‘அது மட்டும் சாகல’ …. கவிதை …. சோலச்சி .
ஊருக்கு ஒதுப்புறமா ஒத்தப்புள்ளையார் கோயில்
கோயிலுக்கு முன்னால சின்னதா ஒரு குளம்….
குளத்துக்கு மேற்கால கிழக்கு பாத்தமாறி வாசல்
வயிறு பெருத்த புள்ளையாரு உள்ளே இருக்கதா
ஏஞ்சோட்டுப் பயலுகளாம்
அய்யாமாரு புள்ளைங்க சொல்லுவானுங்க….
தெக்கி வாசலுல நாங்க நின்னு
எட்டிஎட்டி பாத்தாலும்
எதுவுமே தெரியாது….
பண்டாரம் மணியோசை மட்டும்
பக்கவாத்தியமா கேட்கும்
தெக்கி வாசல் பக்கம் தூபக்கால் வந்ததில்ல
தின்னூரு தந்தாலும் ஒரு அடி தூரத்துலருந்து
விழுற மாறி பாத்துக்குவாங்க…
முட்டியில் ஆக்குன பொங்கசோறு
மூக்குல மாட்டிக்கிட்டு நாக்குல தாளம் போடும்
உள்ளுக்குள்ள கொடுத்ததுபோக
கோழிப்பீயளவு கொண்டுவந்து கொடுப்பாங்க
ஆனாலும் அத வாங்க ஆளாளுக்கு முண்டிக்குவோம்…
குளத்தின் கீழக்கரையிலதான்
எங்களுக்கான சுடுகாடும் இருக்குது
அங்கிருந்து பாத்தாக்க கருப்பா ஒரு உருவம்
கோயிலுக்குள்ள இருப்பது ஓரளவு தெரியும்…
தூக்குப்போட்டு செத்த பக்கத்துவீட்டு சின்னம்மாவ
தூக்கி வந்து எரிச்சப்ப
புகைபூரா புள்ளையார் கோயிலுக்குள்ள
பூந்து விளையாண்டுச்சு
இனி பொறந்தா புகையாதான் பொறக்கனும்னு
போறபோக்குல சொன்னாரு எங்கப்பா….
இங்க செத்தாதான் புள்ளையாரயே பாக்க முடியுமுனு
எங்கப்பா சொன்னது இப்பவும் கேட்குது
ஆனா அது மட்டும் சாகலயே..
– சோலச்சி .