இலக்கியச்சோலை
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும்! ….. 03 ….. T .சௌந்தர்.
சில பாடகர்களின் குரல் சில நடிகர்களின் குரலுக்கு நெருக்கமாக இருப்பதால் அவர்களே பாட வேண்டும் என்று ஒரு போலி நியாயம் கற்பிக்கப்பட்டு தங்களுக்கு பிடித்த சிலரை முன்னணிக்கு கொண்டு வந்தார்கள் எனபதே உண்மை. பொதுவாக சிவாஜி,எம்.ஜி.ஆர், ஜெமினிகணேசன் குரல்கள் வெவ்வேறு விதமானவை. இவர்களே முன்னணி நடிகர்களாக அன்று இருந்ததால் , குறிப்பாக எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்களுக்கு டி.எம்.சௌந்தரராஜன் பாடுவது தான் பொருத்தம் எனக் கருதப்பட்டது.
டி.எம்.சௌந்தர்ராஜனின் குரல் நேர்த்தியும், எல்லாவிதமான சுருதிகளிலும் பாடும் ஆற்றலும் அவரின் குரலை பலரும் விரும்புவதற்கான காரணங்களாய் அமைந்தன.ஏற்கனவே தியாகராஜ பாகவதரின் ரசிகர்களாக இருந்த பலரும் அவர் குரலின் தன்மையை சௌந்தர்ராஜனின் குரலிலும் அனுபவித்திருக்கக் கூடும்.
அன்றிருந்த தியாகராஜ பாகவதரின் பரமரசிகரான டி.எம்.எஸ் அவரின் பாடல் பாணியை பின்பற்றி பாடி அவரின் நகலாக தன்னை வளர்த்துக் கொண்டவராயினும் , பின்னர் தனது குரலில் மெருகேற்றிக்கொண்டவரராவார். தியாகராஜ பாகவதர் மெல்லிய குரல் போலல்லாமல் டி.எம்.எஸின் குரலின் பின்னாளில் கனமிருந்தது. ஓங்கி குரல் எடுத்து பாடும் ஆற்றலும், ஆண்மைமிக்க குரல் ரீங்காரமும் அவரது குரலில் இருந்தது. இந்த தன்மைதான் அன்றைய இசையமைப்பாளர்கள் இவரை நாட்டுப்புறப்பாடல்களை பாட வைக்க காரணமாய் அமைந்தது எனலாம்.
.மந்திரி குமாரி [1951] படத்தில் ” அன்னமிட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே ” என்ற பாடலும் , ,சர்வாதிகாரி [1951 ] படத்தில் ” பஞ்சமும் நோயுமில்லா நாடே இந்த உலகிலே நல்ல நாடுன்னு ” என்ற பாடலும் கிராமிய பாணியில் அமைந்திருந்தமையை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
காதல் பாடல்கள் பாடுவதென்றால் கண்டசாலா ,ஏ.எம்.ராஜா, டி.ஏ.மோதி போன்ற பாடகர்கள் என இருந்த அக்காலத்தில் டி.எம்.சௌந்தரராஜன் மற்றவர்களை போல பாடி தன்னைத் தக்கவைத்துக் கொண்டாரோ என்று எண்ண வைக்குமளவனுக்கு சில பாடல்களை பாடியுள்ளார். வளையாபதி படத்தில் ” குலுக்கிடும் பூவில்லெல்லாம் ” என்ற பாடலை கண்டசாலா சாயலிலும், செல்லப்பிள்ளை படத்தில் ” நாடு நடக்கிற நடையிலே ” என்ற பாடல் நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.ராமசாமி சாயலிலும் இருப்பதை நாம் கேட்கலாம்.சுருக்கமாக சொன்னாலே தனது குரலை அடக்கி வாசித்தார் என்றே எண்ணத் தோன்றுகிறது.எப்படியாவது தான் பாட வேண்டும் என்ற ஆவல் அவரிடம் மேலோங்கியிருந்ததன் அடையாளங்கள் இவை.
அதுமட்டுமல்ல தூக்குத்தூக்கி படத்திற்கான பாடல்களை இலவசமாகவே பாடித்தருவதாக கூறியதாவதும் செய்திகள் உண்டு.
1950 களின் நடுப்பகுதியில் பின்னர் எம்.ஜி.ஆருக்கும் ,சிவாஜிக்கும் , இவர் தான் பொருத்தம் என்ற போக்கு நிலவியது.ஆனாலும் புறநடையாக வேறு நடிகர்களுக்கும் அவர் பாடிய பாடல்களும் வெளிவந்தன. இவருக்கும் அவர் தான் பொருத்தமான குரல் என்று பேசப்பட்ட காலத்திலேயே ஜெமினி கணேசனுக்கு அவர் பாடிய பாடல்கள் பலரின் கருத்துக்களுக்கு எதிரானவையாகவே உள்ளன.இந்த பொருத்தம் என்ற சங்கதியை சுக்குநீராக உடைக்கும் சில பாடல்களை இங்கே தருகிறேன்.
01 இதயவானிலே உதயமனதே -கற்புக்கரசி [1956 ] – டி.எம்.சௌந்தரர்ராஜன் – இசை: ஜி.ராமநாதன்
02 காதல் கீதம் கேட்குமா – கொஞ்சும் சலங்கை [1960 ] – டி.எம்.சௌந்தரர்ராஜன் – இசை: எஸ்.எம்.சுப்பையாநாயுடு
03 சத்தியமே லட்சியமாய் கொள்ளடா – நீலமலைத் திருடன் [1958] – டி.எம்.சௌந்தரர்ராஜன் – இசை: கே.வி.மகாதேவன்
இன்று இந்தப்பாடல்களைக் கேட்பவர்கள் இவை எம்.ஜி.யாருக்கோ அல்லது சிவாஜிக்கோ பாடிய பாடல்கள் என்றே நினைப்பார்கள்!
உண்மை என்னவென்றால் பாடலின் தன்மை , உணர்வுகளுக்கு ஏற்ப பாடல்கள் அமைக்கப்படடன என்ற ரீதியிலும் ,தயாரிப்பாளர்கள் ,நடிகர்கள் இசையமைப்பாளர்களின் விருப்பம் போன்றவற்றிற்கமையவே பாடகர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.இந்த நிலையால் பல பாடகர்கள் பாதிக்கப்பட்டனர் என்பது முக்கியமான விடயமாகும்.
நடிகர்களை பொறுத்தவரையில் யார் பாடினாலும் கவலையில்லை என்பதே உண்மை.சிவாஜியைப் ௦பொருத்தவரையில் யார் பாடினாலும் அவர்களின் குரலுக்கு ஏற்ப தனது நடிப்பாற்றலாலேயே அவற்றை வெற்றி பெற வைக்க முடியும் நம்பிக்கை இருந்தது. எம்.ஜி.ஆர் தி.மு.க சார்பானவர் என்பதும் , அதன் கொள்கைகளை பிரகடனப்படுத்துவதில் ஆர்வம் காட்டினார். அதன் போக்கில் டி.எம்.ஸும் வேறு சிலரும் அந்த வகையான பாடலகளை பாடினர்.இந்நிலையில் இன்னாருக்கு இன்னார் பாட வேண்டும் என்ற நிலை 1960 களிலேயே உச்சம் பெற்றது.
ஒலியுடன் கூடிய காட்சி ஊடகம் எவ்வளவு வலிமையானது என்பதை இதன் மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம். ஒரே விதமான குரல் தொடர்ந்து குறிப்பிடட நடிகருக்கு குரல் கொடுக்கும் போது மிக எளிதாக ரசிகர்கள் மனதில் அது தரும் படிமம் இலகுவில் படிந்து விடுகிறது.1980களில் நடிகர் மோகனுக்கு பின்னணிக்குரல் கொடுத்த பாடகர் சுரேந்தர் குரலை நினைத்துப்பார்க்கலாம்.
சிவாஜிக்கும்,எம்.ஜி.ஆருக்கும் தொடர்ந்து எஸ்.கிருஷ்ணன் பாடியிருந்தாலும் நாம் அவர் தான் இருவருக்கும் பொருத்தம் நினைத்திருப்போம்.எஸ்.சி.கிருஷ்ணன் என்ற பாடகர் பெரும்பாலும் நகைச்சுவை நடிகரான தங்கவேலுவுக்கு பின்னணி பாடுபவராக இருந்தார். இது திரையில் பார்த்து பழகுவதால் எழும் மனப்பிரமை அன்றி வேறென்ன ?
குழுமனப்பான்மை இசையிலும் வலுப்பெற்றது.தொடர்ந்து பல வருடங்களாக ஒரு சில இசையமைப்பாளர்களும் ஒரு சில பாடகர்களும் இயங்கியது தமிழ் சினிமா விதியாயிற்று. இந்த சூழ்நிலைகளைக் கூர்ந்து அவதானிக்காதவர்கள் கூட பாடகர்களில் டி.எம்.சௌந்தரராஜன் , பி.சுசீலா ,பி.பி.ஸ்ரீனிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி போன்றோர் மிகவும் முன்னிலைப்படுத்தப்பட்டனர் என்பதை இலகுவாகக் கண்டுகொள்ளலாம். இதற்கு பல உதாரணங்களை நாம் கூறலாம்.
பாவமன்னிப்பு படத்தில் ஜெமினி கணேசன் பாடுவதாக அமைந்த “காலங்களில் அவள் வசந்தம் ” பாடலை ஏ.எம்.ராஜா தான் பாட வேண்டும் என்பது படத்தின் தயாரிப்பாளரின் விருப்பமாக இருந்தது.
ஏனெனில் ஜெமினி கணேசனுக்கு ஏ.எம்.ராஜா பாடுவது தான் அன்றைய வழமையாக இருந்தது.ஆயினும் எம்.எஸ்.விஸ்வநாதன் அவரின் வேண்டுகோளையும் மீறி பி.பி.ஸ்ரீனிவாசை தனது விருப்பப்படியே பாட வைத்தார்.இந்தப் பாடல் ஒன்றின் மூலமே பி.பி.ஸ்ரீனிவாஸ் புகழின் உச்சிக்குச் சென்றார்.அந்தக்காலத்தில் ஜெமினிக்கு ஏ.எம்.ராஜா தான் பாட வேண்டும் என்ற நிலையிருந்தது.
ஏ.எம்.ராஜா ஒரு சிறந்த பாடகர் மட்டுமல்ல தலைசிறந்த இசையமைப்பாளராகவும் , இசையமைப்பில் மெல்லிசைமன்னர்களுக்கு சளைத்தவரில்லை எனபதும் ஒரு வகையில் மிகப்பெரிய போட்டியாளராக இருந்ததென்பதும் நமது கவனத்திற்குரியதாகும்.
இனிமையாகப் பாடுவதில் மட்டுமல்ல , கல்யாணப்பரிசு , தேன் நிலவு , விடிவெள்ளி , ஆடிப்பெருக்கு ,அன்புக்கோர் அண்ணி போன்ற பல படங்களுக்கு இசையமைத்து தமிழ் திரையிசையை மெல்லிசைப்பக்கம் திருப்பிய முன்னோடியாக இருந்தவர் ஏ.எம்.ராஜா.
ஏ.எம்.ராஜா இசையமைத்த ஆடிப்பெருக்கு படத்தில் அவருக்கு பதிலாக ஜெமினி கணேசனுக்கு பின்னணி பாடிய , அவருக்குப் “போட்டி” என்று கருதப்பட்ட பி.பி.ஸ்ரீநிவாஸுக்கே ” புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது ” என்ற பாடலைப் பாடும் வாய்ப்பை வழங்கியவர்.மீண்டும் 1975 இல் அவர் இசையமைத்த வீட்டு மாப்பிள்ளை என்ற படத்தில் டி.எம்.சௌந்தர்ராஜனையும் “உலகம் உறங்கும் வேளை “என்ற பாட வைத்தவர் ஏ.எம்.ராஜா !
அவர் திரையுலகை விட்டு நீண்ட காலம் ஒதுங்கியிருந்ததால் பெருநட்டம் அடைந்தவர்கள் இசை ரசிகர்களே என்பதை அவர் இசையமைத்த பாடல்களின் இனிமை உணர்த்தி நிற்கிறது. “தனிமையிலே இனிமை காண முடியுமா , காலையும் நீயே மாலையும் நீயே , நிலவவும் மலரும் பாடுது , போன்ற தனித்துவம் மிக்க இசையற்புதங்களை யாரால் மறக்க முடியும்?!
அவர் தொடர்ந்து திரைக்களத்தில் இருந்திருந்தால் இது போன்ற எத்தனையோ இசைக்கனிகளை நாம் சுவைத்திருக்கலாம் என்பதையும் , தமிழ் சினிமா அவர் மூலம் எத்தனையோ இனிய மெட்டுக்களால் வளம் பெற்றிருக்கும்என்பதையும், இப்படியான ஒரு மாபெரும் கலைஞன் ஒதுங்கி விட்டானே என்ற ஏக்கமும் அவரது இசையின் பரம ரசிகனான எனக்கு பலமுறை ஏற்படுவதுண்டு.
” திரை இசை அலைகள் ” என்ற நூலில் ஏ.எம்.ராஜா குறித்து அதன் ஆசிரியர் வாமனன் மிக அழகாக விவரிக்கின்றார்.
” படித்துப் பட்டம் பெற்றவர் ராஜா, கண்டிப்பும் கட்டுப்பாடும் கொண்டவர்.தன் பணியைக் குறித்து படு சீரியஸான கண்ணோட்டம் உடையவர்.தன்னுடன் பணியாற்றுபவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைப்பார்.
சினிமா உலகின் நெளிவு -சுளிவுகளும், சினிமா நபர்களுடன் பழகும் போது காட்ட வேண்டிய நீக்கு போக்குகளும் , ராஜாவுக்கு கைவராத விஷயங்கள்.தமிழ் சினிமாவில் அவர் கொடிகட்டிப் பறந்த போதுஇதெல்லாம் குறைகளாகத் தெரியவில்லை.காலம் மாறாத தொடங்கிய போது ராஜா தன்னை மாற்றிக் கொள்ளத் தயாரில்லை. ………தான் எதிர்பார்க்கிற சூழ்நிலை ஒரு இடத்தில் இல்லை என்றால் , ஒலிப்பதிவு கூடத்தை விட்டு பேசாமல் வீட்டுக்குச் சென்றுவிடக் கூடியவர் ராஜா . ” இப்படி பலமுறை நடந்திருக்கிறது ” என்கிறார் ஜிக்கி…..தமிழ் திரையுலகில் தன்னை சிலர் ஒதுக்க நினைக்கிறார்கள் என்று சந்தேகப்பட்ட ராஜா தானே ஒதுங்கி விட்டார். [தகவல் : திரை இசை அலைகள் – வாமனன் ]
1980 களில் வெளிவந்த அவரது பேட்டியில் ஒன்றில் “நல்ல இசை வரவேண்டும் என்றால் இன்னாருக்கு இன்னார் பாடுவது என்ற முறை இல்லாமல் போக வேண்டும் ” என்ற கருத்தை அவர் வலியுறுத்தியதும் இங்கே நினைவுக்கூரத்தக்கதாகும்.
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தில் முத்துலிங்கம் எழுதிய வீர உணர்வுமிக்க ஒரு பாடல் பதிவின் போது, அந்தப்பாட்டை ஜேசுதாஸ் பாட வேண்டும் என்பது எம்.ஜி.ஆர் விருப்பம்.ஆனால் முத்துலிங்கம் “இந்தப்பாட்டை டி.எம்.சௌந்தரராஜன் பாடினால் நல்லாயிருக்கும் ” என்று எம்.ஜி.ஆரிடம் கூறிய போது “இப்படி சொல்லும்படி எம்.எஸ்.வி சொன்னாரா ” என்று எம்.ஜி.ஆர் கேட்டார் என முத்துலிங்கம் ஒரு காணொளியில் கூறுகிறார். எம்.ஜி.ஆரின் விருப்பம் கோவை சௌந்தரராஜன் என்பதையும் பதிவு செய்கிறார் முத்துலிங்கம்.
இது போலவே பதிபக்தி படத்தில் ” வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே ” என்ற பாடலை
மூன்று பாடகர்கள் பாடி இறுதியாக டி.எம்.எஸ்.பாடியதே தெரிவு செய்யப்பட்டது என்று எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு பேட்டியில் கூறினார். அதற்கான காரணம் வெவ்வேறு கருத்து நிலவியது என்பதும் விஸ்வநாதன் கருத்தை நியாயப்படுத்த கூறிய கருத்து இது என்பதும் வெள்ளிடைமலை.
தங்களுக்குப் பிடித்த பாடகர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியவர்கள் , “இன்னாருக்கு இன்னார் தான் பொருத்தம் ” என்று கூறி வந்தவர்கள் பின்னாளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்ற யாருக்கும் பொருத்தமில்லாத குரல்களையும் அறிமுகம் செய்தார்கள் எனபது மட்டுமல்ல எடுத்த எடுப்பிலேயே எம்.ஜி.ஆருக்கும் ,சிவாஜிக்கும் பாடவும் வைத்தார்கள் என்பதில் எந்த விதமான தர்க்க நியாயமுமில்லை.
1950 களில் வெளிவந்த எம்.ஜி.ஆர் , சிவாஜி படங்களை பார்த்தால் அவர்கள் பெரும் பாலும் சமூகக்கதைகளில் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தமையும் , பாடல்களின் இயல்பும் யார் பாடுகிறார்கள் என்ற அக்கறையும் இருக்கவில்லை என்பதையும் அவதானிக்க முடியும். நாயக அந்தஸ்து அங்கே குறுக்கிடாமல் கதையின் அம்சம் முக்கியமாக கருதப்பட்டது.
பெற்றதாய் [1953] படத்தில் ” நிலாவிலே ஒய்யாரம் உலாவுதே அநுராகம் ” , ” ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு ” என்ற இரு காதல் பாடல்கள். இரண்டு பாடல்களையும் இரு வேறு பின்னணிப்பாடகிகளுடன் பாடியவர் ஏ.எம்.ராஜா. .முதலாவது பாடல் துடுக்குத்தனமும், இனிமையும் மிக்க குரலிலும் , இரண்டாவது பாடல் [ ஏதுக்கு அழைத்தாய் ] மென்மையும்,அப்பாவித்தனமும் , இனிமையும் நிறைந்திருக்கும் குரலிலும் அமைந்திருந்தது.
முதல் பாடலைப் பாடியவர் அக்காலத்தில் புகழபெற்ற இசையமைப்பாளரான சி.ஆர் சுப்பராமனின் இசையில் தேவதாஸ் படத்தில் இடம் பெற்ற “எல்லாம் மாயை தானா “, ” உறவுமில்லை பகையுமில்லை” போன்ற பாடல்களை பாடிய கே.ராணி!
“ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு ” என்கிற மென்மையும் இனிமையுமிக்க அந்தப்பாடல் தான் பி.சுசீலா பாடிய முதல் பாடல்.பின்னாளில் இதமாக தழுவிய குளிர் தென்றலின் தளிர்நடை அந்தக்குரல்! அமைதியாய் ஓடும் சிற்றோடையின் லயமும் இளம் பெண்ணின் அப்பாவித்தனமுமான இளங்குரலின் தன்மையும் அப்பாடலில் இருந்தது.
ஏ.பி.கோமளா,கே.ராணி பி.லீலா , ஜிக்கி , போன்ற 1950 களின் இனிமையான குரல்களுக்கு மத்தியில் எடுத்த எடுப்பிலேயே அக்காலத்தில் புகழபெற்றிருந்த ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து பாடும் வாய்ப்பைப் பெற்றவர் சுசீலா.ஒரு முக்கியமான அறிமுகப் பாடலாயினும் தொடர்ந்து அதிகமான பாடும் வாய்ப்புகள் சுசீலாவுக்கு கிடைக்கவில்லை.ஆனாலும் வாசத்தை தொடராக அள்ளி வீசாத பூந்தென்றல் அவ்வப்போது வீசவும் செய்தது.
எத்தனையோ விதம் விதமான பெண் குரல்கள் ஒலித்த அந்தக்காலத்தில் 1955 இல் வெளியான கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் ஏ.ராமராவ் இசையமைப்பில் அவர் பாடிய சில பாடல்கள் புகழ் பெற்றன.அதைத்தொடர்ந்து பல பாடல்கள் …..!
01 தன்னாலே வரும் காசு – செல்லப்பிள்ளை [1955] – பி.சுசீலா -இசை :ஆர்.சுதர்சனம்
02 அந்த நாள் தான் இதடா – அனார்கலி [1957] – பி.சுசீலா -இசை :ஆதிநாராயணராவ்
03 எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுது ஏனோ – கணவனே கண் கண்டா தெய்வம் [1955] – பி.சுசீலா -இசை :ஏ.ராமராவ்
04 அன்பில் மலர்ந்த நாள் ரோஜா – கணவனே கண் கண்டா தெய்வம் [1955] – பி.சுசீலா -இசை :ஏ.ராமராவ்
05 உன்னைக் கண் தேடுதே – கணவனே கண் கண்டா தெய்வம் [1955] – பி.சுசீலா -இசை :ஏ.ராமராவ்
06 தங்கச்சி சிலையே வாடா – இரு சகோதரிகள் [1957] – பி.சுசீலா -இசை :எஸ்.ராஜேஸ்வரராவ்
07 அமுதைப் பொழியும் நிலவே – தங்கமலை ரகசியம் [1957] – பி.சுசீலா -இசை :டி.ஜி.லிங்கப்பா
08 ஜோரான ரூபமே – இரு சகோதரிகள் [1957] – பி.சுசீலா -இசை :எஸ்.ராஜேஸ்வரராவ்
இவை போன்ற பல பாவங்களை காட்டும் பாடல்கள் அவரின் பெயரை அழுத்தமாக பதிவு செய்தன. அதே ஆண்டும் அதைத் தொடர்ந்தும் வந்த ஆண்டுகளில் வெளிவந்த அவர் பாடிய பல பாடல்கள் அவரின் பெயர் சொல்லும் புழபெற்ற பாடல்களாக விளங்கின.
01 பிருந்தாவனமும் நந்த குமாரனும் – மிஸ்ஸியம்மா [1955] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா – இசை :எஸ்.ராஜேஸ்வரராவ்
02 தேன் உண்ணும் வண்டு – அமரதீபம் [1955] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா – இசை :டி.சலபதிராவ்
03 விண்ணோடும் முகிலொடும் – புதையல் [1957] – பி.சுசீலா + சி.எஸ்.ஜெயராமன் – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி
04 கண் மூடும் வேளையிலும் – மகாதேவி [1957] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி
05 தென்றல் உறங்கிய போதும் – பெற்ற மகனை விற்ற அன்னை [1957] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி
06 துள்ளி துள்ளி அலைகள் எல்லாம் – தலை கொடுத்தான் தம்பி [1958] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி
07 வருவேன் நானுனது மாளிகைக்கே – மல்லிகா [1955] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா – இசை :டி.ஆர்.பாப்பா
08 ஆண்கள் மனமே இப்படித்தான் – நான் வளர்த்த தங்கை [1957] – பி.சுசீலா + டி.எம்.சௌந்தரராஜன் – இசை :பெண்டயலாயா நாகேஸ்வரராவ்
09 ஆசையினால் மனம் – கல்யாணப்பரிசு [1959] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா – இசை :ஏ.எம்.ராஜா
10 ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா – மஞ்சள் மகிமை [1955] – பி.சுசீலா + கண்டசாலா – இசை :எஸ்.ராஜேஸ்வரராவ்
11 கோடை மறைந்தால் – மஞ்சள் மகிமை [1955] – பி.சுசீலா + கண்டசாலா – இசை :மாஸ்டர் வேணு
12 மாறாத சோகம் தானோ – மஞ்சள் மகிமை [1955] – பி.சுசீலா + கண்டசாலா – இசை :மாஸ்டர் வேணு
13 முல்லைமலர் மேலே – உத்தமபுத்திரன் [1957] – பி.சுசீலா + டி.எம்.சௌந்தரராஜன் – இசை: ஜி.ராமநாதன்
14 அன்பே அமுதே – உத்தமபுத்திரன் [1957] – பி.சுசீலா + டி.எம்.சௌந்தரராஜன் – இசை: ஜி.ராமநாதன்
15 சிட்டு சிரித்தது போலெ – உத்தமபுத்திரன் [1957] – பி.சுசீலா + டி.எம்.சௌந்தரராஜன் – இசை: ஜி.ராமநாதன்
16 விழி வாசல் அழகான மணி மண்டபம் – பெண் குலத்தின் பொன் விளக்கு [1959]- பி.சுசீலா + சீர்காழி -இசை :மாஸ்டர் வேணு 17 வண்டு ஆடாத சோலையில் – எங்கள் குல தேவி [1959] – பி.சுசீலா + சீர்காழி – இசை :கே.வி.மகாதேவன்
18 உலாவும் தென்றல் நிலாவை பிரிவது – கோடீஸ்வரன் [1959] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா – இசை :எஸ்.வி.வெங்கடராமன்
19 யாழும் குழலும் உன் மொழி தானோ – கோடீஸ்வரன் [1959] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா – இசை :எஸ்.வி.வெங்கடராமன்
20 நினைக்கும் போதே ஆகா – இல்லறமே நல்லறம் [1958] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா – இசை :கே.ஜி.மூர்த்தி
21 வாடிக்கை மறந்ததும் ஏனோ – கல்யாணப்பரிசு [1959] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா – இசை :ஏ.எம்.ராஜா
1950 களில் வெளிவந்த எம்.ஜி.ஆர் , சிவாஜி படங்களை பார்த்தால் அவர்கள் பெரும் பாலும் சமூகக்கதைகளில் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தமையும் , பாடல்களின் இயல்பும் யார் பாடுகிறார்கள் என்ற அக்கறையும் இருக்கவில்லை என்பதையும் அவதானிக்க முடியும். நாயக அந்தஸ்து அங்கே குறுக்கிடாமல் கதையின் அம்சம் முக்கியமாக கருதப்பட்டது.
கதாபாத்திரங்களின் உணர்வுகளை அதிகமாக அல்லது மிகையாக உணர்வுகளை வெளிப்படுத்தத் தொடங்கிய 1960 களிலேயே உணர்வுச் சிதறல்களை கதையுணர்ப்பிலேயே வைக்கும் புதிய அலை பிறந்தது.உணர்வுகளின் நுண்மைகள் மிகைப்படுத்தப்பட்டன. அழ வைப்பது அல்லது சோகத்தைப் பிழிய வைப்பது பெரிய கலையாகக் கருதப்பட்டது எனலாம்.
காலம் மாறும் பொது அதற்கேற்ற நெறிகள் தோன்றுகின்றன.தனிமனித மிகையுணர்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில் அது சார்ந்த இசையை ,அந்தப்பொந்தில் நின்று உழாமல் ,புதுமை நோக்கில் எளிமையுடனும் இனிமையுடனும் பாய வைத்தவர்கள் மெல்லிசைமன்னர்கள்!
ஹிந்தியில் பாடகர் , பாடகிகளை , நௌசாத் , எஸ்.டி.பரமன் , சி.ராமச்சந்திரா , ஹேமந்த்குமார், ஷங்கர் ஜெய்கிஷன் , சலீல் சௌத்ரி, மதன் மோகன் போன்ற இசையமைப்பாளர்கள்குறிப்பாக லதா மங்கேஷ்கரை எவ்விதம் சிறப்பாகப் பயன்படுத்தி பாடல்கள் தந்தார்களோ , அது போல மெல்லிசைமன்னர்களும் தென்னிந்திய பாடகர், பாடகிகளை பயன்படுத்தி பல இனிய பாடல்களைத் தந்தார்கள்.
அதிலும் குறிப்பாக சுசீலாவின் குரலை வியக்கத்தக்க அளவில் பயன்படுத்தினார்கள்.
T .சௌந்தர்.
[ தொடரும் ]