கவிதைகள்
வாழ்வென்பது வரமாகும்!… கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
மண்ணிலே பிறப்பது மா தவமாகும்
மனிதராய் பிறப்பது மா வரமாகும்
எண்ணியே யாவரும் இருந்திட வேண்டும்
கண்ணென வாழ்க்கையை எண்ணியே மகிழ்வோம்
பிறந்தவர் எல்லாம் மறைவது இயற்கை
மறைவது வருமென நினைப்பது மில்லை
நிரந்தரம் நிலைப்போம் என்றுமே நினைத்து
நிலையினை உணரா நெறிபிறள் கின்றார்
வாழ்ந்திட பொருளது அனைவர்க்கும் தேவை
பொருளது வாழ்வினை விழுங்கிடல் முறையா
பொருளினைக் கருத்தில் இருத்தியே வாழ்ந்தால்
அருளது நினைப்பை அனைவரும் மறப்பார்
அறஞ்செய்ய அனைவரும் விரும்பிடல் வேண்டும்
அதுவே நம்வாழ்க்கையின் ஆணிவேர் ஆகும்
அதிகாரம் ஆணவம் ஆனந்தம் அளிக்கா
அன்பொடு கருணை அருந்துணை ஆகும்
அறமிலா அரசியல் அறமிலாத் தலைவர்கள்
அனைத்துமே வாழ்க்கையை அழித்திடும் விஷமே
அறமொடு அரசியல் அருள்நிறை தலைவர்கள்
அனைத்துமே வாழ்க்கையின் அதிபெரு வரமே
நீதியை மறப்பது வாதமே செய்வது
ஆதியை வெறுப்பது அகிம்சையைத் துறப்பது
மானிட வாழ்க்கையை வரட்சியாய் ஆக்கிடும்
வையத்து வாழ்வினை சாபமாய் மாற்றிடும்
வாழுங் காலமென்பது யாவர்க்கும் வரமே
மனமதில் அழுக்கைக் களைவது கடனே
அருளினை அன்பினை அகத்தினில் இருத்திடல்
அமைந்த நம் வாழ்வினை அதிவரமாக்கும்
இறை நினைப்பதனை இருத்திடல் வேண்டும்
இன்னல்கள் இருப்பதை மறந்திட வேண்டும்
அனைத்துமே ஆண்டவன் செயலென நினைத்தால்
அருளது பெருகும் ஆனந்தம் நிலைக்கும்
வசைமொழி வீழ்த்துவோம் வாழ்த்தினை வழங்குவோம்
மனமெலாம் இறையை நினைத்துமே போற்றுவோம்
கிடைத்த நம்வாழ்க்கையை இமயமாய் ஆக்குவோம்
படைத்த நம்பரமனை நினைத்துமே வாழுவோம்…
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….அவுஸ்திரேலியா