கவிதைகள்
“மணிவாசக மலர்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
"மணிவாசக மலர்" .... கவிதை .... மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
பக்தி வயலில் பல பூக்கள் மலர்ந்தன
தித்திக்க தேன் நிறைய மலரொன்றே தெரிந்தது
முத்திக்கு வித்தான அத்தனையும் கொண்ட மலர்
தித்திக்க தமிழாலே திரு வாசகம் மொழிந்தது
மணி மணியாய் வார்த்தைகளை அம்மலரும் உதிர்த்தது
மணி வாசகப் பெருமானாய் வையத்தில் ஒளிர்ந்தது
சிவ பெருமான் கழலிணையே பற்றியது நின்றது
சிவ நாமம் வாழ்கவென செப்பியே போற்றியது
பாண்டி மன்னன் கண்களிலே பட்டது அம்மலரும்
பரி வட்டம் மரியாதை கொடுத்தானே பக்குவமாய்
அரசாட்சி சிறந்தோங்க அமைச்சர் அவை உயர்ந்தோங்க
முதல் அமைச்சர் நிலையமர்த்தி முழுமகிழ்வு கொண்டானே
மணி வாசக மலரும் மன்னரவை அமர்ந்தது
மன்னரவை மதிப்புறவே மணம் பரப்பி நின்றது
குதிரையெனும் உருவினிலே தொடர் வினையும் வந்தது
கடைத்தேற மலருக்கு வழி அங்கே பிறந்தது
பரி வட்டம் ஈந்தவனே மலர்வாடச் செய்திட்டான்
பழி சுமத்தி சிறைதள்ளி கருகிடவும் வைத்திட்டான்
பரமன் அருள் மலர்மீது பய்ந்துமே நின்றது
மலர் துளிர்த்து திருவருளால் வண்ணமாய் ஒளிர்ந்தது
ஞான ஒளி மலர்மீது நன்றாய் பதிந்தது
நான் மறையும் நற்றமிழும் மலருக்குள் நிறைந்தது
தேனாகக் திரு வாசகம் தித்திக்க வந்தது
ஊனினை உருக்கியது உள் ஒளியும் பெருக்கியது
நாநிலத்தார் நம் தமிழை நன்குணர வைப்பதற்கும்
ஓதி உணர்வதற்கும் உள வழுக்கை நீக்குதற்கும்
வேதமாய் ஞானமாய் வியந் தேற்றும் பெருவரமாய்
வாய்த்த பெருஞ் சொத்தே திருவாசக மெனுந்தேன்