இலக்கியச்சோலை

விளம்பரமே வாழ்க்கை!…. சங்கர சுப்பிரமணியன்.

 

நல்ல மாடு சந்தையில் விலைபோகும் என்றொரு பழமொழி. மாட்டை வாங்குபவன்தான் மாட்டின் வாய்க்குள் விரலைவிட்டு பல்லைப்பிடித்துப் பார்த்து மாட்டின் தரத்தை அறிவான். மாட்டை விற்பவன் மாட்டின் வாயைத் திறந்து அதன் பல்லைக்காட்ட மாட்டான். அதேமாதுரி சந்தையில் காய்கறிகளை கூறுகட்டி விற்கும் வயோதிகப் பெண்மணி கூட கூவிக்கூவி விற்கமாட்டாள்.அவள் காய்கறிகளின் தரம் என்னவென்று அவளுக்கு புரியும். அந்த தன்னம்பிக்கைதான் அவளை கூவி விற்கும் அவசியத்தை அவளுக்குத் தரவில்லை. ஆனால் இப்போது வியாபாரம் எல்லா இடங்களிலும் நுழைந்நு விட்டது. திருமணம் கூட வியாபாரம் ஆகிவிட்டது. முன்பெல்லாம் பெண்வீட்டுக்கு பெண்ணைப்பற்றி கேள்விப்பட்டு மாப்பிள்ளை வீட்டார் தேடிச் சென்று பெண் கேட்பார்கள். இப்போது பெண்ணையும் ஆணையும் சந்தைப்படுத்தும் வியாபாரம் வந்துவிட்டது.பண்டைய காலங்களில் அரச குடும்பங்களல் மட்டுமே சுயம்வரம் நடக்கும். ஏலம்விட தேதி அறிவிப்பதுபோல் அரசன் தன்மகளின் திருமணத்துக்காக சுயம்வரத்தை அறிவிப்பான். ஏலம் எடுக்க வருபவர்களைப்போல பலநாட்டு அரசர்கள் பங்கேற்பார்கள். ஏலத்தில் தனக்கு வேண்டியது கிடைக்கவேண்டுமானால் அதிகப் பணம் இருக்கவேண்டும். சுயம்வரத்தில் இளவரசியை மணக்க உடல்வலிமை மற்றும் புகழ் போன்ற மூலதானம் இருக்க வேண்டும். அது ஒருமாதிரியான விளம்பரம்.அது முடியாட்சியில் என்றால் மக்களாட்சியில் எல்லோரும் இந்நட்டு மன்னர்கள். அதிலும் ஆணும் பெண்ணும் சமம். அதனால் ஆண் பெண் இருவருக்கும் சுயம்வரம் நடக்கிறது. சுயம்வரம் நடக்கும் அரண்மனையாக திருமண தகவல் மையங்கள். சீதையின் சுயம்வரத்தில் வில்தான் தூண்டில். தூண்டில் போடத்தெரிந்த ராமன் சீதையை அடைந்தான். ஒரே ஒரு வாய்ப்பாக வில்மட்டுமே இருந்தது.இன்றைய இராமன்களுக்கும் சீதைகளுக்கும் ஏகப்பட்ட வாய்ப்புக்கள். ஒரே வில் என்றில்லாமல் சீதைகளும் ராமன் வில்லை வளைக்க வேண்டுமே என்று கவலயடைய வேண்டியதில்லை. ராமன்களுக்கும் வில்லைத்தான் ஒடிக்கவேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை. எந்த ஆயுதத்தை வைத்து எந்தப் பெண்ணை மணக்கவேண்டும் என்று ஆண்களும் எந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற பெண்களும் தீர்மானிக்கிறார்கள்.நவீன ராமன்களுக்கும் சீதைகளுக்கும் ஏகப்பட்ட வில்களும் தன் வலிமைக்கேற்ப வளைக்கக் கூடிய வில்களாக படிப்பும் தொழிலும் துணைநிற்கின்றன. இப்போது சங்ககாலமும் நிகழ்காலமும் சங்கமிக்கிறது. சங்ககாலம் போல் காந்தர்வ திருமணமும்நடக்கிறது. நிகழ்காலத்தில் பாரம்பரியத்தை மறக்காதபடி திருமண மையங்களின் உதவியால் சுயம்வரமும் நடக்கிறது. வேண்டமென்றால் வேட்டியும் புடவையும்கட்டிக்கொள்ளலாம் இல்லையென்றால் கோட்டும் சூட்டும் போட்டுக் கொள்ளலாம்.இப்படி நான் சொல்லவில்லை. கூடுவாஞ்சேரியிலும் கும்மிடிப்பூண்டியிலும் வசிக்கும் என் நண்பர்களே சொன்னார்கள். இந்த விளம்பரக் கூத்து இப்போது விஸ்வரூபம் எடுத்தாடுகிறது. அதன் திவ்விய தரிசனத்தை கண்குளிர கடந்த முறை இந்தியா சென்றபோது கண்டேன். தூத்துக்குடி விமானநிலையத்தில் இறங்கி மகிழுந்தில் திருநெல்வேலி சென்று கொண்டிருதந்தேன். நெல்லையை நெருங்கியதும் பெரிய விளம்பரப்பலகை என் கண்ணில் பட்டது.அதில் முறுக்கு மீசையுடன் ஆஜானுபாகுவானாக ஒருவரின் படம். தென்காசி தென்னவன் என்பது அவர் பெயர். 75வது பிறந்தநாள் விழா. அவரே அதை பெரிதாக இல்லாவிட்டாலும் அவரது அபிமானிகள் விடுவதாக இல்லை. அவரை யாரென்று தெரியாதவர்களும் திரும்பிப் பார்க்க வேண்டுமாம். எல்லாமே விளம்பர யுக்தி. முன்பெல்லாம் பொருள்களுக்குத்தான் விளம்பரம்.இப்போது நல்ல முன்னேற்றம். பிறந்தநாள் விழா திருமணவிழா என்று களைகட்டுகிறது. அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் அபிமானிகள் விடுவதாயில்லை. அவர்களை வைத்து இவர்களுக்கு விளம்பரம் இவர்களை வைத்து அவர்களுக்கு விளம்பரம். இப்போது இன்ஸ்டாகிராமில் ஒரு படம் எடுத்துப்போட்டால். அவர்களுக்கு ஐந்தாயிரம் லைக்ஸ் வந்துவிட்டால் படம் போட்டவர்கள் சுமாராக இருந்தாலும் பேரழகுதான்.இப்படி அழகைத்தீர்மானிப்பது லைக்ஸ்தான். உண்மையிலேயே சுமாராக இருப்பவர்களுக்கு நூறு லைக்ஸ்கூட வராவிட்டால் அவர் நன்றாக இல்லை என்று பதிவாகிவிடுகிறது. இதே பாதிப்பு படைப்புகளுக்கும் வந்து விட்டது. சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இருப்பவர்களின் படைப்புகள் ஃபேஸ்புக் போன்றவற்றின் ஈர்ப்பினால் பிரபலமடைகிறது. அதுவே சமூக வளைத்தளங்களில் பெரிதாக ஈடுபாடற்றவர்களின் படைப்புக்கள் பிரபலமடைவதில்லை.ஒரு படைப்பு எப்படியெல்லாம் விளம்பரப் படுத்தப் படுகிறது என்பதற்கு பல யுக்திகள் உள்ளன. படைப்பை தொடர்ந்து விளம்பரப் படுத்திக்கொண்டே இருப்பது. தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்வது. சமூக ஊடகங்களில் அறிமுகப்படுத்துவது என்றெல்லாம் பல வழிமுறைகளை கையாளும் போது அதற்கேற்ற பலன் கிடப்பதை தவிர்க்க இயலாது.சான்றாக ஒரு பட்டி மன்றத்தை ஒரு அரங்கில் வைத்து நடத்தினால் அந்த அரங்கம் நிறையக்கூடிய பார்வையாளர்கள்மட்டுமே பார்க்கக் கூடியதாக இருக்கும். அதையே தொலைக்காட்சி ஒன்றின் மூலம் நடத்தினால் அது பெரிய வீச்சைப் பெறும். இதை கணக்கில் வைத்து அரங்கில் நடைபெறும் விளம்பரமாகாத பட்டிமன்ற நிகழ்ச்சியின் தரத்தை நிர்ணயிக்க முடியாதல்லவா? எனவே விளம்பரத்தை வைத்து ஒரு நிகழ்ச்சியின் தரத்தை கூறமுடியாது போனாலும் அதை பார்ப்பவர்களால் அதன் தரத்தை உணர இயலும்.விளம்பரமே வாழ்க்கை என்றாலும் விளம்பரத்தால் எதன் தரத்தையும் உயர்த்த விடமுடியாது. உங்கள் பற்பசையில் உப்பு இருக்கிறதா என்ற விளம்பரத்தின் மூலம் பற்பசை விற்பனையை வேண்டுமானால் கூட்டலாம். ஆனால் அதன் தரத்தை அந்தவிளம்பரத்தால் மாற்றிவிட முடியாது.-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.