கவியரசன் கண்ணதாசன் காலமெலாம் வாழுகிறான்!…. ( கவிதை ) ….. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
கண்ணதாசன் கவிதைக்கு கற்கண்டே தோற்றுவிடும்
அவ்வளவு சுவையினையும் அவனளித்து நின்றானே
காதலினைப் பாடிவிடின் காமனுமே வந்திடுவான்
தேமமதுரத் தமிழாலே திசைநுகரக் கவிதந்தான்
பாவாணர் மத்தியிலே பக்குவமாய்க் கவிதந்தான்
பாரதிரக் கவிதந்த பாரதிக்கு மகனானான்
ஓவியமாய்க் கவிதந்தான் உயிர்ப்புடனும் கவிதந்தான்
சேமமுற வாழ்வதற்கும் சீராகக் கவிதந்தான்
நாத்தீகம் பேசிநின்ற நாட்களை நாமொதிக்கிவிடின்
ஆத்திகம் தானவனை அனைவர்க்கும் காட்டியது
சிறுகூடல் பட்டியிலே சிரித்து விளையாடியவன்
சிந்தனைக்குக் கவிதைதரும் சிறப்பினையே பெற்றுவிட்டான்
வேதக் கருத்தையெல்லாம் விளக்கியே கவிதந்தான்
சாதலுக்கும் விளக்கம்தந்து தத்துவமாய் கவியளித்தான்
நோதலுக்கும் ஒத்தடமாய் நுட்பமாய்க் கவிதந்தான்
போதிக்கும் அவன்கவிதை புதுக்கருத்தாய் மிளிர்ந்ததுவே
சொத்துக் குவிப்பதனை சுகமாகக் கொள்ளாமல்
வித்தகனாய் இருப்பதையே விருப்பமா யவன்கொண்டான்
வர்த்தகச் சினிமாவில் மாட்டாமல் இருந்திருப்பின்
வைகத்தை வாழ்விக்க வந்திருப்பான் கம்பனைப்போல்
அரசியலை எறிந்துவிட்டு ஆன்மீகம் நாடியதால்
அவனின்று சமூகத்தின் அரவணைப்பில் நிற்கின்றான்
அர்தமுள்ள இந்துமதம் அவன்தந்த மருந்தாகும்
அத்தனையும் எங்களுக்கு அருளுள்ள விருந்தாகும்
கவியரசு கண்ணதாசா காலமெலாம் வாழுகிறாய்
தமிழுலகில் உன்கவிதை தானுரமாய் நிற்குமையா
செவிநுகரக் கவிதந்த கவியரசன் நீயன்றோ
புவிமுழுதும் உன்கவிதை புகழோடு திகழுமையா.