மகாஜனக் கல்லூரியில் என்னைக் கவர்ந்த ஆசிரியர்களில் ஒருவர் திரு.சிவபாஸ்கரன் அவர்கள்!…. ஏலையா க.முருகதாசன்.
சிலரைப் பற்றிய ஞாபகங்கள் அவர்கள் மறைந்தாலும் அவர்களைப் பற்றிய நினைவுகள் எமது மனதில் பசுமரத்தாணி போல பதிந்திருக்கும்.
அதற்குக் காரணம் அவர்களின் நாளாந்த வாழ்க்கையில் அவர்கள் நடந்து கொள்கின்ற நல்ல பாங்குகள் அவர்களை தனித்துவமான மனிதர்களாகக் காட்டும்.
மகாஜனாக் கல்லூரியில் நான் படித்த காலத்தில்,எனக்குப் படிப்பித்த ஆசிரியர்களின் தனித்துவத் தன்மைகள்,அவர்கள் வகுப்புகளுக்கு வந்தவுடன் மாணவ மாணவிகளை ஒவ்வொருவராக நோட்டம் விட்டு அறிவுரைகளைச் சொல்லுதல் போன்றவை அன்று எமக்குப் பெரிதாக தோன்றாவிடினும்,அவ்வறிவுரைகள்,அவர்கள் எம்மை ஒழுங்குபடுத்ததியமை போன்றவை பின்னாட்களில் எம்மை அவை கம்பீரமாக்கியிருக்கின்றன.
உடைகளைச் செம்மையாக ஒழுங்காக அணிய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தவர் பண்டா மாஸ்ரர் என்று அன்பாக அழைக்கப்படும் திரு.சிவபாஸ்கரன் அவர்கள்.
இவர் காங்கேசன்துறை மாங்கொல்லை என்ற குறிச்சியிலிருந்து வந்தவர்;. காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையின் முன்பக்கமாக கிழக்கிலிருந்து மேற்குப் பக்கமாக வடக்கில் கட்டப்பட்டிருந்த சீமெந்துத் தொழிற்சாலையின் மதிலருகாமையோடு செல்லும் ஒழுங்கைதான் மாங்கொல்லை என்ற குறிச்சிக்கான ஒழுங்கை.
திரு.சிவபாஸ்கரன் அவர்கள் மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவன்.மகாஜனக் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் பிரிவுக்கு ஆரம்ப காலங்களில் அவரே பொறுப்பாளராகவிருந்தவர். படிக்கிற காலத்தில் மகாஜனாக் கல்லூரியின் உதைபந்தாட்ட வீரரும்கூட.சிறுவயதில் பெற்றொருடன் மலேசியாவில் இருந்தவர்.
இவர் வகுப்புக்குள் நுழைந்ததும் ஒவ்வொரு மாணவனாக,ஒழுங்கான முறையில் காற்சட்டை சேட் போட்டிருக்கிறார்களா என்பதைக் கவனிப்பார்.
எங்களுடைய காலத்தில் காற்சட்டைக்கு தெறியையும் பக்கிள்ஸ்களையும் பயன்படுத்துவோம்.
இரு கால்களுக்குமிடையில் காணப்படும் மேல்நோக்கி வரும் இடைவெளியை தெறி கொண்டு மூடிக் கொழுவுவோம்.
இது எப்படியெனில் மேல்நோக்கி வரும் இடைவெளித் துணிகளின் இரு பக்கமும் துவாரங்கள் சமனாக இருக்கும்.
வலது பக்கத்துத் துணித் துவாரத்துக்குள் தெறியை நுழைத்து இடது பக்கத்து துவாரத்துக்குள் அதனை செலுத்தி விடுவோம்.
கிட்டத்தட்ட ஒரு பக்கம் நான்கு துவாரங்கள் என்ற கணக்கில் வலது இடதாக எட்டுத் துவாரங்கள் இருக்கும்.
தெறி என்பது இரு பக்கமும் தடிப்பாக அரைவட்ட வடிவிலிருக்கும்.இன்னொன்று எமது காற்சட்டையின் இடுப்புப் பகுதியில் வலது பக்கமும் இடது பக்கமும் ஒரு பக்கம் ஐந்தந்து அங்குல நாடாக எதிரெதிராக இருக்கும்.எல்லாமாக நான்கு நாடாக்கள் இருக்கும்.
வலது பக்கத்தில் எதிர்ப்பக்க நாடாவில் பக்கிள்ஸ் வைத்து தைக்கப்பட்டிருக்கும்.பக்கிள்ஸ் வைத்துத் தைக்கப்படாத துணி நாடாவை பக்கிளஸ்;களுக்குள் விட்டு இழுத்துச் செருக வேண்டும்.
இடுப்பின் இரு பக்கமும் இப்படித்தான் செருக வேண்டும்.திரு.சிவபாஸ்கரன் மாஸ்ரர் வகுப்புக்குள் வந்தவுடன் மாணவர்கள் பக்கிள்ஸ்களைச் சரியாகப் பூட்டியிருக்கிறார்களா எனப் பார்ப்பார்.
அடுத்து, சேர்ட்டைக் காற்சட்டைக்குள் ஒழுங்காக விடப்பட்டிருக்கின்றதா எனப் பார்ப்பார்.குறிப்பாக சேர்ட்டுகளில் கீழ் முடிவின் இரு பக்கமும் ஆங்கில „வி’ வடிவில் வெட்டு இருந்தால் சேர்ட்டைக் கட்டாயமாக காற்சட்டைக்குள் விட்டே ஆக வேண்டும்.அப்படி விடாமல் வரும் மாணவர்களை அங்கேயே சேர்ட்டை காற்சட்டைக்குள் விடச் சொல்வார்.
இரு பக்கமும் வெட்டில்லாத புஸ் சேர்ட்டை காற்சட்டைக்கு வெளியே விடுவதை ஏற்றுக் கொள்வார்.
பொம்பிளைப் பிள்ளைகள் பெரும்பாலும் அழகாக பிளீட்ஸ ஒழுங்காக மடிந்திருக்குமாறு அயேன் பண்ணி போட்டுக் கொண்டு வருவார்கள்.சில வேளைகளில் மடிப்புகளில் நூல் சிறிதளவு அவிழ்ந்திருந்தாலும், அதைச் சுட்டிக் காட்டி, நாளைக்கு தைத்துக் கொண்டு வரச் சொல்லுவார்.
திரு.சிவபாஸ்கரன் அவர்களும் நீளக் காற்சட்டையை சரியாக இடுப்போடு அணிந்து கொள்வார்.(சில ஆசிரியர்கள் இடுப்புக்கு மேல் காற்சட்டையை அணிந்து கொள்வதுண்டு) வெட்டுள்ள சேர்ட்டாயின் காற்சட்டடைக்குள் முன்பக்கம்,பின்பக்கம்,வலது இடது; என அனைத்துப் பக்கங்களிலும் ஒரே அளவில் இருக்கத்தக்கதாக அணிந்து கொள்வார்.எந்த ஒரு பகுதியுமே சுருங்கி இருக்காது.
புஸ் சேர்ட்டெனில் அரைக்கைச் சட்டையும், நீளக் கையெனில் சேர்;டை மடித்து முழங்கையோடு விட்டுக் கொள்வார்.பெரும்பாலும் வெளிர் நீல நிறம் அல்லது வெள்ளை நிறத்திலேயே அவர் சேர்ட் அணிந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.
நான் சில நாட்களில் வேட்டி கட்டிச் செல்கையில்: வேட்டிக்கு புஸ் சேர்ட் போட வேண்டும் வெட்டுச் சேர்ட்டெனில் வேட்டிக்குள் சேர்ட்டை வேட்டிக்குள் விட்டுக் கட்ட வேண்டும் என்று சொல்வார்..1994 ஆண்டுகளில் மகாஜனாக் கல்லூரியின பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் தலைவராக இருந்தவர்.
சில ஆசிரியர்களில் காணப்படும் தனித்துவப் பண்புகள் எம்மையறியாமலே எமக்குள் நல்விளைவுகளை ஏற்படுத்தும்.அதில் ஒருவரே எனது ஆசிரியரான மதிப்புக்குரிய திரு.சிவபாஸ்கரன் அவர்கள்.
மேலதிகத் தகவல் உதவி:திரு.கந்தையா முத்துலிங்கம்,கனடா