இலக்கியச்சோலை
டாக்டர் விக்கினேஸ்வராவின் நினைவு நாளில் தாயக நூலகங்களுக்கு நூல்கள் அன்பளிப்பு!
மக்கள் மருத்துவர் சுன்னாகம் டாக்டர் பரமநாதன் விக்கினேஸ்வரா அவர்களின் ஞாபகார்த்த தினம் இன்றாகும். யாழ்ப்பாணத்தில் இடர் காலத்தில் பணியாற்றியமையின் வாயிலாக மக்கள் மருத்துவராக மதிக்கப்படுவார் டாக்டர் ப. விக்னேஸ்வரா.
சுமார் நாற்பது ஆண்டுகாலம் தன்னுடைய மருத்துவ சேவையின் ஊடாக மக்கள் மனங்களில் பெரும் அபிமானம் பெற்ற மருத்துவர் ப. விக்கினேஸ்வரா கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் காலமாகியிருந்தார்.
அன்னாரின் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினரின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் உள்ள பாடசாலை மற்றும் பிரதேச நூலகங்களுக்கு நூல்கள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டது.
கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியில் ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நூல்கள் இன்றைய தினம் நூல்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன. அத்துடன் கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியிலும் அன்பளிப்பு செய்யப்பட்டன. இதன் போது வலயக் கல்விப் பணிப்பாளர் திரு சிவனருள்ராஜா பாடசாலை அதிபர் திருமதி சூரியகுமாரியிடம் டாக்டர் ப. விக்கினேஸ்வரா நினைவாக நூல்களை வழங்கினார்.
இதேவேளை இறுதிப் போர் இடம்பெற்ற பிரதேசமான விசுவமடு, புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு நகர (கரைத்துறைப்பற்று) நூலகங்களுக்கான நூல்களும் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன. போரால் பாதிக்கப்பட்டு மீண்டெழுந்துள்ள குறித்த பகுதிகளில் நூலகர்கள் இந் நூல் அளன்பளிப்புக்காக நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் உள்ள நூலகங்களுக்கும் நூல்கள் அன்பளிப்பு செய்யப்படவுள்ளன. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாழைசேனை பொது நூலகம் மற்றும் வாழைசேனை பேத்தாலை பொது நூலகம் ஆகியவற்றுக்கான நூல்கள் தபாலில் இன்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டன.