிதையும் இப்படித்தான். புதுசு எதுவும் புதிய கருத்துருவத்தில் அதன் வடிவத்திற்கும் கலைத்துவம் சேர்க்கின்றது. இந்த வகையில்தான் எனது பரிசோதனை இலக்கியமான, புதிய வடிவ ஆக்கத்திற்கான அதன் செப்பனுக்கும் செப்புதலுக்கும் கருத்துக்கும் உவமானப் பதத்திற்கும் அழுத்தம் சேர்க்கும் வகையில், “உணர்வூற்று உருவகச் சித்திரம்’ என்று சூட்டினேன்.
எனக்குப் பின்பு தோன்றிய எழுத்தாளர்களும் இதனைத் தொடர்ந்து எழுதி மக்கள் மயப்படுத்த வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.
கண்டியில், இதுபற்றி என்னுடன் அதிகம் சம்பாஷித்தவர் காவலூர் ஜெகநாதன். கருத்தாழத்தோடு எழுதக்கூடியவர். இரண்டொரு ‘உணர்வூற்று உருவகச் சித்திரங்கள்’ தீட்டினார். குறைப் பிரசவமாக இருந்தபோதிலும், எனக்கு அவர் மீது நம்பிக்கை இருந்தது. ஆனால், அவரது மறைவினால் அந்த நம்பிக்கை தகர்ந்தது.
கூரிய அவதானிப்புள்ள ஜெகநாதன், பெனடிக்ற் பாலன் போன்று இன்றைய தலைமுறை எழுத்தாளர்களும் இந்தப் பரிசோதனை இலக்கிய வடிவத்தை, என் காலத்தோடு மட்டும் விட்டு வைக்காமல், தொடர வேண்டும் என்பதே என் விருப்பம், ஏன். நீங்களும் எழுதலாமே.
மக்கள் மயப்படும் இலக்கிய நோக்கிற்கு இது சற்று மாறுபடினும், இது தினகரனில் வெளியான போது எழுத்தாளர்கள், வாசகர்கள் மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதனால், ‘நீ’ முன்னுரையில் விபரமாகக் குறிப்பிட்டிருக்கிறேன். அது தொடர்ந்து பயனளித்துள்ளது என்றே சொல்வேன்.
இது சொற்சிலம்பம் அல்ல. ஒவ்வோர் பதமும் உருவகத்தோடு எழுதப்படுவது. இந்த வடிவம், தமிழில் முதல் முதலாகத் தோன்றியது என்றும் கருதுகிறேன்.
இதுபற்றி நான் சொல்வதைவிட, ஈழத்தின் ஆழமான நேரிய இலக்கிய விமர்சகரும் கவிஞருமான இ. முருகையன் எழுதியதை மீளக் குறிப்பிடுகின்றேன்.
“உணர்வூற்றுருவகச் சித்திரம் – உடைமையாளருக்கும் உழைப்பாளருக்குமான பேதத்தையும் அதுபற்றிய ‘போத’த்தையும் ஆதாரமாகக் கொண்டது. உணர்வூற்றும் அதனடியாகப் பிறந்த உருவகமும் உலகக் காட்சியாகிய சித்திரமும் வரவேற்கப்பட வேண்டியவை. இவற்றின் பாத்திரங்கள் நீயும் நானுமே.
உலகம் முழுதும் ‘அவன், அவள், அது என்னும் மூன்றுள் அடங்குவர் என்பர் சமயவாதிகள். அகஸ்தியரின் இலக்கியத்தேவைக்கு உலகம் முழுதும் நீ – நான் என்ற அளவிலே அடங்கி ஒடுங்கிவிடுகின்றது. அகஸ்தியரின் வசனமும் மொழியாட்சியும் அசாதாரணமானவை.
கையாளப்பட்ட மொழி நடையும், உத்திகளும் பல வாசகர்களை திகைக்கவைத்தல் காட்டும். நோக்கத்தை திறம்பட நிறைவேற்றுவதற்காகக் கடுமையான சொற்கள் உதவுமாயின் அவை வரவேற்கப்பட வேண்டியவை. இதனை, அகஸ்தியர் நன்குணர்ந்து தமது படைப்புகளை வாசகர்களுக்குத் தந்திருக்கிறார்.
“தமிழிலக்கியத்திலே இது புதிய நடை, விஷயமும் புதிது. மரபிற்குள் மொழியை அடைத்துச் சிறைப்படுத்தும் சிலர் நிலைதடுமாறுவர். ஆனால், இப்புதிய வாக்கிய அமைப்புகள் புதிய அகராதியில் கட்டாயம் இடம் பெறும். ஏனென்றால் அகஸ்தியரின் இந்த மொழியும் நடையும் மனதை பிரளப்படுத்துகின்றன” என்ற, எமது அடுத்த தலைமுறை எழுத்தாளர் செ.யோகநாதன் குறிப்பும் கவனிப்பிற்குரியது.
இதுபற்றிய, எனது குறிப்புகளை இங்கு கூறல் பொருத்தம்:-
தத்துவம் ஒரு கருத்தாகும். மனித வாழ்வையும் மனித சரித வளர்ச்சியையும் கொண்டு உருவாகிற கருத்தும் அதுபற்றிப் பெறும் போதமுமே தத்துவமாகும். “தத்துவம்’ என்னும் பலம் கலை இலக்கிய அரசியல் உலகில் எப்பவோ வந்த ஒன்று. கலை இலக்கிய வடிவம் உடலாயின், தத்துவம் அவற்றின் உயிராகும். உலகப் பொதுவான சொத்துக்களைத், தான் தனதாக்க விழைந்த இவன், அவற்றைப் பிரித்து தானே, தனியுடைமை ஆதிக்கம் பற்றிய மோகிப்பதால்,
பின் இவன் ‘சக்தியே இவனுடன் மோதலாயிற்று. இம்மோதல் இன்றைய சகாப்தத்தோடு ஐந்தாவது சமூக அமைப்பையே உலகில் தோற்றுவித்துவிட்டது. அபகரிப்புக்கும் இழப்புக்கும் போர்.
அநீதிக்கும் நீதிக்கும் இந்தப் போரானது அநியாயம் அழிந்து நியாயம் நிறுவப்படும் வரை நிகழும். பொதுவான இயற்கை-செயற்கைச் சொத்துக்களை மனிதன், மனித வர்க்கத்தின் ஒருவனோடு நின்று பொதுவாக அனுபவிக்கும்வரை ‘போர்’ நிகழ்ந்தே தீரும். இன்று உலகெங்கும் பெருங்கொந்தளிப்பு கெந்தகித்துக் கொண்டிருக்கிறது. இரு கன்னைப்போரில் மனிதன் குதித்துவிட்டான். அவன் போராடியே வாழவேண்டும் என்பது நியதியல்ல. பொதுச்சொத்துக்கள்மீது ஒருவனை விட்டு அடுத்தவன் தனி ஆதிக்கமும் தனி உரிமையும் கொண்டாடக் கிளம்பியதால் போராடி வாழ வேண்டியதாகிவிட்டது. உலகப் பொதுச் சொத்துக்களை இதே உலகப் பொது மனிதன் பொதுமையாக அனுபவிக்கும்வரை இந்தக் கொந்தளிப்பும் போராட்டமும் வீறுகொண்டேயிருக்கும்.
மனிதனின் உணர்ச்சிகள் மனிதன் சிருஷ்டித்த ஆயுதங்களுக்கு அடங்குபவையன்று. அவை வீறு கொள்பவை. ஆயுத பலத்தால் மனிதனின் உணர்ச்சிகளை அடக்கலாமே தவிர, உணர்வுகளை அல்ல! இதுவும் ஒரு நியதி!
இந்த பரீட்சார்த்த இலக்கிய வடிவங்களை பாத்திரங்களேயின்றி ‘உலகமே களமாக” குறியீடுகளால், நரகத்திலிருந்து (குறுநாவல் – வீரகேசரி) “கோடீஸ்வரப்பிரபுவுடன் ஒரு சந்திப்பு (ஒசை)
(N.C.B.H. வெளியிடவுள்ள ஒரு குறுநாவல் தொகுப்பில் இவ்விரு படைப்புகளும் இடம்பெறுகிறது ). ஆகியவற்றை படைத்துள்ளேன்.
இவற்றைவிட “உணர்வூற்றுருவகச்சித்திர உத்தியைக் கொண்டு குறுநாவல் ஒன்றும் புதிதாக எழுதுகிறேன்.
இன்றைய எழுத்தாளர்களும் இதுபோன்ற புதிய இலக்கிய வடிவங்களில் ஈடுபடின் தமிழுக்கு அணி சேர்ப்பதாக அமையும். இது அவசியமுமாகும்.
கேள்வி: கண்டதையும் கேட்டதையும் அனுபவித்ததையும் இலக்கியமாக்கும்பொழுது, கலைத்துவம் மழுங்கி
விடலாகாது. பெரும்பாலான எழுத்தாளர்கள் புனைகதை இலக்கியத்தை நடைச்சித்திரமாக்கி விடுகிறார்கள். இந்த ஆபத்து தங்களின் சில படைப்புகளுக்கும் நேர்ந்ததாக அபிப்பிராயம் உண்டு. இதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?
பதில் : இதை ‘ஆபத்து” என்று சொல்வதை விட ‘அபத்தம் என்று சொல்லலாம். கண்டது, கேட்டது, அனுபவிப்பது மட்டுமின்றி அனுமானிப்பதும் கலைத்துவமான இலக்கியமாகிவிடுகிறது. அனுமானத்திலிருந்து தோன்றிய சமய இலக்கியங்கள், கருத்தழுத்தம் பெறாதவை. இயல்புவாத இலக்கிய விழுமியங்களுக்கும் விஞ்ஞானத்திற்குப் புறம்பான வெற்றுச் சுலோகங்களாகத் திகழ்வதால் அவை மாயக் கலைத்துவத்தோடு வெளிவருகின்றன.
கற்பனாலோகவாத இலக்கியங்கள் யாவும் இத்தகையதே
எனது இலக்கியங்கள், பொருள் முதல்வாதக் கோட்பாடுடைய கருத்தியலுக்கும் கலைத்துவத்துக்கும் அழுத்தங்கொடுக்கும். சமூகவியல், சார்ந்துள்ளதால் கருத்தின் அழுத்தத்துக்குள் “கலைத்துவம்’ அமுங்கிவிடுவதுபோலாகிறதேயன்றி கலைத்துவம் குன்றிய படைப்புகள் என்று கூறுவதற்கில்லை.
கருத்துக்கு அழுத்தம் கொடுக்காமல் கலைத்துவத்தை முன்வைக்கும் படைப்புகளால் பிரயோசனம் இல்லை.
கருத்துக்காக கலைத்துவமேயன்றி கலைத்துவத்துக்காக கருத்தியல் இல்லை. இதனால்தான் உருவமும் உள்ளடக்கமும் சமமாக இணையவேண்டும் என்று சொல்கிறோம்.
“கலை கலைக்காக’ என்னுங்கோஷ்டியும் தமது ஏதோ ஒரு கருத்தை முன்வைப்பதற்காகவே எழுதுகிறார்கள்.
அக்கருத்தினை இயல்புவாதமாக விளக்கமுடியாதபடியால், இவ்வாறு ஒரு சுலோகமாகச் சொல்லி தப்பித்துக் கொள்கின்றனர்.
சுந்தரராமசாமியின் கருத்துக்களுக்கு நான் எழுதிய பதிலிலும் இதை விபரமாகக் குறிப்பிட்டுள்ளேன்.
கலைத்துவம் என்றால் என்ன?
“ எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு “
என்ற குறள் மிக அற்புதமான கவித்துவம் மிக்க கலைத்துவ வரிகள்தான். ஆனால், அது எப்பொருளை எவரிடத்தில் கேட்கலாம் என்றோ, அப்பொருளில் எது மெய்ப்பொருள் என்றோ, அந்த மெய்ப்பொருளை தெரிந்துகொள்ளும் மார்க்கம் என்னவென்றோ அங்கணம் தெரிந்துகொள்வதுதான் அறிவு என்றோ விஞ்ஞான வாயிலாக ஓரிடத்திலும் விளக்கவில்லை.
இதில் கலைத்துவம் விஞ்சி நிற்கிறதேயன்றி, கருத்துருவம் ஒரு சுலோகமாக விருப்பதைப் பார்க்கலாம்.
“யார் என்ன சொன்னாலும் அதில் எது சரி என்று பார்த்து நடந்துகொள். அதுதான் அறிவு – என்று சொல்ல எந்த மனிதனாலும் முடியும்.
‘யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”
என்ற குறளும் ஒரு சுலோகம்தான். இதுவும் கலைத்துவமானதுதான். மறுப்பதற்கில்லை. ஆனால், இந்தச் சுலோகத்தில் காரண காரியத்தோடு விஞ்ஞான ரீதியான மெய்யியல் விளக்கம் ஏதும் இல்லை.
எல்லார்க்கும் எப்பொருளும் எப்போதும் ஒரே
தன்மையுடையதாயிருக்காத சமுதாய அமைப்பில் இப்படியெல்லாம் புனையப்படும் நீதிவாக்கியங்கள் வெற்றுச் சுலோகங்களாயிருப்பதனால், அவை கலையம்சத்தில் உன்னதம் போல் ஒரு மாயத் தோற்றத்தை அளிக்கின்றன.
நிலவுடமைச் சமுதாயத்தின் சார்பு வாதமான பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தும் கருத்துக்கள் இந்த ‘கலைத்துவத்துள் அமுங்கியிருப்பினும், அவை நீதிநூல்கள்’ எனச் சொல்லப்படும்போது அவற்றின் இந்த கலைத்துவங்களும் அர்த்தப்படாமல் வெற்றுச் சுலோகங்களாகிவிடுகின்றன.
கேள்வி: முற்போக்கு அணியைச் சார்ந்தவர் நீங்கள். பிரசாரத்
தொனி மேலோங்கியதனால் பல ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகள் கலைத்துவம் அற்றுப்போய் முழுமைபெறவில்லை. இதன் காரணம் என்ன?
பதில்:
இதை முற்றாக மறுக்கின்றேன். தங்களின் முதல் கேள்வியிலும் இதுதான் தொக்கியிருக்கின்றது. இதுபற்றிச் சற்று விளக்கமாகச் சொல்வதெனில், உண்மையில் பெரும்பாலும் பிற்போக்கு அணிசார்ந்த
படைப்புகளில்தான் பிரசாரத்தொனி அதிகம் உண்டு.
அதற்குக் காரணமும் உண்டு. எவராலும் நிரூப்பிக்கமுடியாத யூகங்களால் யதார்த்தத்திற்குப் புறம்பானதும் இயக்கவியல் விஞ்ஞான மறுப்புவாதமாகவும் வெளிவரும் படைப்புகள் பிற்போக்கு அம்சத்தின் அத்திவாரமாகும்.
இதனடியாக உலக சமுதாய, சமூகப்பிரச்சினைகளை மையப்படுத்தும் எழுத்தின் நோக்கமும் வேகமும் முழுக்க முழுக்கப் பிரசார இலக்கியங்களாகிவிடுகின்றன.
முற்போக்கு இலக்கிய மறுப்புவாதிகளே, பிரசார இலக்கியங்களில் அதிகமாக ஈடுபடுகின்றனர்.
தனக்கு இசைவில்லாத ஒரு விஷயத்தை வலிந்து எழுதும்போதுதான் பிரசாரத்தொனி அதிகரிக்கிறது. முற்போக்கு எழுத்தாளர்கள் தமக்கு இசைவில்லாத விஷயத்தைக் கையாள்வதில்லை.
எனவேதான், முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகள் முன்னணியில் திகழ்கின்றன.
யதார்த்த நெறி பிறழ்ந்த இலக்கியக் கருவூலம் பிரசாரத் தொனியாவதும் இயல்பு. அந்தப் பிரசாரத்திற்கான விஷயம் அல்லது கருவூலம் அந்தர பவனியானதால் அதனைச் சுட்ட வரும் உருவம் கலைத்துவமாகிவிடுவதும் இயல்பு. இதன் அர்த்தம், உயிர் பிரிந்த சடலம் என்றாகிறது.
இலக்கியக்களம் ஒரு சமுத்திரம். இதில் முழுமைபெற்ற முழுமையற்ற இலக்கியம் என்று எதுவும் இதுவரையில் இல்லை. உலகில் எவருடைய எந்தவொரு இலக்கியமும் முழுமைபெற்றதாகவும் இல்லை.
ஒவ்வோர் கணமும், எந்தவொரு பிரச்சினையும் வெவ்வேறு விதமாகத் தோற்றம் கொள்கின்றது.
ஒரு பிரச்சினையை மையப்படுத்தும் படைப்புகள் சில நாளில் முழுமையாகத் தெரிவது இல்லை. அவை அன்றன்றுள்ள சுவடுகளாக ஆவணங்களாகி விடுகின்றன. ஆனால், மார்க்ஸிய அழகியல் சார்ந்த இலக்கியங்கள், அவ்வக்காலங்களை மையப்படுத்தும் பிரச்சினைகளை மையப்படுத்தி யதார்த்த பூர்வமாகவே படைப்பதோடு உருவம் உள்ளடக்கம் இரண்டிலும் முழுமையாகவே வெளியாகின்றன.
இதுகாறும் தோன்றிய சகல சிந்தனாவாதிகளும் இச்சமுதாயத்தை விமர்சித்தார்கள். இதே சமுதாயத்தை எப்படி மாற்றியமைப்பது என்பதற்கு வரலாற்றுப்பொருள் முதல்வாத விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்து வழிகாட்டியது ‘மார்க்ஸிய அழகியல்’தான்.
கேள்வி: தமிழினப்பிரச்சினை தொடர்பாக எமது ஈழத்து இலக்கியவாதிகள், எழுதவில்லையென்றும், ஈழப் போராட்டதிற்கு சாதகமாக இலக்கியம் படைக்கவில்லையென்றும், ‘தமிழ் அமைப்பு” களும் அவற்றைச் சார்ந்தவர்களும் குற்றம் சுமத்தி வந்துள்ளனர்! இது குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்.
பதில்:
தமிழினப் பிரச்சினை தொடர்பாக மற்ற எவரையும்விட முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகளே அதிகம் வெளிவந்துள்ளன. வருகின்றன.
தமிழினப் பிரச்சினை பல கண்ணோட்டத்தில் எழுதப்படுகின்றது.
ஒர் இயக்கத்துக்கு கட்டுப்பட்டு எழுதுவது வேறு; இயக்கத்துக்கு வெளியே நின்று இயக்க முறைமைகள் பற்றியும் இனப்பிரச்சினை பற்றியும் எழுதுவது வேறு.
எந்த எழுத்தாளனுக்கு அவன் கருதுவதுதான் அவன் சுதந்திரமேயாயின், அவன் கருதாத எழுத்து அவன் சுதந்திரமாகது. சந்தர்ப்பவாத எழுத்து என்பதும் சுதந்திரமாகாது. இதுகுறித்து நிறையவே சொல்லலாம்.
தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கோ, சுயநிர்ணய உரிமைக்கோ மாநில சுயாட்சிக்கோ பாதகமாக எந்தத் தமிழ் எழுத்தாளர்களும் எழுதியதாக எனக்குத் தெரியவில்லை. இதுகுறித்த சாதக – பாதகம் என்பது ‘போராட்டமுறைகள்’ பற்றியதாக வருமே தவிர, போராட்டம் பற்றியதாக இருக்காது.
தமிழ்த்தேசிய இனப்பிரச்சினை தமிழ் மக்களின் ஜீவாதாரப் பிரச்சினை. மற்ற எந்த
எழுத்தாளர்களையும்விட, உலக ரீதியிலும் தேசிய இனப்பிரச்சினை பற்றி எழுதியதும் மார்க்ஸிய
எழுத்தாளர்கள்தாம்.
யோசேப் ஸ்டாலின் எழுதிய ‘தேசிய இனப்பிரச்சினைகளின் அடிப்படை அம்சங்கள்’ என்ற நூலும் சான்று.
தமிழினப் பிரச்சினையை வென்றெடுப்பதற்கான போராட்டம், இரண்டு விதமான கண்ணோட்டத்தில் அணுகப்படுகின்றது.
ஒன்று:- தமிழ்மக்களின் ஜீவாதார உரிமைகளை அதிகார, வர்க்கத்தின் எதிர்ப்புச் சக்திகளோடு ஒன்றித்து, பலதரப்பு மக்கள் இணைந்த வெகுஜன இயக்கப் போராட்டத்தின் மூலம் அதிகார வர்க்கத்தை பலவீனப்படுத்துவது.
இரண்டு :- இதுகாறும் ஒப்பந்தங்கள் செய்த முதலாளித்துவ சக்திகளை நிராகரித்துவிட்டு, முதலாளித்துவத்துக்கு எதிரான தமிழ் மக்களுக்கு ஆதரவான தொழிலாள வர்க்க சக்திகளுடன் இணைந்து போராடுவது.
இலங்கை அரசியல் வரலாற்றில் முதலாளித்துவ சக்திகளுக்கு எதிரான, தொழிலாள வர்க்கத்துடன், தமிழ்த்தலைமை ஒருபோதும் இணைந்து செயல்படவில்லை என்ற உண்மையை முக்கிய
கவனத்தில் கொள்ளவேண்டும்.
இதனைவிட, இது மேலும் இரண்டு விதமாக அணுகப்படுகின்றது.
ஒன்று:- இலங்கைத் தேசியத் தன்மையிலிருந்து தமிழ்த் தேசிய இன உரிமையை வென்றெடுப்பது.
இரண்டு :- இலங்கைத் தேசியத்தன்மையை புறக்கணித்துக்கொண்டு தமிழ்த் தேசிய இன உரிமையை பாதுகாப்பது.
இந்தவகையிலும் இதற்கு மேலாலும் விடுதலை அமைப்புகளின் போராட்டக் குறிக்கோளும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பத்து அம்சக் கோரிக்கையும் இதனுள் அடங்கும்.
இனப்பிரச்சினை மட்டுமல்ல, எந்தப்பிரச்சினையுமே பொருளாதாரப் பிரச்சினைதான். எந்தப்போராட்டமும் ஏதாவது ஒரு வர்க்கச் சார்பு வாதமாகவே திகழ்கின்றது.
இச்சார்புநிலை, அதிகார வார்க்கத்தைப் பலப்படுத்துகிறதா பலவீனப்படுத்துகிறதா? அதிகார வர்க்கத்தின் அரசியற் கோட்பாடு உலக வியாபிதம் எந்த வர்க்கத்தோடு சார்ந்திருக்கிறது?
இவ்வாறுள்ள ஆளும்வர்க்கத்தை எதிர்த்து போராடும் விடுதலை இயக்கம், உலக வியாபிதமாக எந்த வர்க்கச் சார்பாக இணைந்திருக்கிறது?
இவ்வாறெல்லாம் உள்ள நிலைக்கான விமர்சனம் தர்க்கீகம் வெகுஜன மட்டத்தில் ஜனநாயகபூர்வமாக இதுவரையில் நிகழ்த்தப்படவில்லையாதலால் இதுபற்றி சமூகவியல் எழுத்தாளர்கள், சுதந்திரமாகத் தங்களின் கருத்துக்களை முன்வைக்கத் தயக்கம் கொள்வது
இயல்பே.
இயக்கவியல் மறுப்புவாதச் சுலோகத்துக்காகக் கண்களை மூடிக்கொண்டு எந்தவித பொறுப்புமில்லாமல், உணர்ச்சிப் பிழம்பமான வார்த்தைகளை யதார்த்தத்துக்குப் புறம்பாக எழுதுவது இலக்கியமாகாது. அது சமூகவியற் படைப்புமாகாது.
எனினும், மிக அக்கறையோடும் பொறுப்போடும் உள்ளார்ந்த நேசிப்போடும் இனப்பிரச்சினையை மையமாகத் தொட்டு அதிகம் எழுதியவர்கள் முற்போக்கு எழுத்தாளர்களே!
கேள்வி:
ஒரு இனத்தின் விடுதலையை, இலக்கியம் எந்தளவுக்கு முன்னெடுத்துச்செல்லும்? கலை-கலைக்காகவே – இலக்கியத்தில் அரசியல் கலக்கக்கூடாது முதலான வாதங்கள் இருப்பதனால் இக்கேள்வி.
பதில்:
இந்தக் கேள்விக்கும் முன்பே பதில் அளித்துள்ளபடியால், சற்றுச் சுருக்கிச் சொல்லலாம் எனக் கருதுகின்றேன். ஒர் இனத்தின் விடுதலை மட்டுமல்ல, எந்த விடுதலைப்போராட்டமும் அது சுட்டும் நோக்கம் நிறைவேறும்வரை அது சார்ந்து வரும் படைப்புகளும் வீறுகொண்டேயிருக்கும்.
இலக்கியம் காலத்தைப் பதிவுசெய்யும் ஆவணம் மட்டுமல்ல, அது சார்ந்து நிற்கும் போராயுதமுமாகும்.
உலகத்தின் தலைசிறந்த சிருஷ்டிகள் யாவும், அழகையும் மனிதனின் இன்ப, சுகானுபவங்களையும் தேவ கடாட்சங்களையும் மடாலயங்களையும் கருப்பொருளாக வைத்து ஜாலவித்தை செய்ய வில்லை. அவை, சமுதாய வளர்ச்சிக்குப் பங்களிப்பாகவும் மனித விடுதலைக்கு உந்துசக்தியாகவும் விளங்கியிருக்கின்றன.
மகாகவி சேக்ஸ்பியரின் நாடகங்களிலிருந்து மார்க்ஸிம் கார்க்கியின் படைப்புகள் வரையுள்ள இலக்கியங்களில் இதனைப் பார்க்கலாம். நமது பாரதியிலிருந்து புதுமைப்பித்தன் வரையிலும் பார்க்கலாம்.
விகிதாசாரத்தின்படி கணித்தால், இன்று ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டுமின்றி, இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளும் கலை, கலைக்காகவே என்னும் பிறவிக்கலைஞர் நிலையிலிருந்து முற்றாகவே விலகி, சமுதாய முன்னேற்றத்துக்கு உந்துசக்தியான படைப்புகளாக வெளிவருவதைப் பார்க்கலாம்.
எந்தவகையிலும் இலக்கியம் பொழுதுபோக்குச் சாதனமல்ல. போராயுதம் ஆக, இனத்தின் விடுதலை மட்டுமல்ல, சகல ஒடுக்குமுறைக்கும் எதிராக கலை, இலக்கியங்கள் விளங்குகின்றன என்று சொல்லலாம்.
பல எழுத்தாளர்கள் நிறைய எழுதவேண்டும் என்பதற்காகவும் எழுதியவற்றின் எண்ணிக்கையை பெருக்கவேண்டும் என்பதற்காகவே எழுதிக் குவிக்கின்றனர்.
கேள்வி:
இதனால் பெரும்பாலும் நீர்த்துப்போன எழுத்துக்களே அவர்களிடமிருந்து வருகின்றன. இதுபற்றி என்ன கருதுகிறீர்கள்?
பதில்:
விஷயம் இல்லாமல் அதிகமாக எழுதிக் குவிக்கும் நோக்கில் உற்பத்தி செய்யப்படும் படைப்புகள் நீர்த்துப்போவதில் வியப்பில்லை. அவ்வாறு, “உற்பத்தி செய்யப்படுபவை சிறந்த படைப்புகளா? அதே சமயம், நிறைய விஷயங்களை எழுதுமளவு சரக்குள்ள படைப்பாளி நிறையவே எழுதவேண்டியிருக்கிறது. ஒயாமல் எழுதிக்கொள்ளுமளவு கருவூலங்கள், இந்தப் படைப்பாளிக்கு எழுத்து என்பது தவம்.
அது பிரசவமாகின்றதேயன்றி உற்பத்தியாகவில்லை.
அதிகமாக எழுதியும் ஒரு சிறு தாக்கத்தையும் காணமுடியாத படைப்பாளர்களும் குறைவாக எழுதி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களும் உண்டு.
இங்கே – சொற்பமா – அதிகமா என்பது பிரச்சினையல்ல. எழுதும் விஷயம் தாக்கமானதா என்பதே முக்கியம்.
ஒரு காலத்தில் எழுதப்பட்ட படைப்புகள் இன்றும் தாக்கத்தை ஏற்படுத்துகிறதென்றால் அந்தப்படைப்புகள் தோன்று வதற்கான பிரச்சினைகள் அவற்றை பிரசவிக்க வைத்தன என்பதும், அதே பிரச்சினைகள் இன்றும் மறுரூபத்தில் விஸ்வரூபமெடுத்திருக்கின்றன
என்பதேயாகும். இந்த வகையில் சில படைப்புகள் காலத்தையும் வென்று வாழ்கின்றன.
கேள்வி:
புலம்பெயர்ந்த வாழ்வில் தங்களின் இலக்கியப்பணியும் இலக்கியச் சுற்றாடலும் எப்படி இருக்கிறது.?
பதில்:
பெற்ற தாயும் பிறந்த நாடும் துறந்த எவரும் இயல்பான சுதந்திர ஜீவியல்ல. ஆனால், சுதந்திர ஜீவி அனுபவிப்பதைவிட பலர் சுகபோகவாதிகளாகியுள்ளதால், கலை இலக்கியங்களும் வியாபாரப் பண்டங்களாக ‘உற்பத்தி செய்யப்படுகின்றன. ஏதோ ஒரு போர்வை, ஒவ்வொருவரும் எதேச்சமாகத் தத்தமக்குத்தான்தானே தோதாக வரித்துக்கொள்ளும் போர்வை.
கற்பனாவாதக் கோட்பாடுகளால், நச்சுப்படுத்தப்பட்ட அடிமைச் சுதந்திரத்தை முழங்காற்படி’யிட்டுச் சுவாசிக்க ஆவேசிப்போர், ஆயுதப் பாசறைக்குத் தீந்தை பூசி வெண்கல மணியோசைக்காக ஆசைப்படும் போர்வை.
இப்போர்வையாளர்கள், ஜனநாயகப் போர்வையில் பணநாயகத்தில் மூழ்கியதால் இயல்பான கலை, இலக்கியக் கருவூலம் என்பதும் போர்வையாகிவிட்டது.
சத்தியக்கலை, இலக்கியங்கள் பலிபீடங்களில் குற்றுயிராக மாய்கின்றன.
ஒவ்வோர் போர்வையும் தன்னளவில் தன்னிச்சா பூர்வமாகப் பணப் புழக்கத்தோடு கலை, இலக்கியத்தை
இணைத்து அந்தகாரத்துள் ஆக்கிவிட்டதால் யதார்த்த பூர்வ படைப்புகளுக்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
வறுமையின் தத்துவம் அல்ல, தத்துவத்தின் வறுமை கோலோச்சுகிறது. ‘ கலை, இலக்கியம் இறாத்தல் என்ன விலை? என்னுமளவிற்கு மலினப்படுத்தப்பட்டிருக்கிறது.
மக்கள் மயப்படும் கலை, இலக்கியத்தை வளரவிடாமல் புகழேந்திப் புளுகுக் கலைஞர்கள் நந்தி போல் வழிமறைத்து நிற்கின்றனர்.
இந்த ‘இடைஞ்சல்களுக்கு மத்தியில்தான் நீறுபூத்த நெருப்பினின்று அனல் கக்குவது போல் எனது இலக்கியப்பணி தொடர்கிறது. நூலாகவே எழுதுகின்றேன்.
கேள்வி:
மூத்த தலைமுறையைச் சேர்ந்த தாங்கள், இன்றைய புதிய தலைமுறை படைப்பாளிகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்:
இந்த உலகத்தில் எவரும் பிறவிக் கலைஞர் அல்ல. பொருள் மாற்றம் குணமாற்றமாகவும் பரிணமிப்பதை அவதானிக்கலாம்.
சுருங்கச் சொல்வதென்றால், அனைத்து கலை, இலக்கியப் படைப்பாளிகளும் மக்களிடமிருந்தே கற்றுக்கொள்கிறார்கள். மக்களிடமிருந்தே தோற்றுவிக்கப்படுகிறார்கள். எந்த அனுக்கிரகத்தினாலும் கலைஞன் தோன்றுவதில்லை.
மக்களிடமிருந்து கற்று, மக்களுக்கு அளிக்கும் கலைஞனே சிறந்த யதார்த்த பூர்வக் கலைஞனாகின்றான். கலை, இலக்கியமானது தேசத்தின் மனச்சாட்சியை மக்கள் வாழ்க்கையை ஆழமாகத் தொட்டு நிற்க வேண்டும்.
ஒவ்வொரு கணமும் உலக விவகாரங்கள், பிரச்சினைகள் மக்கள் மத்தியில் புதுசு புதுசாகத் தோன்றும்போது இவற்றிற்கெல்லாம் கற்பனாவாத மந்திரச் செப்பேடுகளின் கீர்த்தனங்களால் தீர்வு காணமுடியாது.
கூலிமுறையில் ஆளுக்கொரு விதமான வியாபாரச் சந்தைக்குட்படுத்தப்பட்ட கலை, இலக்கியங்களை – சினிமாக்களை முற்றாகவே நிராகரித்துக் கொண்டு, மானிட தர்ம வாழ்விற்கான பேராயுதமாக – போராயுதமாகக் கலை,இலக்கியங்கள் படைக்கும் மக்கள் எழுத்தாளர்களாகத் திகழ வேண்டும்.
எழுத்தை, அதன் சுருதி கலையாமல் லயபாவத்துடனும், கலைநயத்துடனும் கருத்துருவம் தாங்கிய படைப்புகளையே அளிக்க முன் வருதல் வேண்டும்.
எந்தப் படைப்பையும் விமர்சிக்கும் ‘உரிமை ஒரு குழந்தைப்பிள்ளைக்கும் உண்டு.
ஆனால், ‘குழந்தைப்பிள்ளைத்தனமாக விமர்சிக்கும் உரிமை தகமையாகாது. ஆக, விமர்சிக்கும் உரிமை தகமை சார்ந்தும் இருத்தல் வேண்டும்.
மொழிக்குச் சேவகம் செய்வதல்ல, மொழி நமக்குச் சேவகம் செய்யுமளவு அதை ஆற்றுப்படுத்த வேண்டும்.
விமர்சனத்தால்தான் இலக்கியம். செழுமைப் படுகிறது. விமர்சனத்தை எதிர்கொள்ளவும், விமர்சிப்போரை நேசிக்கவும் பண்பட வேண்டும்.
எனது இலக்கிய வாழ்வில், என்னை விமர்சித்தவர்களும் என்னால் விமர்சிக்கப்பட்டவர்களுமே எனது உற்ற இலக்கிய நண்பர்களாகத் திகழ்கின்றனர்.
எந்தப் பத்திரிகைகளுக்கும் எவரும் எழுதலாம். ஆனால், ஒரு போதும் பத்திரிகைகளுக்காக எழுதக் கூடாது.
பத்திரிகைகளுக்காக எழுதினால், எழுத்தின் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் இரண்டையும் இழக்க நேரிடும்.
எழுத்தாளன், தான் நினைப்பதையும் தனது கருத்தையும் எழுதுவதே அவனது சுதந்திரம். தனது எழுத்தைத் தானே விமர்சிக்கும் பக்குவம் தன்னளவிலேனும் இருக்க வேண்டும்.
தக்கவர்களால் மட்டுமன்றி, அல்லாதவர்களாலும் பொதுமக்களாலும் வரும் விமர்சனத்தை ‘சரி யென்று படும் பட்சத்தில் தயங்காமல் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இவ்வாறு ஏற்பது பலமே தவிர, பலவீனமல்ல, எதை நாம் அறியவில்லையோ – எது எமக்குப் புரியவில்லையோ – அதை அறிய அணுகுவதே அறிவு.
சகலரிடமும் ஒவ்வோர் திறமையுண்டு. இதனை ஒருமுகப்படுத்தின் சிறந்த கலை,இலக்கியங்கள் தோன்ற வழிபிறக்கும்.
அனைத்து சுரண்டப்படும் மக்கள் பக்கம் நின்று சகல ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக எவர் எழுதுகிறாரோ அவர் எழுத்தே புனிதமானது.
அந்த புனித இலக்கிய கைங்கரியத்தை உலகப் பார்வையோடும் இளைய தலைமுறை நாடுவார்களாக,
—-0— letchumananm@gmail.com