கவிதைகள்
கண்ணென திருநீற்றைக் கருத்தினில் வைப்போம்!…. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
திரு நீற்றைத் தினமும் பூசுவோம்
திரு நிறையும் சிவமும் தெரியும்
திரு நீறென்பது குறையைக் களையும்
திரு நீறென்றும் திருவருள் காட்டும்
உளமது தெளியும் உயர்வுகள் மலரும்
களவது அகலும் கயமைகள் ஒழியும்
பழியது மடியும் பணிவது பிறக்கும்
தினமே நீற்றை அணிபவர்க் கெல்லாம்
மங்கலம் பெருகும் மருளது மடியும்
எங்களின் சிந்தனை இறையினில் பதியும்
கங்கையை அணிந்தவர் காட்சியும் தருவார்
எங்குமே இன்பம் பொங்கியே பெருகும்
பசியும் அகலும் பிணியும் அகலும்
பகலும் இரவும் ஒன்றாய் அமையும்
கனிவு பிறக்கும் கருணை பெருகும்
தினமும் நீற்றை நினைப்போம் நாங்கள்
வரட்சி மறையும் செழுமை சிறக்கும்
வானும் பொழியும் மண்ணும் மகிழும்
பொய்மை பொசுங்கும் மெய்மை தளிர்க்கும்
மெய்மையாய் நீற்றை விருப்புடன் அணிந்தால்
அகமும் மலரும் முகமும் மலரும்
ஆணவம் அகலும் அகமது வெளிக்கும்
அறத்தை நினைப்போம் அன்பைக் கொடுப்போம்
அனுதினம் நீற்றை அணிந்துமே நின்றால்
விண்ணவர் அணிவர் மண்ணவர் அணிவர்
கண்ணுதல் கடவுளை எண்ணுவர் அணிவர்
எண்ணிடும் யாவுமே இன்பமாய் அமையும்
கண்ணென திருநீற்றைக் கருத்தினில் வைப்போம்….
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … அவுஸ்திரேலியா.