“என் மண்.. என் மக்கள்” …. கவிதை …. சோலச்சி.
எதிரியும் கையெடுத்து வணங்கிய
எளிய மனிதராம் காந்தியார்
பிறந்தது எந்த மண்…?
வணங்குவதாய் ஏமாற்றி – மறைத்து
வைத்திருந்த துப்பாக்கியால் – அந்த
இனியவரை சுட்டவன்
எந்நாடு…?
காந்தியார் உரக்க சொன்ன சொல்
ஹே ராம் ஹே ராம் ஹே ராம்
கோத்ரா ரயில் நிலையத்தில்
கொத்துக்கொத்தாய் எரித்துக் கொன்ற போது
அங்கு அரியணையில் அமர்ந்திருந்த
மகா பெரியவர் யார்..?
தீயில் கருகி
ஆவி தீர்ந்து போனவர்கள்
எந்நாட்டு மக்கள்..?
ஹே ராம் ஹே ராம் ஹே ராம்
வயிறு காத்தால் உயிர் நிலைக்கும்
இரண்டும் செழிக்க மண்ணைக் காக்க
தலைநகரில் திருவோடு ஏந்தி
அரை நிர்வாணமாய் போராடியவர்கள்
எந்நாட்டு மக்கள்..?
அரியணையில் அமர்ந்து
அலட்சியமாய் நாடுகள் சுற்றித்திரிந்த
அந்த பிதாமகர் யார்…?
ஹே ராம் ஹே ராம் ஹே ராம்
விவசாயம் காக்க வெட்ட வெளியில்
உண்ணாமல் போராடியவர்களை
சொகுசு வண்டியால்
கொன்று தின்றவர் எந்நாடு…?
இமயத்தின் இதயமும் உருக
மாதக்கணக்கில் சாலையில் சமைத்து
போராட்டக் களம் அமைத்து
குளிரில் நடுங்கி மாண்டவர்கள்
எந்நாட்டு மக்கள்…?
ஹே ராம் ஹே ராம் ஹே ராம்
அய்யகோ… அய்யகோ….
அவல குரல் கேட்க
கடப்பாரை கொண்டு டிசம்பர் ஆறில்
இடித்து தள்ளியவர்கள் எந்நாடு…?
மத வாதத்தை பிழைப்பு வாதமாய் மாற்றி
மக்களை கூறு போடும் கூட்டம்
எந்நாடு… எந்நாடு….?
ஓடும் இரத்தம் ஒன்று என்றாலும்
தாழ்த்தப்பட்டவன் என
தாழ்த்தி வைத்த
தறி கெட்டவன் எந்நாடு…?
மணிப்பூரில் என் பிள்ளைகளை
மானபங்கம் செய்தவர்கள் எந்நாடு…?
உளமார வேண்டுகிறேன்
ஹே ராம் ஹே ராம் ஹே ராம்…
உயர்ந்த கோபுரங்களால் கோலோச்சம்
திருவண்ணாமலையாரே போற்றி… போற்றி.. போற்றி…
– சோலச்சி
தாய்த்தமிழ்ப் பேசும் தமிழ்ப்பிள்ளைகளை கொத்து கொத்தாக கொன்ற போது மௌனம் காத்தவர்களும் எந்நாடு!
மீன் பிடிக்க சென்ற ஏழை மீனவனை இலங்கைக்காரன் சுட்ட போது சூடாக பஜ்ஜி தின்றவர்களும் எந்நாடு!
காஷ்மீரில் குண்டு வெடித்தபோது கண்ணடித்து சைகை காட்டியவர்களும் எந்நாடு!
ஏழைகளின் இடுப்பில் எப்போதும் ஈரத்துணிதான் என்று சபிப்பதும் எந்நாடு!
கர்மவீரரை காவு வாங்கி ஏழைகளை அஞ்சு பத்துக்கு கையேந்த வைத்ததும் எந்நாடு!
ஹே ராம்! ஹே ராம்! ஹே ராம்!
இரண்டு (வலது,இடது) கைகளையும் உற்று நோக்குங்கள் கவிஞரே!
Thamilnatu