இலக்கியச்சோலை
ஈழப் போர்க்கால இசையின் பிதாமகர் கண்ணன்: குண்டுமழையிலும் தேனிசை பொழிந்த இசைவாணர்!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா.
தொன்னூறுகளின் ஆரம்பத்தில்
ஈழ விடுதலைப் போராட்டம் தேசிய மயப்படுத்தப்பட்டு எழுச்சியடைந்த போது ஈழத்து இசைப்பாடல்கள் விடுதலைப் பாடல்களாக, போரிலிருந்து பிறந்த பாடல்களாக பரிணமித்தன. இந்தப் பரிமாணத்திலும் இசைவாணர் கண்ணனின் பங்களிப்பு மிக்க கனதியானதாகும்.
ஈழத்தில் கலையைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் நடிகமணி, வி.வி. வைரமுத்து, போன்ற ஒரு சில கலைஞர்களே. அந்த வரிசையில் இசையையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்துவருபவர் கலைஞர் கண்ணன் அவர்கள்.
கால மாற்றங்களினால் அள்ளுண்டு அழிந்து போகாமல் அவற்றை அனுசரித்து மக்களின் தேவைகளை போராளிகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவற்றை எல்லாம் உள்வாங்கி நல்லதோர் இசை அமைப்பாளராக மேலெழுகின்றார் இசைவாணர் கண்ணன்.
அவர்களுடைய ஆளுமையின் இன்னுமொரு பரிமாணமே,
போராட்டச் சூழலிற் குண்டுகள் பொழிய மானிடம் மரணிக்க மக்களின் கூக்குரல்களுக்கு மத்தியில் குருதிதோய்ந்த மண்ணில் பல அற்புதமான பாடல்களை உருவாக்கியுள்ளார்.
எந்த வித தொழில் நுட்ப வசதியும் இன்றி மிகக்குறைந்த வாத்தியங்களையும் மிகக் குறைந்த கலைஞர்களையும் வைத்துக்கொண்டு தமிழ் மண்ணின் மணம் கமழ, மக்கள் மனதைப் பிசைந்து இசைந்து உணர்வையும், புத்தியையும் உயிர்ப்பிக்கும் இசையைக் கண்ணன் அவர்கள் போர்க்கால இசையாக தமிழ் மண்ணுக்கு தந்துள்ளார்.
வட மாகாண சபை கீதம் :
வடமாகணச சபைக்கான கீதம் முதலமைச்சர் சி. விக்னேஷ்வரானால் அக்டோபர் 2018இல் வெளியிட்டு வைக்கப்பட்டது. வடமாகாணத்தின் பெருமை, தகமை, அறிவு, எழில், பலம் போற்றும் விதமாக அமையப்பெற்ற இக் கீதத்தை முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளரும் கவிஞருமாகிய கலாபூஷணம் கீழ்க்கரவை கி. குலசேகரம் இயற்றியுள்ளார்.
பாடலுக்கான இசையினை ஈழத்தின் முன்னணி இசையமைப்பாளர் இசைவாணர் கண்ணன் அவர்களே வழங்கியுள்ளார். பல கலைஞர்களின் உழைப்பில் உருவான கீதத்தை முதலமைச்சர் வாழ்த்தி கௌரவப்படுத்தியுள்ளார்.
நாச்சிமார் கோவிலடி மைந்தன்:
இசைவாணர் திரு கண்ணன் அவர்கள் ஈழத்தில் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் என்னும் இடத்தில் 1943.03.29 ல் பிறந்தவர். இவர் தனது ஆரம்ப இசைப்பயிற்சியைப் புலவர் சண்முகரட்ணம் அவர்களிடமும் நாதஸ்வர வித்துவான் கோவிந்தபிள்ளை அவர்களிடமும் பெற்றார். பின்னர் சிதம்பரம் கிருஸ்ணமூர்த்தி அவர்களிடமும் வேலணை சங்கீதபூஷணம் இராஜலிங்கம் அவர்களிடமும் வாய்ப்பாட்டினை முறையாகக் கற்றுத் தேர்ந்தார்.
இளம் வயதில் தனது பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டு முழு நேரமும் தன்னை இசையில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினார். இசைக்குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் ஆழப்பதிந்து விட்டது. அவருடைய எண்ணத்திற்கமையச் சூழலும் உருவாகியது. அறுபதுகளிற் தென்னிந்தியக் கலைஞர்களின் வருகை அரசாங்கத்தால் மட்டுப்படுத்தப்பட்டது. இதனால் தென்னிந்தியக் கலைஞர்கள் குழுவாகச் சென்று இலங்கையில் முகாமிட்டு நிகழ்ச்சிகளை நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியது. இச்சூழல் கண்ணன் அவர்களுக்கு மிகச் சாதகமாக அமையவே அவரும் இசைக்குழுவை உருவாக்கி தீவிரமாக முயற்சி செய்தார்.
பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஈழத்து மெல்லிசை அமைப்பாளராகக் பணியாற்றும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. கொழும்பில் இருந்தபடியே இசைக்குழுவையும் நடாத்தி, “நேசம்” என்பவரும் இணைந்து கொண்டதால் அவரது இசைக்குழு “கண்ணன் நேசம்” இசைக்குழு என்ற பெயரைப் பெற்றது.
ஈழத்து மெல்லிசைப்பாடல்கள், பொப்இசை, றொக்இசை, ஆங்கில இசை, தென்னிந்தியத் திரைஇசை, பக்திப்பாடல்கள் போன்றவை இவரது இசைக்குழுவால் இசைக்கப்பட்டன.
ஆக்கிரமிப்பு இராணுவத்தால் தமிழ் மண் அவதிப்பட்ட காலங்களிலும்,
ஈழத்தின் போர் மேகங்களில் இருந்தும் தேனிசை மழையாய் பொழிந்தவர்
இசைவாணர் கண்ணன் ஆவார்.
மண் சுமந்த மேனியர் :
1985ம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலாசாரக் குழுவினால் தயாரிக்கப்பட்ட “மண் சுமந்த மேனியர்” என்ற நாடகத்திற்கும்,“எங்கள் மண்ணும் இந்த நாட்களும்” என்ற கவிதா நிகழ்விற்கும் கண்ணனே இசை அமைத்தார். இவ்விரு நிகழ்வுகளும் யாழ்ப்பாணத்தில் மிகப் பெரிய சாதனையைப் புரிந்தவை. இதற்குக் கண்ணனுடைய இசையும் மிகமுக்கிய காரணம் ஆகும்.
யாழ்ப்பாணத்தை விழித்தெழச் செய்த மண் சுமந்த மேனியர்’ குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களால் எழுதப்பட்டு சிதம்பரநாதன் அவர்களால் நெறியாள்கை செய்யப்பட்டது. எங்கள் மண்ணும் இந்த நாட்களும் சுவிதா நிகழ்வில் இடம் பெற்ற பாடல்கள் கவிஞர் சேரனின் வரிகளாகும்.
1983ல் இடம்பெற்ற கொடூரமான இனக்கலவரத்தின் அழிவுகள், இழப்புகள், துயரங்கள் ஆகியவற்றையும் சித்தரிப்பனவாக இந்த இரு நிகழ்வுகளும் யாழ்ப்பாண மக்களின் வாழ்நிலைப் போராட்டங்களையும், அவற்றின் வலிகளையும் சுமந்து இருந்தன.
இந்நிகழ்வுகளுக்கு இசை அமைப்பதற்குக் கண்ணன் அவர்கள் உபயோகப்படுத்திய இசைக்கருவிகள் ஒரு ஹார்மோனியம், ஒரு வயலின், ஒரு தபேலா ஆகியவை மட்டுமே. 1985 ற்கு முன்னர் அமைத்த இசைகளை விட இவை சற்று வித்தியாசமாகவே அமைந்து இருந்தன.
எங்கள் மண்ணும் இந்த நாட்களும்:
தமிழிசையை அடிப்படையாகக் கொண்டு நாட்டாரியற் கூறுகளையும் அவற்றுடன் இணைத்து அவசியம் ஏற்படின் மேலைத் தேசஇசை உத்திகளையும் கையாண்டு யாழ்ப்பாணக் கலாசாரப் பின்னணியையும் இணைத்துத் தனது கற்பனைகளைப் புகுத்தி மண்வாசனையுடன் அவரது தனித்துவமான ஆளுமையில் எங்கள் மண்ணும் இந்த நாட்களும் பாடல்கள் உயிர்பெற்று எழுந்தன.
யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் இவ்விரு நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன. “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்பது போல இக்காலத்தில் யாழ்ப்பாணத்துப் புல்லும் விடுதலைக்கவி பாடியது. அவற்றைப் பாடும் போது பாடகர்களும், நடிகர்களும் வெளிப்படுத்திய உணர்வலைகள் யாழ்ப்பாணத்தை அதிரச் செய்தன.
விடுதலைக் குரல்கள் :
இதன்பின்னர் 1986 ஆம் ஆண்டு தமிழ் ஈழ மாணவர் சார்பாகக் குருபரனால் வெளியிடப்பட்ட விடுதலைக் குரல்கள் என்ற ஒலிப்பேழைக்கான பாடல்களை ஈழத்துக் கவிஞர்களான வ.ஜ.சஜெயபாலன், உ.சேரன் ஆகிய இருவரும் எழுதியிருந்தனர். இவற்றிற்கான இசையை இசைவாணர் கண்ணன் அவர்கள் அமைத்திருந்தார். அதில் இருந்து வ.ஜ.ச.ஜெயபாலனின் ஒரு பாடல்.
என் மனத் துன்பம்
தாயின் பாடலில்
கண் வளராயோ செல்வா
தந்தையர்கள் தமிழ்
ஈழமண் மீட்டிட…. எனும் பாடல் ஈழத்தின் எட்டுத்திசை எங்கும் ஒலித்தது.
இதே ஆண்டில் (1986 இல்) சி.மௌனகுருவின் “சக்தி பிறக்குது” என்ற நாடகத்திற்கும் கண்ணன் இசையமைத்து இருந்தார். இந்த நாடகம் பெண்களின் பிரச்சினையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. பரதமும் நாட்டுக்கூத்தும் இணைந்ததொரு நாட்டிய நாடகம் இது. இதற்கான நெறியாள்கையும் நாட்டுக்கூத்து அமைப்பும் சி.மௌனகுருவினுடையது. “சக்தி பிறக்குது” நாடகத்தின் நடன அமைப்பு செல்வி சாந்தா பொன்னுத்துரை அவர்களுடையது.
1987 இல் மீண்டும் சிதம்பரநாதனின் நெறியாள்கையில் கண்ணனின் இசை அமைப்பில் ஈழத்து மகாகவி உருத்திரமூர்த்தி அவர்களின் புதியதொரு வீடு மேடையேறியது. இது யாழ்ப்பாணத்து மீனவ மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தைச் சித்தரிக்கின்றது
வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்:
வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்.. கடல் வீசுகின்ற காற்றுளுபின் நேரம்..
தள்ளிவலை ஏற்றிவள்ளம் போகும் மீன்.. அள்ளி வர நீண்ட நேரம் ஆகும்..
என்ற பாடலை அறியாத தமிழர் யாரும் இருக்கமுடியாது. கடலின் அலையோடு இசையை லாவகமாக மீட்டிய இசைவாணர் கண்ணன் அவர்களின் தாயகப்பற்றினை வெளிக்காட்டிய சாட்சியமே இதுவாகும்.
எங்கள் துயர் தெரியாது என்னவென்று புரியாது இங்கு இருந்து பாடுகின்ற எங்கள் குரல் கேக்காது
எங்கள் துயர் தெரியாது என்னவென்று புரியாது இங்கு இருந்து பாடுகின்ற எங்கள் குரல் கேக்காது…எனும் வரிகள் ஈழத்தின் போர்க்கால வரலாற்றுப் பதிவாக அமைகிறது.
1990களில் ஈழ விடுதலைப் போராட்டம் எழுச்சியடைந்த போது ஈழத்து இசைப்பாடல்கள் விடுதலைப் பாடல்களாக, போரிலிருந்து பிறந்த பாடல்களாக பரிணமித்தன. இந்தப் பரிமாணத்திலும் கண்ணனின் பங்களிப்பு மிக்க கனதியானதாகும்.
1990 இல் இந்த இசை போர்க்கால இசையாக மாற்றம் பெறுகின்றது. கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் இருந்து இசைப் பனி புரிந்த கண்ணன் அவர்கள் இக்காலத்தில் தனது இருப்பிடத்தை வன்னிப்பகுதிக்கு மாற்றிக் கொண்டார்.
1990 ஆம் ஆண்டின் பின் போராட்டக் களத்திலும் போராளிகளே கவிஞராக இருந்தும் பாடிய ஏராளமான பாடல்களுக்குக் கண்ணன் இசையமைத்துள்ளார்.
விடுதலைப் பாடல் எழுச்சி:
1993ம் ஆண்டு, யாழ் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவர்கள் வழங்கிய புகழேந்திப் புலவரின் நளன் தமயந்தி கதையைத் தழுவி ஆங்கில மொழியில் வழங்கப்பட்ட இயல், இசை, நடனம் என முப்பரிணாமங்களும் கொண்ட அரியதொரு மேடையாற்றுகைக்கு மேற்கத்தேய, கீழைத்தேச மற்றும் ஹிந்துஸ்தானி கலவையாக ஒரு தனித்துவமான இசையை அமைத்துத் தந்தவர் கண்ணன் அவர்கள்.
இந்த மேடையாற்றுகையை நெறிப்படுத்தியவர்கள் மறைந்த கல்லூரி ஆசிரியை திருமதி நவரட்ணம் மற்றும் குழந்தை ம சண்முகலிங்கம் அவர்கள்.
இசைவாணர் கண்ணன் அவர்களின் இசைக்குழு ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் பிரபலமான ஓர் இசைக்குழுவாகும். “கண்ணன் கோஷ்டி” என்று அக்காலத்தில் மக்களால் அழைக்கப்பட்டது. கர்நாடக இசை, பொப் இசை, மெல்லிசை, பக்தி இசை, திரையிசை, நாடக இசை என பல்திறமை கொண்ட ‘இசைவாணர்’ கண்ணன் என்பவரால் இக்குழு வழிநடத்தப்பட்டது.
பள்ளி எழுந்திடுவீர்:
1986களில் தமிழீழ மாணவர் இயக்கத்தின் ‘பள்ளி எழுந்திடுவீர்’ எனும் சிதம்பரநாதன் அவர்களின் நாடகத்திற்கு கண்ணன் அவர்களே இசை அமைத்திருந்தார்.
நாடகப் பாடல்களுக்கு மெட்டமைத்து, நாடகங்களுக்கு இசையமைப்பது என்பதன் நீட்சியாக யாழ். நாடக அரங்கக் கல்லூரி மேடையேற்றிய கோடை, புதியதொரு வீடு, பொறுத்தது போதும்,சக்தி பிறக்குது, சங்காரம்,கூடி விளையாடு பாப்பா, மண் சுமந்த மேனியர், அன்னையிட்ட தீ, எந்தையும் தாயும், உயிர்த்தெழுந்த மனிதர் கூத்து, மாற்றம், பள்ளி எழுந்திடுவீர், ஆருக்கெடுத் துரைப்பேன், போன்ற புகழ் பெற்ற நாடகங்களுக்கு கண்ணன் இசையமைத்து இருந்தார்.
” மண் சுமந்த மேனியர் ” பாடல்கள் எல்லாம் தமிழர் உள்ளங்களை உலுக்கியெடுத்த காலத்தின் தேவை கருதிய பாடல்களாகும்.
நாடகங்களுக்கு மட்டுமல்லாது நடனக் கலைஞர்கள் சுப்பையா மாஸ்டர், வேல் ஆனந்தன், ஆகியோரின் நாட்டிய நாடகங்களுக்கும் கண்ணன் இசையமைப்பு செய்துள்ளார்.
“1996” என்ற வெளிவராத குறும் படத்திற்கான இசையமைப்பும் கண்ணனுடையதே. அண்மையில் முள்ளி வாய்க்கால் பேரழிவினை நினைவு கூறும் முகமாகக் குளோபல் தமிழ் ஊடக நிறுவனம் தயாரித்த, சோமிதரன் தொகுத்த ‘காலத்துயர்’ என்ற விவரணப் படத்தில் ஈழத்துக் கவிஞரான ‘தேவ அபிரா’ எழுதிய ‘மூன்கிலாறே’ என்ற அறிமுகப் பாடலுக்கும் கண்ணன் அவர்கள் இசையமைத்துள்ளார்.
தீபச்செல்வனின் கவிதை பாடலாக:
இசைவாணர் கண்ணனின் இசையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இளம் ஈழக்கவிஞரான தீபச் செல்வனின் கவிதை வரிகளைப் “பூப்பூத்த நகரில் யார் வந்து புகுந்தார்” என்னும் பாடலாகவும் மாற்றியிருக்கின்றார்.
பல்பரிணாம் கொண்ட ஒரு படப்பாளியான தீபச் செல்வனின் மேற்குறித்த பாடல்கள் ஈழத்து இலக்கியத்தின் சிறப்பான சிருஷ்டியாக கருதப்படுகிறார். “பூப்பூத்த நகரில் யார் வந்து” எனத் தொடங்கும் இந்தப் பாடலும் மக்கள் மத்தியில் நல்வரவேற்பைப் பெற்றது.
ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்த கண்ணன் ஈழ மண்ணின் இசையமைபாளராகத் தடம் பதித்து ஈழத்து மெல்லிசை, பொப்பிசை, றொக்கிசை, ஆங்கில இசை, கர்நாடக இசை, ஈழத்துத் தமிழ்ச் சினிமாவின் இசை நாடக இசை, பக்தி இசை, போர்க்கால இசை என்று பல பரிமாணங்களிலும் அவரது புலமை விரிந்து ஆளுமை மிக்க வாழும் அற்புத கலைஞராக மிளிர்கின்றார்.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா