பவளவிழாக்காணும் பல்துறை ஆற்றல் மிக்க இலக்கியப் பேராசிரியர் க. பஞ்சாங்கம்!…. முருகபூபதி.
திறனாய்வில் புதிய எல்லைகளை கண்டடைந்தவர் !
புதுச்சேரியில் இம்மாதம் 26 ஆம் திகதி நிகழ்ச்சி !
முருகபூபதி.
கடந்துசென்ற ஐம்பது ஆண்டு காலத்தில் ( 1972 – 2022 ) இலக்கிய உலகில் நான் சந்தித்துப்பேசி உறவாடிய இலக்கியவாதிகள் எண்ணிலடங்காதவர்கள்.
அவர்களில் குறிப்பிடத்தகுந்த பலர் இந்தியாவிலிருந்தவர்கள். இருப்பவர்கள். அவர்களின் பெயர்ப்பட்டியல் சற்று நீளமானது. அவர்கள் குறித்தெல்லாம் எனது அனுபவங்களை மனப்பதிவுகளை எழுதிவந்திருக்கின்றேன்.
அதன்மூலம் இலங்கை – இந்தியா – மற்றும் தமிழர் புகலிட சேத்து இலக்கியவாதிகளிடத்தில் ஆரோக்கியமான உறவுப்பாலமும் எனக்கு அமைந்தது.
கொவிட் பெருந்தொற்று பரவியதையடுத்து, அந்தப்பாலம் மெய்நிகர் அரங்குகளின் ஊடாக மேலும் பலமடைந்திருப்பதாகக் கருதுகின்றேன்.
நேருக்கு நேர் சந்தித்துப் பேசிப்பழகியிராத பலரும் மெய்நிகர் அரங்கின் ஊடாக எனது இலக்கிய நண்பர்கள் வட்டத்தில் இணைந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர்தான் இந்திய இலக்கியப் பேராசிரியர் முனைவர் க. பஞ்சாங்கம் அவர்கள். சில தினங்களுக்கு முன்னர் பெங்களுரில் வதியும் படைப்பிலக்கியவாதி பாவண்ணனுடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது, பேராசிரியர் பஞ்சாங்கம் அவர்களுக்கு இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் பவளவிழாக்காலம் ஆரம்பமாகிறது என்ற தகவலைச் சொன்னதுடன், அவரைக்கொண்டாடுமுகமாக நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை எனக்குத் தெரிவித்தார்.
இந்தியா செல்லும்போது குறிப்பாக தமிழகத்தில், சென்னையில் – கோயம்புத்தூரில் – மதுரையில் – சாத்தூரில் படைப்பிலக்கியவாதிகளை சந்தித்துப் பேசியிருக்கின்றேன். அல்லது
அங்கிருந்து எவரேனும் நான் வதியும் அவுஸ்திரேலியா கண்டத்துக்கு வரும்போது நேருக்கு நேர் சந்தித்திருக்கின்றேன்.
2000 ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த எழுத்தாளரும், தற்போது இந்திய பாராளுமன்றத்தில் தென்சென்னை பிரதிநிதியாக அங்கம் வகிப்பவருமான சுமதி தமிழச்சி தங்கபாண்டியன், என்னுடன் உரையாடும்போதெல்லாம் அடிக்கடி உச்சரித்த பெயர்தான் பேராசிரியர் க. பஞ்சாங்கம்.
எதிர்பாராத வகையில் சமகாலத்தில் நடந்த மெய்நிகர் அரங்குகளில் இவரைப் பார்த்து பேசமுடிந்தது. அதன்பிறகு என்னுடன் மின்னஞ்சல் தொடர்பிலும் இருக்கிறார். இவ்வாறு சமீபகாலத்தில் எனக்கு நேரடி உரையாடலில் அறிமுகமானவர்கள்தான் புதுச்சேரியில் வதியும் முனைவர் அரிமளம் பத்மநாபன், பெங்களுரிலிருக்கும் எழுத்தாளர் பாவண்ணன், சென்னையிலிருக்கும் இலக்கிய ஆர்வலர் கவிஞர் உமா பாரதி ( பாரதியாரின் கொள்ளுப்பேத்தி )
“ நண்பர்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள்! “ என்பது நான் கற்றுக்கொண்ட வாழ்வியல் தத்துவம். அவ்வாறு எனது இலக்கிய நண்பர்கள் வட்டத்தில் இணைந்திருக்கும் எனது அன்பிற்கும் அபிமானத்திற்குமுரியவராகத் திகழும் பேராசிரியர் க. பஞ்சாங்கம் அவர்களுக்கு, அவர் சந்திக்கும் இந்த பவளவிழாக்காலத்தில் வாழ்த்துக்கூறுகின்றேன்.
கன்னியப்பன் பஞ்சாங்கம் என்ற இயற்பெயரைக் கொண்டிருக்கும் இவர், கவிதை, புதினம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு முதலான துறைகளில் தடம் பதித்த ஆளுமை. இதுவரையில் இந்தத் துறைகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை வரவாக்கியிருப்பவர்.
மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை பட்டமும், சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கும் இவர், முனைவர் ஔவை நடராசன் அவர்களின் மேற்பார்வையில் சிலப்பதிகாரத்திறனாய்வுகள் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டமும் பெற்றிருப்பவர்.
தமிழகத்திலும் புதுச்சேரியிலும் சில கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராக பணியாற்றியிருக்கும் பேராசிரியர் பஞ்சாங்கம், தன்னிடம் கற்கும் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்திருப்பதாக அறிய முடிகிறது.
இவர் குறித்து தமிழ் விக்கிபீடியாவின் மதிப்பீட்டை இங்கே கூறுதல் பொருத்தமானது.
“ தன்னுடைய மாணவர்களை நவீனத் திறனாய்வு முறைமைகளில் ஈடுபடுத்தியவர். “வாழ்க்கை ஒரு பெரும்புனைவு என்றும் புதிர்த்தன்மையோடு ஓடிக்கொண்டிருக்கும் பேராறு, அதன் பன்முகத்தன்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் ” என்று தொடர்ந்து கூறிவரும் பேராசிரியர் க.பஞ்சாங்கம், தனது ஆய்வுகளின் மூலம் அவற்றை நிரூபித்தார். கோட்பாட்டு ஆய்வுமுறைகளைப் பற்றிய இவரது கருத்தாக்கங்களைக் கட்டமைப்பதில் வாழ்க்கை பற்றிய இந்த அடிப்படைப் புரிதல்களே இவருக்குப் பெரிதும் உதவுகின்றன. இலக்கியம் போலவே திறனாய்வு என்பதும் ஒரு அரசியல் செயல்பாடு என்பதைப் புரிந்துகொண்டதால், படைப்பாளிகள் எப்போதுமே ஒடுக்கப்பட்டவர்கள் பக்கமே இருக்க வேண்டும், அவர்கள் சார்பாக ஒரு இலக்கியப் பிரதியை அணுகித் தெளிவுபெற முடியும் என்பதைத் தனது திறனாய்வுகளின் வழியே நிரூபித்துவருபவர். “
அமெரிக்கா வாழ் தமிழ் அன்பர்களினால் புதுமைப்பித்தன் நினைவாக வழங்கப்படும் விளக்கு விருதினை பஞ்சாங்கம் அவர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு பெற்றார். அந்த ஆண்டு இவருடன் இந்த விருதினைப்பெற்றவர் கவிஞர் கலாப்பிரியா.
தனது கல்வி சார்ந்த பணியை மேற்கொண்டபோது, கவிதை இலக்கியத்திலும் ஈடுபாடு காண்பித்து, நாவல், இலக்கியத் திறனாய்வு, பெண்ணியம், சமூக அரசியல் உட்பட அடிநிலை மக்களின் வாழ்நிலைக்கூறுகளை கோட்பாட்டு ரீதியில் ஆய்வுசெய்யும் பணிகளை நோக்கி தன்னை விரிவுபடுத்தி மேம்படுத்திக்கொண்டவர். அத்துடன் மொழிபெயர்ப்புத்துறையிலும் தீவிர கவனம் செலுத்தியவர்.
திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் விருது, பேராசிரியர் கா. சிவத்தம்பி நினைவாக கணையாழி விருது உட்பட பல இலக்கிய விருதுகளும் பெற்றிருக்கும் பேராசிரியர் பஞ்சாங்கம் அவர்களுக்கான பவளவிழா நிகழ்வு , இம்மாதம் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் நடைபெறுகிறது.
பேராசிரியர் க. பஞ்சாங்கம் அவர்களின் எழுத்துலகம் என்ற தொனிப்பொருளில் நடைபெறவிருக்கும் பவளவிழா, அவரது திறனாய்வு தொடர்பான புதிய பார்வைகளை வெளிப்படுத்தும்.
தொலைவிலிருந்து எமது மனமார்ந்த வாழ்த்துக்களை இந்த இலக்கியப் பேராசிரியருக்கு தெரிவிக்கின்றோம்.
பேராசிரியர் பஞ்சாங்கம் அவர்களின் உரைகளை பல மெய்நிகர் அரங்குகளில் கேட்டு வியந்துள்ளேன். முருகபூபதி அவர்கள் பேராசிரியர் பற்றிய விபரங்களை பொருத்தமான தருணத்தில் சிறப்பாகத் தந்துள்ளார். பேராசிரியருக்கு மனமார்ந்த பவளவிழா வாழ்த்துகள்.