கவிதைகள்
மாதர்தம்மை இழிவுசெய்யும் மடமையைக் கொழுத்துவோம்!… கவிதை…. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
கருவினைத் தாங்கும் பெருமையை இறைவன் புவியிலே பெண்ணுக்கே வரமென வழங்கினான் உயிரினுக் குள்ளே உயிரினைத் தாங்கும் உயரிய பிறப்பே பெண்ணவள் ஆவாள் உணவினை மறப்பாள் உறக்கத்தை துறப்பாள் கனிவெனும் உணர்வை உளமதில் கொள்வாள் நினைவெலாம் பாசம் நிறைத்துமே நிற்பாள் உலகிலே என்றும் உன்னதம் பெண்ணே பூமியும் பெண்ணே சாமியும் பெண்ணே ஓடிடும் நதியெலாம் பெண்ணே என்போம் சக்தியும் பெண்ணே சித்தியும் பெண்ணே எத்திசை பார்க்கினும் பெண்ணே தெரிவாள் சாமியாய் பார்க்கும் பெண்ணைச் சமூகம் சகதியில் வீழ்த்துதல் முறையே அல்ல தாலியைக் கட்டி தர்மத்தை உடைத்து மாதர்க்கு மாவலி கொடுப்பது முறையா கட்டிய மனைவியை எட்டியே உதைப்பதும் வீட்டினை விட்டு விரட்டியே விடுவதும் வீதியில் வைத்து வைதுமே நிற்பது சாதனை அல்ல சண்டாளம் ஆகும்
மகிழுந்தில் பேருந்தில் மாதரை வதைக்கின்றார்
தொடருந்தில் தொழிலகத்தில் துப்பியே உமிழுகிறார்
மாதர்தமை சீரழிக்க வக்கிரமாய் எண்ணுகிறார்
மாதவமாம் மாதர்தமை வதைத்திடுதல் முறையாமோ
உயிரைச் சுமக்கும் உன்னத நிலையை உலகில் பெற்றவள் பெண்ணே ஆவாள் அவளால் பிறந்து அவளால் வளர்ந்து அவளுக்கே துன்பம் கொடுப்பது அடுக்குமா தாயாய் இருப்பாள் தாரமாய் இருப்பாள் நோயில் எமக்கு மருந்துமாய் மாறுவாள் வேராய் இருப்பாள் நீராய் இருப்பாள் வீழ்ந்து விடாமல் தாங்கியும் நிற்பாள்
பேசிடும் மொழியினைத் தாய்மொழி என்போம்
பிறந்திடு நாட்டையும் தாய் நாடென்போம்
தாய்மையே உலகிலே உயர்ந்ததும் என்போம்
தாய்மையைக் கீழ்மையாய் பார்ப்பது முறையா
சரஸ்வதி லக்ஷ்சுமி துர்க்கை என்போம்
சர்வமும் பராசக்தி என்றுமே துதிப்போம்
குங்குமம் மஞ்சளும் மங்கலம் ஆக
தாங்கிடும் தாய்மையை தாழ்த்துதல் முறையா
மாதர்தம்மை இழிவுசெய்யும் மடமையைக் கொழுத்துவோம்
மாநிலத்தில் மாதர்தம்மை மாதவமாய் போற்றுவோம்
சோதனைகள் தாங்குந்தாய்மை வாழ்கவென்று வாழ்த்துவோம்
தூய்மைநிறை தாய்மைதன்னை தொழுதுவேற்றிப் போற்றுவோம்.
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேர்ண் ….அவுஸ்திரேலியா.