கவிதைகள்
“கூடு அடையவேண்டிய பறவையொன்று”…. ( கவிதை ) …. சோலச்சி.
கூடு அடையவேண்டிய
பறவையொன்று
யாருமற்ற சாமத்தில்
பயணிக்கிறது…
உணவுக்கான பயணம்
நெடுந்தூரமாய் இருந்திருக்கலாம்
உறவுக்கான பயணமுமாக
அமைந்திருக்கலாம்…
உழுத்துப்போன விறகை எரித்த
சாம்பலையொத்த வான வீதியில்
முக்காடு போத்தி நெற்றியை மட்டும்
நீட்டிநீட்டி போக்கு காட்டி
பாதை அமைக்கிறது நிலா…
கூட்டமாய் விளக்கேற்றி
கொஞ்சி விளையாடும் விண்மீன்கள்
நித்திரை வேண்டி
நீண்ட துயில் கொண்டிருக்கலாம்…
எரிவாயு வண்டிகளின்
சக்கரத்தை எரித்த புகைகளோ
நிலா அமைத்த பாதைகளில்
அவ்வப்போது
வேலை நிறுத்தம் செய்கின்றன…
விழிகள் மூடி திறப்பதுபோல்
வானம் வித்தை காட்டினாலும்
கிடைத்த வெளிச்சத்தை கூர் தீட்டி
நேராய் கூடடைகிறது
அந்தப் பறவை…!
சோலச்சி அகரப்பட்டி.
ரொம்ப நல்லா இருக்கு
அருமை
” கூடு அடைய வேண்டிய பறவை ஒன்று” வாசித்தேன்.இயற்கையை மிகவும் அருமையாக வர்ணித்துள்ளார் கவிஞர்..”கூட்டமாய் விளக்கேற்றி கொஞ்சி விளையாடும் விண்மீன்கள் நித்திரை வேண்டி நீண்ட துயில் கொண்டிருக்கலாம்” என்ற வரிகளை மிக மிக ரசித்தேன்.அன்புடன் மயிலாடுதுறை ராஜசேகர்
அற்புதமான கவிதை