கவிதைகள்

தமிழ் சைவம் காக்கவந்தார் எங்களம்மா தங்கம்மா!… ( கவிதை ) ….. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

தங்கம்மா எங்களம்மா தமிழ்சைவம் காக்கவந்தார்  

வெங்கலமாம் குரல்கொண்டு மிகுசைவம் உரைத்துநின்றார் 
 

இங்கிதமாய் சங்கத்தமிழ் எங்குமே உவந்தளித்தார்  

எங்களது தவப்பயனாக இப்புவியி லவர்பிறந்தார்  

  

சிற்றின்பம் தனைத்துறந்தார்  சிவமதனை மனம்நிறைத்தார்  

பற்றுடைய ஆசைகளைப் பற்றாம லவரிருந்தார் 

நற்கருணை மனங்கொண்டு நானிலத்தை அவர்பார்த்தார்  

நற்றவத்தின் பயனாக நல்வரமாய் அவர்பிறந்தார்  

  

தெல்லிப்பளைத் திருநகரை திருத்தலமாய் ஆக்கினார்  

தேடிவந்து துர்க்கையம்மன் திருவடியைச் சரண்புகுந்தார்   

நல்லவரைத் தொண்டினுக்காய் நயமுடனே அவரணைத்தார் 

நலன்காக்க நானிலத்தில் பிறந்தாரே எங்களம்மா  

  

பக்தியொடு பக்குவத்தை பலருள்ளும் விதைத்தாரே 

பண்பாடி இன்னிசையால் பலகருத்தை மொழிந்தாரே  

நித்தமுமே சத்தியத்தை நிலைநிறுத்த முயன்றாரே  

நீள்பணியைச் சுமந்தபடி நெடும்பயணம் சென்றாரே  

  

பலநாடு பலவமைப்பின் பாராட்டும்  பெற்றாரே  

பண்டிதராய் புலவராய் குருவெனவே திகழ்ந்தாரே  

செந்தமிழைச் சிவத்தோடு சேர்த்தணைத்து நின்றாரே 

சிவத்தமிழ்ச் செல்வியாய் செகம்போற்ற மிளிர்ந்தாரே  

  

சிவஞான வித்தகராய் ஒளிபரப்பி நின்றாரே  

திருவாசகக் கொண்டலாய் அவையேறி அமர்ந்தாரே  

துர்க்கா துரந்தரியாய் தொண்டாற்றி உயர்ந்தாரே 

தூய்மைநிறை மனத்தினராய் தெய்வத்திரு மகளானார்  

  

அல்லற்பட்ட பெண்களுக்கு ஆறுதலாய் அவரிருந்தார் 

அவரிருக்க இருப்பிடத்தை ஆரம்பித்தார் எங்களம்மா  

தொடக்கிவைத்த பணியனைத்தும் தொலைதூரப் பார்வையுடன் 

எடுத்தவரும் நின்றதனால் எல்லோரும் வாழ்த்துகிறார்  

  

பெண்ணடியார் வரிசையிலே எங்களம்மா தங்கம்மா  

மண்ணகத்தில் வரமெனவே வந்துநின்றார் மாவொளியாய் 

இருளுறைந்த வாழ்க்கையிலே ஏற்றிவைத்தார் ஒளிவிளக்கை 

அவ்விளக்கின் ஒளிபெருகி ஆறுகிறார் பலரிப்போ  

  

துர்க்கையம்மன் தாழ்பணிந்து தொடக்கிவைத்த தொண்டிப்போ 

பற்பலவாய் கிளைபரப்பி பயனளித்துச் செழிக்கிறது  

தக்கபல துணைபெருக தன்வாழ்வை அர்ப்பணித்தார் 

மக்களது நலன்நிறைத்த மங்கைநல்லா ளெங்களம்மா  

  

தனிப்பெண்ணாய் எழுந்துநின்று தளர்வின்றிப் பணியாற்றி 

சமுதாயம் சமயமென எண்ணியெண்ணி செயலாற்றி  

தன்மொழியை உணர்வாக்கி தரணியெங்கும் வலம்வந்தார் 

தாய்க்குலத்தின் தவச்செல்வி எங்களம்மா தங்கம்மா  

  

நல்லைநகர் நாவலரை நாமென்றும் இழக்கவில்லை 

சொல்லவல்ல நிலையினிலே எங்களம்மா வந்துவிட்டார்  

நாவலரின் வழிநடக்க நம்மம்மா துணையானார்  

நாளுமே அம்மாவை நாம்போற்றி நின்றிடுவோம்  

  

தன்வழியில் நடப்பதற்கு சரியான பிள்ளைகளை 

சன்மார்க்க வழியினிலே பயிற்றுவித்தார் எங்களம்மா  

எங்களம்மா தலைப்பிள்ளை ஏற்றபணி ஆற்றுகிறார் 

மங்கலமாய் தங்கம்மா மனமெல்லாம் நிறைகின்றார்.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
         மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
                 மெல்பேண் … அவுஸ்திரேலியா 
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.