கவிதைகள்
மறை மாயம் தெரிவதில்லை!….. ( கவிதை ) …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
விஞ்ஞானம் வளர்கிறது
விந்தைகளும் பெருகிறது
நல்ஞானம் என்றுமே
நம்புகிறோம் யாவருமே
விஞ்ஞான ஆராய்வில்
விளங்குகின்ற ஆளுமைகள்
மெய்யறிவை மனங்கொண்டால்
விபரீதம் தடுத்திடலாம்
ஆராய்ச்சி ஆணவத்தை
விதைத்துவிடக் கூடாது
அறமற்ற பாதையிலே
கால்பதித்தல் ஆகாது
மானிடத்தை மனமிருத்தி
ஆராய்ச்சி அமைவதுவே
மானிலத்தில் நல்விளைவு
மலர்வதற்கு வழியாகும்
எத்தனையோ ஆராய்ச்சி
எமக்குதவி நிற்கிறது
அத்தனையும் ஆளுமைகள்
அயராத பேருழைப்பே
விஞ்ஞான ஆராய்ச்சி
மேதைகளின் வாழ்வாகும்
வியாபாரம் நுழைந்துவிடின்
அத்தனையும் தாழ்வாகும்
நாளாந்தம் வினோதங்கள்
நடந்தபடி இருக்கிறது
எண்ணில்லா பலவெம்மை
ஏங்கிவிட வைக்கிறது
வாங்கிடத் துடிக்கின்றோம்
வந்தவுடன் மகிழ்கின்றோம்
மகிழ்வுக்குப் பின்னாலே
மறைமாயம் தெரிவதில்லை
விபரீதம் எமையறியா
வீட்டுக்குள் நுழைகிறது
நாடுமே நம்பி
நலமிழக்கத் தொடங்கிறது
விஞ்ஞானம் மோலோங்கி
தன்னாட்சி புரிகிறது
என்னாகும் என்னாகும்
எனுமேக்கம் விரிகிறது
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா