கிளிநொச்சி இலக்கியச் சந்திப்பில் மூன்று எழுத்தாளர்களுக்கு பரிசும் சான்றிதழும்!
அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும், விக்ரோரியா மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட அமைப்பான அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், இங்கே வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருகிறது.
கடந்த 2019, 2020 ஆம் ஆண்டுகளில் தெரிவான நூல்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் ஏற்கனவே வழங்கியிருக்கும் இச்சங்கம், கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி, இந்தப்போட்டிக்கு கிடைக்கப்பெற்ற நூல்களையும் நடுவர் குழுவின் மூலம் பரிசீலனை செய்து இம்முறையும் பணப்பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கியது.
இலங்கை வந்திருந்த சங்கத்தின் நடப்பாண்டு செயலாளர் டொக்டர் நடேசன் தலைமையில் , சங்கத்தின் உறுப்பினர் திரு. எஸ். கிருஷ்ணமூர்த்தியின் வரவேற்புரையுடன் இந்நிகழ்வு கிளிநொச்சி பழைய ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைந்த சமூக மண்டபத்தில் கடந்த 25 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
இம்முறை சிறுகதை, கவிதை, கட்டுரை ஆகிய துறைகளில் மூன்று நூல்கள் போட்டியில் பரிசுக்காக தெரிவுசெய்யப்பட்டிருந்தன.
நாவல், மொழிபெயர்ப்பு துறைகளில் இம்முறை எந்த நூலும் பரிசுக்குரியதாக தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
வேப்பமரமும் பவளம் ஆச்சியும் என்ற சிறுகதை தொகுதியை எழுதிய திரு. விவேகானந்தனூர் சதீஸ் சார்பில் பரிசுத்தொகை ஐம்பதினாயிரம் ரூபாவையும் சான்றிதழையும், அவரது தாயார் திருமதி செல்லையா பவளவள்ளி பெற்றுக்கொண்டார்.
எழுத்தாளர் விவேகானந்தனூர் சதீஸ் கடந்த பலவருடங்களாக அரசியல் கைதியாக சிறையிலிருந்து பொது மன்னிப்பின் கீழ் தற்போது விடுதலையாகியிருப்பவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனினும் சில சட்ட விதிமுறைகளினால், அவரது வருகை தாமதமடைந்தமையினால், அவரின் தாயார் பெற்றுக்கொண்டார். இவருக்கான பரிசு மறைந்த மூத்த எழுத்தாளர் தெணியான் அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டது.
கவிதைத் துறையில் எழுத்தாளர் சி. கருணாகரன் தனது கடவுள் என்பது துரோகியாயிருத்தல் என்ற நூலுக்காக ஐம்பதினாயிரம் ரூபாவையும் சான்றிதழையும் பெற்றுக்கொண்டார். இந்தப்பரிசு அமரர் திலகவதி சிவகுருநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டது.
கட்டுரைப் பிரிவில் மன்னார் மாதோட்டப் புலவர்கள் – கலைஞர்கள் என்ற நூலை எழுதிய அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார் ஐம்பதினாயிரம் ரூபாவையும் சான்றிதழையும் பெற்றுக்கொண்டார்.
குறிப்பிட்ட பரிசுத்தொகைகளை அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்கள் திரு. லெ. முருகபூபதி ( எழுத்தாளர் ( அமரர் ) தெணியான் நினைவுப் பரிசு ) திரு. ரோய் லெம்பேட் ( கலைஞர் அமரர் தொபியாஸ் மக்சிமஸ் லெம்பேட் நினைவுப் பரிசு. ) எழுத்தாளர் திருமதி. சகுந்தலா கணநாதன் ( அமரர் திலகவதி சிவகுருநாதன் நினைவுப்பரிசு ) ஆகியோர் வழங்கியிருந்தனர்.
—0–